Published : 10 Feb 2021 08:07 PM
Last Updated : 10 Feb 2021 08:07 PM
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் சார்பாக மீன் வளத்தை பெருக்குவதற்காகவும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும் 8 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் ராமேசுவரம் அருகே மண்டபம் முனைக்காடு கடலில் விடப்பட்டன.
ராமேசுவரம் அருகே மரைக்காயர் பட்டிணத்தில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவனம், செயல்பட்டுவருகிறது. இங்கு மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் வாழும் உயிரினங்கள் குறித்தும், அவற்றின் வாழ்வியல் சூழல் மற்றும் கடலில் அவ்வப்போது ஏற்படும் மாசு குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், பல்வேறு மீன் இனங்களின் குஞ்சுகள் பொரிப்பகமும் இங்கு இயங்கிவருகிறது. இங்கு உருவாக்கப்படும் மீன்கள் மற்றும் இறால் மீன் குஞ்சுகளை அவ்வப்போது கடல் பகுதியில் விடுவதன் மூலம், இப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருகின்றனர்.
செவ்வாய்கிழமை மாலை ராமேசுவரம் அருகே மண்டபம் முனைக்காடு கடற்பகுதியில் இறால் குஞ்சுகள் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சி குறித்து மூத்த ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடற்பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருகிறது.
இதனால் இறால் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்து கடலில் விட்டு இறால் வளத்தை பெருக்கும் முயற்சியில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் ஈடுபட்டு வருகிறது.
இதனால் இறால் வளத்தை தக்கவைத்து கொள்ளவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாது. இதன் மூலம் மீனவர்களுக்குத் தேவையான இறால்களை வளர்ந்ததும் பிடித்துக் கொள்ள முடியும்.
2020-2021 ஆண்டுகளில் ஆண்டுகளில் 27 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன. செவ்வாய்கிழமை 8 லட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டுள்ளது. இவ்வாறு கடலில் விடப்படும் இறால்மீன் குஞ்சுகள் 5 மாதங்களில் உரிய வளர்ச்சியைப் பெறும். இவற்றை மீனவர்கள் பிடித்து பயன்பெறலாம்'' என்றார்.
இதில், மத்திய கடல்மீன் ஆராய்ச்சி நிறுவன ஆராய்ச்சியாளர்கள் சங்கர், ஜான்சன் ஊழியர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT