Published : 10 Feb 2021 07:34 PM
Last Updated : 10 Feb 2021 07:34 PM
அதிமுகவால் ஒருபோதும் தினகரனை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக முதல்வர் பழனிசாமி 5-ம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். இதில், 3-ம் நாளான இன்று (பிப்.10) கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் ஆற்றிய உரை:
''ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நடைபெறும் முதல் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் இது. திமுக தலைவர் ஸ்டாலின் தில்லுமுல்லு செய்து, திட்டமிட்டு சதி செய்து வெற்றி பெறலாம் என்று அரசின் மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுக்களை சுமத்தி, அவதூறு பிரச்சாரத்தைப் பரப்பி வருகிறார். திமுகவினர் வாரிசு அரசியலை உருவாக்குகிறார்கள். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் நின்று வெற்றி பெற்றார். இந்த மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று, மருத்துவக் கல்லூரி கொடுத்துள்ளோம். இந்தியாவில் எத்தனையோ தலைவர்கள் வாழ்ந்து மறைந்திருந்தாலும் மக்களின்
மனதில் தெய்வமாக நிலைபெற்று நிற்பவர்கள் இருபெரும் தலைவர்களான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாதான். சிலர் வேண்டுமென்றே திட்டமிட்டு சதிசெய்து அதிமுகவைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். ஒவ்வொரு தொண்டனும் எச்சரிக்கையோடு இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டிக் காக்க வேண்டும். இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை ஒவ்வொரு தொண்டனும் நிறைவேற்ற வேண்டும்.
நான் முதல்வராகப் பொறுப்பேற்ற போது கட்சி, ஆட்சி இரண்டையும் உடைக்க முயற்சித்தபோது, அரசு ஒற்றுமையாக இருந்து அதனை முறியடித்தது. மீண்டும் அவர் புறப்பட்டு விட்டார், அவர் நான்காண்டு காலமாக அலைந்து அலைந்து பார்த்தார், யாரென்று உங்களுக்கே தெரியும், அது டி.டி.வி.தினகரன். அவர் கட்சியிலே பத்தாண்டு காலம் கிடையாது. ஜெயலலிதா இருந்தபோது,அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்பட்டவர். ஏதோ தந்திரமாக கட்சியில் நுழைந்து கொண்டார். எவ்வளவோ சதி வலைகளைப் பின்னிக் கொண்டிருந்தார்.
அதிமுகவால் ஒருபோதும் அவரை ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதிமுக, தொண்டர்கள் நிறைந்த கட்சி, உழைப்பால் உயர்ந்த கட்சி. ஒரு குடும்பம் ஆள்வதற்கு எப்போதும் இந்தக் கட்சி தலை வணங்காது, தலை வணங்காது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டி.டி.வி.தினகரன் எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை ஒருபோதும் நெருங்க முடியாது, உங்கள் கனவு பலிக்காது. மீண்டும் ஜெயலலிதாவின் அரசை அமைப்போம், அமைப்போம், அமைப்போம். எனக்குப் பின்னாலும் அதிமுக 100 ஆண்டு காலம் ஆட்சி அதிகாரத்தில் இருக்குமென்று ஜெயலலிதா தெரிவித்தார். இன்னும் நூறாண்டு காலம் ஆட்சி அதிகாரம் தொடர ஒவ்வொரு தொண்டனும் சபதம் ஏற்க வேண்டும், பாடுபட வேண்டும், அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வேண்டும். வருகின்ற தேர்தலில் அதிமுக வேட்பாளரை அறுதிப் பெரும்பான்மையோடு வெற்றி பெறச் செய்து ஜெயலலிதாவின் அரசு அமையப் பாடுபட வேண்டும்.
சுமார் 328 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணெகோல் கால்வாய் திட்டப் பணி விரைவாக முடிக்கப்பட்டு செயல்படுத்தப்படும். அதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது, விரைவில் பணிகள் தொடரும். பாரூர் ஏரியிலிருந்து ஊத்தங்கரை தொகுதியிலுள்ள 30 ஏரிகளில் நீர் நிரப்புவதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும். அதுமட்டுமல்ல, 2000 அம்மா மினி கிளினிக்குகளை கொண்டு வந்ததும் அரசுதான்.
தைப் பொங்கலின்போது ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2,500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கிய அரசு அதிமுக அரசு. கடந்த ஆண்டு தைப்பொங்கலுக்கு 1,000 ரூபாய் கொடுத்தோம். கரோனா காலத்தில் மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளின் மூலம் விலையில்லாமல் அரிசி, சர்க்கரை, எண்ணெய், பருப்புடன் 1,000 ரூபாயும் கொடுத்தோம். இதுபோல், கடந்த ஆண்டு பொங்கல் முதல் இந்த ஆண்டு வரை 4,500 ரூபாய் கொடுத்துள்ளோம்.
இந்த மாவட்டத்தில் ஏராளமான சாலைகள், பாலங்கள் அமைத்துள்ளோம். குடிமராமத்துத் திட்டத்தின் மூலம் ஏரிகள், குளங்கள், குட்டைகளை தூர்வாரி மழைக் காலங்களில் பொழிந்த நீரினை சேமித்து வைத்துள்ளோம். ஜெயலலிதாவின் அரசு தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பீர், வாக்களிப்பீர் என்று அன்போடு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT