Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்க மொத்த விற்பனை பண்டக சாலையில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக மின்சாரத்துறை அமைச்சர் பி. தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் மின்தட்டுப்பாடு கிடையாது. விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பது குறித்து 4 மாவட்ட விவசாயிகளிடம் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
விருதுநகர் - கோவை பாதையில் உயர் மின்கோபுரம் அமைப்பது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால் அதை நிறுத்தி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அது ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது. மற்றொரு கோரிக்கையான மத்திய அரசு அளிப்பது போன்ற இழப்பீடு மாநிலத்திலும் வழங்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுள்ளனர்.
இதுவரை வேறு எந்த மாநிலமும் இதுபோன்ற நஷ்டஈடு வழங்கவில்லை. இருந்தபோதிலும் அவர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழக முதல்வரிடம் கலந்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மேட்டூர், வட சென்னை, தூத்துக்குடி போன்ற மின் உற்பத்தி நிலையங்களில் முன்பு கரோனா காலத்தில் தேவைக்கு மட்டும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. தற்போது முழுமையாக மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் முன்பு, துணை முதலமைச்சர் ஆஜராகாமல் உள்ளார் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது தொடர்பாக முதல்வர் விளக்கம் அளித்துவிட்டார். இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே விஷம பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT