Published : 10 Feb 2021 01:26 PM
Last Updated : 10 Feb 2021 01:26 PM

மேல்மலையனூர் கோயில் ஊஞ்சல் உற்சவம்: பக்தர்கள் அனுமதி குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் தை அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவத்தில் பக்தர்களை அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கையை கோயில் நிர்வாகம் பரிசீலித்து முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த நாகஜோதி என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்துள்ளார். அவர் மனுவில், “விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஒவ்வொரு அமாவசையன்றும், இரவு 10 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நடைபெறும் ஊஞ்சல் சேவையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

கடந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக கோயில்கள் மூடப்பட்ட நிலையில் பக்தர்கள் கலந்துகொள்ள இயலாத நிலையில், இந்த ஆண்டு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின்னர் ஜனவரி மாதம் ஊஞ்சல் சேவைக்கு பக்தர்களை அனுமதிக்கக் கோரிய தனது விண்ணப்பத்தைக் கோயில் நிர்வாகம் நிராகரித்துவிட்டது.

பிப்ரவரி 11-ம் தேதியான நாளை தை அமாவாசை நாளன்று நடைபெறும் ஊஞ்சல் சேவையில் பக்தர்களை அனுமதிக்கும்படி தமிழக அரசு, இந்து சமய அறநிலையத்துறை, கோயில் நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும்.

மதுரையில் தெப்பத் திருவிழா, ஸ்ரீரங்கம் மற்றும் சென்னை திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல் திறப்பு விழா ஆகிய நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்துள்ளனர். ஆகவே, மேல்மலையனூரில் பக்தர்களை அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரின் கோரிக்கை மனுவை கரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு பரிசீலித்து முடிவெடுக்கும்படி கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு நீதிபதிகள் அமர்வு வழக்கை முடித்து வைத்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x