Published : 11 Feb 2021 03:12 AM
Last Updated : 11 Feb 2021 03:12 AM
தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை இனி ஒருபோதும் உடைக்க முடியாது என கிருஷ்ணகிரியில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரச்சாரத்தில் அவர் பேசியதாவது: ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக சந்திக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தலில், திமுக வெற்றிபெற வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு சதி செய்து அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுகவில் வாரிசு அரசியலை உருவாக்கி உள்ளனர். இந்ததேர்தலில் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்.
அதிமுக அரசு ஏழை, எளிய மக்களை முன்னேற்றம் செய்யக்கூடிய அரசாக உள்ளது. சில பேர் சதி செய்து அதிமுகவை கைப்பற்ற முயற்சி செய்து வருகின்றனர். எச்சரிக்கையோடு இருந்து ஒவ்வொரு தொண்டனும், அதிமுகவை கட்டிக் காக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா கண்ட கனவை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும்.
2017-ம் ஆண்டு நான் முதல்வராக பொறுப்பேற்றபோது, 18 சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பிரித்து இந்த ஆட்சியைக் கலைக்க முயற்சித்தனர். கட்சியை உடைக்க முயற்சி செய்தனர். அதனை ஒற்றுமையாக இருந்து முறியடித்தோம். டிடிவி தினகரன் 4 ஆண்டுகளாக அலைந்து அலைந்து பார்த்தார்.
அவர் கட்சியில் 10 ஆண்டுகளாக கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது சதிவலை பின்னிக் கொண்டு இருக்கிறார். இதனை ஒருபோதும் அதிமுகவால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தொண்டர்களால், உழைப்பால் உயர்ந்த இக்கட்சி, ஒரு குடும்பம் ஆள்வதற்கு எப்போதும் தலைவணங்காது.
அதிமுகவைச் சேர்ந்த தொண்டன் தான் இனிமேல் முதல்வராக ஆக முடியும். டிடிவி தினகரன் எத்தனை அவதாரங்கள் எடுத்தாலும் அதிமுகவை இனி ஒருபோதும் உடைக்க முடியாது. உங்கள் கனவும் பலிக்காது. மீண்டும் ஜெயலலிதாவின் அரசு அமைப்போம். ஜெயலலிதா சட்டப்பேரவையில் பேசும்போது, 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் என்றார். இதற்காக ஒவ்வொரு அதிமுக தொண்டனும் சபதம் ஏற்கவேண்டும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
இதேபோன்று, திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரி அருகே பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: 2011-ல் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு செய்து வருகிறது. இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் திருப்பத்தூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதை நிறைவேற்றும் வகையில், கடந்த 2019-ம் ஆண்டு திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
மக்கள் தீர்ப்பளிக்கட்டும்
இது மட்டுமின்றி ஊத்தங்கரை முதல்வாணியம்பாடி கூட்டுச்சாலை வரை ரூ.299 கோடி மதிப்பில் 4 வழிச்சாலைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பத்தூர் நகர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகளும் தொடங்கியுள்ளன. பிற அரசு அலுவலகங்களும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போன்ற எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு செய்து வருகிறது.
இது தெரியாமல் திமுக தலைவர் ஸ்டாலின் தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு என்ன செய்தது என ஸ்டாலின் கேட்கிறார். நாங்கள் சொன்னதை செய்ததால் தான் மக்கள் முன்பு நெஞ்சை நிமர்த்தி செய்த திட்டங்களை கூறி வருகிறோம். ஆனால், வாயை திறந்தாலே பொய்யான தகவல்களை ஸ்டாலின் பரப்பி வருகிறார். இந்திய துணை கண்டத்திலேயே பொய் பேசுவதற்காக ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும் என்றால் அது ஸ்டாலினுக்கு வழங்கலாம்.
திமுக ஆட்சிக்காலத்தில்தான் பேரறிவாளன் உட்பட 7 பேரின் நீதிமன்ற தீர்ப்பைஅமல்படுத்தலாம் என தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, தற்போது 10 ஆண்டுகளாக திமுக 7 பேரின் விடுதலைக்காக குரல் கொடுத்து வருவதாக பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, 6 மாதங்கள் தாங்காது என ஸ்டாலின் கூறினார். ஆனால், 4 ஆண்டுகள் முடிந்து 5-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொன்னதைப்போல இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தில் அதிமுக அரசு தான் நடைபெறும். உண்மையை பேசுவது அதிமுகவா, திமுகவா என மக்களே தீர்ப்பளிக்கப்பட்டும்.
அடுத்த 10 நாட்களில் பொதுமக்களின் குறைகளை தீர்க்க 1100 என்ற இலவச தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் பொதுமக்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது குறைகளை தெரிவித்தால் உடனடியாக தீர்க்கப்படும். தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகளை பாராட்டி மத்திய அரசு 143 விருதுகளை வழங்கியுள்ளது என்றார்.
தொழுகைக்காக பிரச்சாரம் நிறுத்தம்
முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அங்குள்ள மசூதியில் தொழுகை நடைபெற்றது. ஒலிபெருக்கியில் தொழுகை நடைபெறுவதை கேட்ட முதல்வர் பழனிசாமி தனது பிரச்சாரத்தை 3 நிமிடங்களுக்கு நிறுத்தினார். பொதுமக்களிடம் சற்று நேரம் அமைதியாக இருக்குமாறு சைகையில் கூறிய முதல்வர் தொழுகை முடிந்தவுடன் மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கினார். இதைக்கண்ட மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT