Published : 21 Nov 2015 03:32 PM
Last Updated : 21 Nov 2015 03:32 PM
கோவை வெள்ளலூர் மாநகராட்சி குப்பைக்கிடங்கைச் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீரின் ரசாயனத்தன்மை நாளுக்கு நாள் அதிகரித்து முற்றிலுமாக மஞ்சள் நிறத்துக்கு வந்துள்ளது. மேலும் வாழ்வாதாரத் தேவை அனைத்திலும் நச்சுத்தன்மை பரவி வருவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கோவை வெள்ளலூரில் உள்ள மாநகராட்சியின் குப்பைக்கிடங்கில் தினசரி சுமார் 800 டன் குப்பை கொட்டப்படுகிறது. தரம்பிரித்து, மறுசுழற்சி செய்து குப்பைகளை அழிக்க, மட்கச் செய்ய பல்வேறு பணிகள் இங்கு நடைபெற்று வருகின்றன. ஆனால் குப்பைக்கிடங்கில் சரியான முறையில் தரம்பிரிப்பு, அழிப்பு பணிகள் நடப்பதில்லை என்பது சுற்றியுள்ள மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. இதனால் இயற்கைச் சூழல்கள் பாதிப்படைந்து, உடல்நலக் கோளாறுகள் அதிகரித்து, கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயல்புநிலை பாதிப்படைந்து வருகிறது.
குப்பைக்கிடங்கினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் முக்கியமானது நிலத்தடி நீர் நிறம் மாறியது. கடந்த சில மாதங்கள் வரை, கலங்கிய நிலையில் காணப்பட்ட நிலத்தடி நீர், தற்போது முழுவதுமாக மஞ்சள் நிறத்துக்கு மாறியுள்ளது. இதை தொட்டிகளில் தேக்கி வைக்கும்போது விரைவில் அதிகளவில் உப்பு படிந்து விடுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் வெள்ளலூர், கோணவாய்க்கால்பாளையம் மக்கள் நிலத்தடி நீரை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர்.
‘ஆண்டுக்கணக்கில் குப்பைகளை நிலத்தில் கொட்டி வைப்பதால் ஏற்பட்ட ரசாயன கலப்பு, நிலத்தடி நீரை முற்றிலுமாக பாதித்துள்ளது. அரிப்பு போன்ற தோல்நோய்கள் ஏற்படுவதால், ஆழ்துளைக்கிணற்றில் இருந்து வரும் நீரை தொடுவது கூட இல்லை; காசு கொடுத்தே லாரியில் தண்ணீர் வாங்கி பயன்படுத்துகிறோம்’ என்கின்றனர் குடியிருப்புவாசிகள்.
எப்படி வசிக்க முடியும்?
குப்பைக்கிடங்கு எதிர்ப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் டேனியல் ஏசுதாஸ் கூறும்போது, ‘குப்பைக்கிடங்கை ஒட்டி வெள்ளலூர் பேரூராட்சியின் 10, 15 மற்றும் 1 ஆகிய வார்டுகள், மாநகராட்சியின் 99-வது வார்டு உள்ளது. இதில் முதலியார் வீதி, வள்ளுவர் வீதி, ராமசாமி நகர், மகாலிங்கபுரம், ஈஸ்வர் நகர், அன்புநகர், ராம்நகர், கோணவாய்க்கால்பாளையம், வெள்ளலூர் என தொடர்ச்சியாக குடியிருப்புப் பகுதிகள் இருக்கின்றன. குப்பைக்கிடங்கின் சுகாதாரமற்ற தன்மையால் இங்குள்ள மக்களுக்கு பல்வேறு விதமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. சுத்தமான காற்று கிடையாது. துர்நாற்றமில்லாத காற்றை சுவாசிப்பதே அபூர்வம். சாதாரண நாட்களில் உணவுப் பண்டங்கள் முழுவதுமே ஈக்களால்தான் நிரம்பியிருக்கும்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் விநியோகிக்கப்படும் நீர் பயன்படுத்த தகுதியற்றது என ஆய்வில் தெரியவந்தது.
இதனால் மழை நீர், நீர்நிலைகளில் உள்ள நீர் அனைத்துமே பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது. வாழ்வாதாரப் பிரச்சினை என்பதால், பலரும் இங்கிருந்து வீட்டைக் காலி செய்து வெளியேறி வருகின்றனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் யாரும் குடியேறாமல் காலியாக பூட்டி வைத்துள்ளனர். குப்பைக் கிடங்கு பிரச்சினையில் நிரந்தரத் தீர்வு ஏற்படாதவரை இந்த நிலைதான் தொடரும்’ என்றார்.
சந்திரசேகர் என்பவர் கூறும்போது, ‘நிலத்தடி நீர் மாசுபாடு ஒருபுறமிருக்க, கொசு, ஈக்கள் தொல்லை வருடம் முழுவதும் பெரும் பிரச்சினையாக உள்ளது. சுவாசக் குழாயில் நோய்தொற்று பிரச்சினைகளாலும், மர்மக் காய்ச்சலாலும் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர்’ என்றார்.
நடவடிக்கை
கோவை மாநகராட்சி ஆணையாளர் விஜயகார்த்திகேயன் கூறும்போது, ‘குப்பைக்கிடங்கு பகுதியில் நிலத்தடி நீர் மாசுபாடு புகார் இருப்பது உண்மை. மேலும் இந்த பாதிப்பு பரவாமல் இருக்க முழு அளவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குப்பைகளை நேரடியாக நிலத்தில் கொட்டுவதே நிலத்தடி நீர் பாதிப்புக்கு காரணம். இந்த பாதிப்பு உடனடியாக வந்துவிடாது. பல வருடங்களாக குவித்து வைக்கப்பட்ட குப்பைகளே இதற்கு காரணம். அதை உடனடியாக சரி செய்ய முடியாது. எனவே மேலும் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உயிரி உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிப்பு என பல வகைகளில் சூழலுக்கு நன்மை தரும் திட்டங்களை தற்போது தொடங்கியுள்ளோம். கொசு, ஈ ஒழிக்கவும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் குப்பைக்கிடங்கு ஒட்டியுள்ள பகுதியில் கொசு, ஈக்களை ஒழிக்க பேட்டரி வாகனங்கள் செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் பாதிப்பை சரி செய்ய நவீன திட்டங்கள் இருந்தால் அதை ஆலோசித்து செயல்படுத்தப்படும்’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT