Published : 10 Feb 2021 01:10 PM
Last Updated : 10 Feb 2021 01:10 PM
தமிழகம், புதுவை சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையக் குழுவினர் இன்று சென்னை வந்தனர். அவர்கள் 2 நாட்கள் தமிழகம் மற்றும் புதுவையில் அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், தமிழக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தலைமையிலான தமிழக தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்திய தேர்தல் ஆணையம் இப்பணிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
தமிழக-புதுவை சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் சம்பந்தமாக கடந்த 2020 டிசம்பரில் தேர்தல் ஆணையத்தின் பொதுச் செயலாளர் உமேஷ் சின்ஹா தலைமையிலான தேர்தல் ஆணைய உயர்நிலைக் குழுவினர் தமிழகம் வந்து ஆலோசனை நடத்தினர்.
இதில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களைத் தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்கு மூலம் வாக்கு சேகரிப்பது, வாக்குச்சாவடிகள் எண்ணிக்கை, போலி வாக்காளர்கள், கரோனா தொற்று காலத்தை ஒட்டி வாக்குச்சாவடிகளை அதிகரிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வந்தன.
இதில் வந்த ஆலோசனை அடிப்படையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினர். அதன்படி 1,000 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற அடிப்படையில் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 68 ஆயிரத்தில் இருந்து 93 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இதுதவிர, எளிதாக வாக்களிக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்துதல், 80 வயதைக் கடந்தவர்களுக்கு தபால் வாக்கு வசதி ஆகியவை குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. இதற்கான பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்து தேர்தல் தேதி அறிவிப்புக்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் இன்று காலை 11.15 மணி அளவில் சென்னை வந்தனர்.
தலைமை தேர்தல் ஆணையருடன் தேர்தல் ஆணையர்கள் சுஷில் சந்திரா, ராஜீவ் குமார், கூடுதல் தலைமை இயக்குநர் ஷேபாலி பி.சரண், பொதுச் செயலர் உமேஷ் சின்ஹா, துணை தேர்தல் ஆணையர் சந்திர பூஷன் குமார், இயக்குநர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, செயலர் மலேய் மாலிக் ஆகியோர் சென்னை வந்தனர்.
இரண்டு நாள் தங்கும் அவர்கள் கிண்டியில் உள்ள ஓட்டலில், பகல் 12.15 முதல் 2 மணி வரை தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன் பிறகு, தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் காவல் துறை பொறுப்பு அதிகாரியுடனும், தொடர்ந்து, மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், மாநகரக் காவல் ஆணையர்கள், காவல் கண்காணிப்பாளர்களுடனும் ஆலோசனை நடத்துகின்றனர்.
பின்னர் தேர்தல் பணிகளுடன் தொடர்புடைய வருமான வரி, சுங்கத் துறை, அமலாக்கத் துறை, கலால், வருவாய் புலனாய்வுப் பிரிவு ஆகிய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தமிழகத்தில் தேர்தலின்போது பணப் பட்டுவாடா நடக்காமல் தடுப்பது, கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப் படுத்துவது என்பன தொடர்பான வழிகாட்டுதல்களை வழங்குகின்றனர்.
நாளை காலை 11 மணி அளவில் தமிழக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர், டிஜிபி திரிபாதி மற்றும் இதர துறை அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்திவிட்டு, பிற்பகல் 1 மணிக்குச் செய்தியாளர்களைச் சந்திக்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளைத் தமிழக தேர்தல் துறை செய்துள்ளது.
நாளை பிற்பகல் சிறு விமானம் மூலம் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கின்றனர். அங்கு அரசியல் கட்சிகள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, 12-ம் தேதி பிற்பகலில் சென்னை திரும்புகின்றனர். சென்னையில் இருந்து அன்று மாலை கேரள மாநிலத் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்ய திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கின்றனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலை ஏப்ரல் 2-வது வாரம் அல்லது இறுதியில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில், தேர்தல் தேதியை இறுதி செய்யும் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் இறங்கியுள்ளது. ஆய்வுக்குப் பின் 5 மாநிலத் தேர்தல் தேதி குறித்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தேதியை இறுதி செய்யும் விதமாக, மாநில மற்றும் உள்ளூர் விடுமுறை தேதிகள் மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து பெறப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT