Last Updated : 10 Feb, 2021 07:12 PM

 

Published : 10 Feb 2021 07:12 PM
Last Updated : 10 Feb 2021 07:12 PM

கழிவறையே இல்லாத வீட்டில் கழிவறை கட்டியதாக கணக்கு: இளையான்குடி அருகே தூய்மை பாரத திட்டத்தில் முறைகேடு

இளையான்குடி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கழிவறையே இல்லாத வீட்டில் கழிவறை கட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிவறை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

தூய்மை பாரத திட்டத்தில் தனிநபர் இல்ல கழிவறை கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மானியமாக ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதற்காக மத்திய அரசு ரூ.7,200-ம், மாநில அரசு ரூ.4,800-ம் வழங்குகின்றன.

இந்நிலையில் இளையான்குடி அருகே அரணையூர் ஊராட்சி பெருமானேந்தல் கிராமத்தில் பல வீடுகளில் கழிவறை கட்டாமலேயே, கட்டியதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிவறை கட்டியதில் மோசடி நடந்துள்ளதை பெருமானேந்தலைச் சேர்ந்த சேகர் என்பவர் வெளிக்கொண்டு வந்துள்ளது.

மேலும் இம்மோசடி குறித்து தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு ஆதாரத்துடன் புகார் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து பெருமானேந்தல் சேகர் கூறியதாவது: மத்திய அரசின் இணையதளத்தில் தனிநபர் இல்ல கழிவறை திட்ட பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அப்பட்டியலில் எனது தந்தை மகாலிங்கம், பெரியப்பா தங்கவேலு ஆகியோரது பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு தனிநபர் இல்ல கழிப்பறை கட்டி கொடுக்கவில்லை.

மேலும் ராசு என்பவர் இறந்தநிலையில் அவரது பெயரிலும் கழிப்பறை கட்டியாக கூறியுள்ளனர். ஆனால் இதுவரை அவரது வீட்டில் கழிப்பறையே கட்டவில்லை.

இதேபோல் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் கழிப்பறை கட்டாமலேயே பணத்தை எடுத்துள்ளனர், என்று கூறினார்.

இதுகுறித்து ஊரகவளர்ச்சிதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எந்த முறைகேடும் நடக்கவில்லை. முறைகேடாக கழிவறை கட்டியதாக கூறப்படும் பயனாளிகளுக்கு மானியமும் வழங்கவில்லை,’’ என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x