Published : 10 Feb 2021 03:28 PM
Last Updated : 10 Feb 2021 03:28 PM
மக்கள் பிரதிநிதிகள் சுதந்திரமாகச் செயல்பட தேர்தல் ஆணையத்தை அறிவுறுத்த புதுச்சேரி வரும் தலைமை தேர்தல் ஆணையரை முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சந்திக்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் மக்கள் பிரதிநிதிகளை விட நியமிக்கப்பட்டுள்ள ஆளுநருக்கே அதிக அதிகாரம் இருப்பதால் மாநில அந்தஸ்துக்காக தேர்தல் புறக்கணிப்பு என்ற கோஷம் எழத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., இன்று வெளியிட்ட அறிக்கை:
"மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் சுதந்திரத்தைப் பறிக்கும் வகையில் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் செயல்பட்டு வருகின்றார். இது கிரண்பேடி துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றதில் இருந்து உச்சத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்து வருகின்றனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவைக்கே முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்பதற்காக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது நீண்ட காலமாகவே திமுகவால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி திடீரென மாநில அந்தஸ்துக்காக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார் என அறிவித்தார். அந்த அறிவிப்பையும் முதல்வர் நாராயணசாமி ஏற்றுக் கொண்டுள்ளார். இது வெறும் வாய்ச் சவடாலா? அல்லது உண்மையான அறிவிப்புதானா? என்று மக்களிடம் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற சூழலில் நாளை புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக இந்திய தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரோ புதுச்சேரி வருகிறார்.
அவரை திமுக அமைப்பாளர்கள் சந்தித்து புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் ஜனநாயகம் பறிபோகக்கூடாது என வலியுறுத்த உள்ளோம்.
அதேபோல் முதல்வர் நாராயணசாமியும், எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமியும் ஒன்றாக இணைந்து தலைமை தேர்தல் ஆணையரைச் சந்தித்து புதுச்சேரி மக்கள் நலன் தொடர்பாக பேச முன்வர வேண்டும். குறிப்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் சட்டப்பேரவைத் தேர்தல் மூலம் ஆட்சியில் அமர்ந்தாலும் அமைச்சரவை செயல்பட முடியாமல் உள்ளதையும் தெரிவித்து மாநில அந்தஸ்து பெற்று மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவை சுதந்திரமாகச் செயல்பட தேர்தல் ஆணையம் வழிகாண வேண்டும் என்றும் வலியுறுத்த வேண்டும்.
முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும் நேரடியாகச் சந்தித்து வலியுறுத்தும்போது தேர்தல் ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாய்ப்பை இருவரும் பயன்படுத்தி தலைமை தேர்தல் ஆணையரைச் சந்திக்காவிட்டால், இருவரின் அறிவிப்பும் வெறும் வாய்ச் சவடால்தான் என மக்களால் பேசும் நிலை ஏற்படும்".
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT