Last Updated : 11 Feb, 2021 03:12 AM

 

Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM

புதுச்சேரியில் கெத்து காட்டும் திமுக: சாந்தப்படுத்தும் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியிடம், கேள்வி எழுப்பிய திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம்

புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடும் அஸ்திரத்தை கையிலெடுத்துள்ள திமுகவை சாந்தப்படுத்தும் முயற்சியை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி மேற்கொண்டு வருகிறார்.

புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ்-திமுக கூட்டணி வென்றுஆட்சியமைத்தது. தொடக்கத்தில் காங்கிரஸ்-திமுகஉறவு சீராக இருந்தாலும், திமுகவுக்கு அமைச்சர்பதவியோ, நியமன எம்எல்ஏ பதவியோ தராதது,உள்ளூர் திமுக நிர்வாகிகளை அனுசரித்து செல்லாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கூட்டணியில் மெள்ளமெள்ள விரிசல் விழத் தொடங்கியது.

அதேசமயம், புதுச்சேரியில் கருணாநிதிபெயரில் காலை சிற்றுண்டி திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், கருணாநிதிக்கு முழு உருவ வெண்கலச் சிலை, பல்கலைக் கழகத்தில் கருணாநிதி பெயரில் தனி இருக்கை போன்றவை அமைக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி அறிவித்திருந்தாலும், அவை எதுவும் திமுகவினரை திருப்தியடையச் செய்யவில்லை.

இதனால், மத்திய அரசு, துணை நிலை ஆளுநருக்கு எதிராக காங்கிரஸ் நடத்திய போராட்டங்களில் பிரதான கூட்டணிக் கட்சியான திமுக பங்கேற்கவில்லை. டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியில் காங்கிரஸும், திமுகவும் தனித்தனியாகவே போராட்டம் நடத்தின.

இந்நிலையில், புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், தனித்துப் போட்டி என்ற அஸ்திரத்தை புதுச்சேரி திமுக கையிலெடுக்கத் தொடங்கியது. கட்சியின் மாநில அமைப்பாளர்கள் 3 பேரும் அதற்கான முன்னெடுப்புகளையும் மேற்கொண்டனர்.

அண்மையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய, அக்கட்சியின் புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் ஜெகத்ரட்சகன், ‘‘புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் மேடையிலேயே தற்கொலை செய்து கொள்வேன்’’ என பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பின், திமுக-காங்கிரஸ் கூட்டணி தொடர்வதாக வெளியில் சொல்லப்பட்டாலும் கூட, இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வரும் பிணக்குகளுக்கு இதுவரை முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை.

இதனிடையே, காரைக்காலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மேற்கு புறவழிச் சாலைக்கு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெயர் சூட்டப்படும் என முதல்வர் நாராயணசாமி ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், கடந்த பிப்.4-ம் தேதி இந்த சாலை திறப்பு விழா நடைபெற்றது. ஆனால், அந்த சாலைக்கு கருணாநிதியின் பெயர் சூட்டப்படாததால், விழா நடைபெறும் இடத்துக்கு வந்த திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஏ.எம்.எச்.நாஜிம் தலைமையிலான திமுகவினர் இது குறித்து முதல்வரிடம் கடுமையாக கேள்விகள் எழுப்பினர். அதற்கு, ‘‘இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டுள்ளேன். இந்த சாலைக்கு நிச்சயம் கருணாநிதியின் பெயர் வைப்பதுடன், பெயர்ப் பலகையும் அமைக்கப்படும்’’ என அவர்களிடம் உறுதிபட கூறினார்.

அதன்படி, அடுத்த சில நாட்களில் அந்தசாலையில் ‘‘டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி சாலை’’ எனப் பெயர்ப் பலகை வைக்கப்பட்டது. மேலும், காரைக்காலில் முக்கிய அரசு நிகழ்ச்சிகள்எதுவும் இல்லாத நிலையில், இந்த பெயர்ப்பலகையை திறந்து வைப்பதற்காகவே கடந்த 8-ம் தேதி காரைக்காலுக்கு முதல்வர் நாராயணசாமி வந்தார். இதன் மூலம் சிறு சிறு விஷயங்களிலும் கூட திமுகவை சாந்தப்படுத்தி கூட்டணியை தக்க வைத்துக்கொள்ள முதல்வர் நாராயணசாமி முயற்சித்து வருவதாக கூட்டணி கட்சியினரே தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து காரைக்கால் திமுக அமைப்பாளர் ஏ.எம்.எச்.நாஜிம் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால் என்ன நன்மைகள், எந்தெந்தக் கட்சிகளுடன் கூட்டணி என்பது குறித்து பல்வேறு கருத்துக்களையும், எண்ணங்களையும் தலைமையிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவே இறுதியானது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x