Published : 10 Feb 2021 01:03 PM
Last Updated : 10 Feb 2021 01:03 PM
தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவீதப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, திருச்சியில் 2-வது நாளாக இன்று சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 41 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மத்திய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே இன்று (பிப். 10) சாலை மறியல் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில், "புதுச்சேரி, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் உள்ளதுபோல், தமிழ்நாட்டிலும் மாதாந்திர உதவித்தொகையாக மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3,000, கடும் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5,000 வீதம் வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் தனியார் துறை வேலைவாய்ப்புகளில் 5 சதவீதப் பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு உறுதி செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும் " என வலியுறுத்தப்பட்டது.
சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜெ.ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்த மறியலில் மாவட்டச் செயலாளர் எம்.கோபிநாத், மாநில துணைச் செயலாளர் சி.புஷ்பநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உட்பட மாற்றுத்திறனாளிகள் 41 பேரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று (பிப். 09) சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 60 பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT