Published : 10 Feb 2021 03:37 PM
Last Updated : 10 Feb 2021 03:37 PM
குடியரசுத் தலைவரைச் சந்தித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியைத் திரும்பப் பெறக்கோரி நான்கு பக்கப் புகார் மனுவை முதல்வர் நாராயணசாமி தந்துள்ளார். இரு அமைச்சர்களும் தனித்தனியாகத் தங்கள் துறைகளில் கிரண்பேடி தலையீடு தொடர்பாகப் புகார்களை அளித்தனர்.
புதுவை காங்கிரஸ் அரசு எடுத்துவரும் கொள்கை முடிவுகளைத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தடுத்து வருவதாக முதல்வர் நாராயணசாமியும், அமைச்சர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர். மக்கள் நலத்திட்டங்களை முடக்குவதால் மாநில வளர்ச்சி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர்கள் புகார் கூறி வருகின்றனர். இதனால் கிரண்பேடியைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்து புகார் செய்து கிரண்பேடியைத் திரும்பப் பெற வலியுறுத்தினர். ஆனால், மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து, புதுவையில் 30 தொகுதியிலும் கிரண்பேடியைத் திரும்பப் பெற குடியரசுத் தலைவரை வலியுறுத்திக் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.
இந்நிலையில், குடியரசுத் தலைவரைச் சந்திக்க இன்று (பிப்.10) காலை நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் கந்தசாமி, மல்லாடி கிருஷ்ணாராவ், எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் டெல்லி சென்றனர். இன்று காலை 11 மணியளவில் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்தனர். அப்போது, முதல்வர் நாராயணசாமி, கிரண்பேடியைத் திரும்பப் பெறக்கோரி பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்துப் பிரதிகளை வழங்கினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு கிரண்பேடி எந்த வகையில் இடையூறு விளைவிக்கிறார் என்பதை விளக்கிக் கூறினார். அது தொடர்பாக, நான்கு பக்கப் புகார் மனுவைத் தந்தார். அமைச்சர் கந்தசாமி, தனது துறைகளில் கிரண்பேடி தலையீடு தொடர்பாகவும், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தனது ஏனாம் தொகுதியில் கிரண்பேடி தலையீட்டால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு குறித்தும் தனித்தனியாக மனு அளித்தனர். சுமார் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடந்தது.
குடியரசுத் தலைவருடன் நடந்த சந்திப்பு பற்றி நாராயணசாமியிடம் தொலைபேசியில் கேட்டதற்கு, "மக்கள் நலத்திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை கிரண்பேடி தடுத்து நிறுத்துவதையும், முடக்குவதையும் குடியரசுத் தலைவரிடம் விரிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அதிகார துஷ்பிரயோகம் செய்வது குறித்தும் விளக்கினோம். அரசு அதிகாரிகளை நேரடியாக அழைத்து உத்தரவிடுவதையும், மிரட்டுவதையும் தெரிவித்தோம். ஜனநாயக விதிமுறைகளை மீறிச் செயல்படும் கிரண்பேடியைத் திரும்பப் பெற வேண்டும். இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் நேரடியாகத் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT