Published : 10 Feb 2021 11:13 AM
Last Updated : 10 Feb 2021 11:13 AM
விவசாயிகள் ஏர் கலப்பை சுமக்கிறார்கள். ஆனால், இந்த அரசோ கார்ப்பரேட்டுகளுக்கு பல்லக்கு சுமக்கிறது. எழுவர் விடுதலையில் குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்கிறது மத்திய அரசு. குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்கிறார் ஆளுநர். இப்படியாக மூன்று பேரும் கால்பந்தாட்டத்தைப் போல எழுவரின் விடுதலையைக் கையாள்கிறார்கள் என மக்களவையில் சு.வெங்கடேசன் பேசினார்.
மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது சு.வெங்கடேசன் எம்.பி. நேற்று பேசியதாவது:
''நம்முடைய குடியரசுத் தலைவர் இந்த அரசாங்கத்தை வெகுவாகப் புகழ்ந்து ஒரு உரை நிகழ்த்தியிருக்கிறார். குறிப்பாக கரோனா காலத்தில் மிகவும் துரிதமாகவும் சமயோசிதமாகவும் செயல்பட்டு நாட்டின் பல லட்சக்கணக்கானவர்களை இந்த அரசு காப்பாற்றியிருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இயங்கும் தி லோலி இன்ஸ்டிடியூட் சமீபத்தில் உலக அளவில் நாடுகள் கரோனா தொற்றைக் கையாண்ட விதத்தை அதைப் பற்றிய தரவுகளின் அடிப்படையில் ஒரு பட்டியல் வெளியிட்டு இருக்கிறது. அதில் இந்தியாவின் இடம் 86 என்பதை குடியரசுத் தலைவர் அறிவாரா என்று தெரியவில்லை.
அதேபோல கரோனா காலகட்டத்தில் பல திட்டங்களை வகுத்து பல லட்சக்கணக்கான உயிர்களை இந்த அரசு காப்பாற்றி இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்திருக்கிறார். நான் இந்த நேரத்தில் 13 வயதான ஜம்லோவை நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
தெலங்கானாவில் இருந்து சத்தீஸ்கர் நோக்கிச் சென்று கொண்டிருந்த 13 வயது ஜம்லோ மூன்று நாட்கள் 140 கிலோ மீட்டர் நடந்து தன்னுடைய ஊரை அடைவதற்கு 60 கிலோ மீட்டருக்கு முன்பு மயங்கி விழுந்து இறந்து போனார்.
வெறும் சோர்வும் உணவின்மையும் மட்டுமல்ல அவருடைய மரணத்திற்குக் காரணம், இந்த அரசு கடைப்பிடித்த கொள்கையே மிக முக்கியமான காரணம் என்பதை இங்கு பதிவு செய்கிறேன். இந்தக் காலத்தில் நாடு எண்ணற்ற ஜம்லோக்களை இழந்துள்ளது.
அதேபோல உழவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். வேளாண் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராட்டம் செய்பவர்களைப் போராடிப் பிழைப்பவர்கள் என்று இந்த நாட்டினுடைய பிரதமர் கொச்சைப்படுத்துகிறார். மிகவும் வேதனையாக இருக்கின்றது.
ஒரு விஷயத்தை இங்கே சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் வேளாண் மக்கள் ஏர்கலப்பைகளைத் தங்கள் தோள்களில் சுமப்பார்கள். இந்த அரசாங்கத்தைப் போல கார்ப்பரேட்டுகளுக்குப் பல்லக்கு சுமப்பவர்கள் அல்ல என்பதை நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.
பாலக்கோட் தாக்குதலை டிஆர்பி ரேட்டிங்கிற்காகப் பயன்படுத்தியதைப் பற்றி ஒரு வார்த்தை கண்டித்துப் பேசவில்லை அது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஒரு பக்கம் ஜெய் ஜவான், ஜெய் கிசான் என்று விவசாயிகளை வாழ்க அல்லது இந்த நாட்டினுடைய ராணுவ வீரர்கள் வாழ்க என்று முழக்கமிடுகிற இவர்கள் ராணுவ வீரர்களையும் கொச்சைப்படுத்துகிற பல செயல்கள் இங்கே நடந்து கொண்டிருப்பதைக் கண்டிக்க முன்வரவில்லை. உண்மையில் குடியரசுத் தலைவரினுடைய உரை வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது என்பதை இந்த அவையிலே பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன்.
அதேபோல பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றிய விஷயம், கடந்த நவம்பர் மாதம் குடியரசுத் தலைவருக்கு நான் அனுப்பிய கடிதத்தில் உள்துறை அமைச்சரின் பரிசீலனைக்கு அனுப்புவதாக குடியரசுத் தலைவர் எனக்கு பதில் அளித்திருக்கிறார்.
ஆனால், சமீபத்திலே உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, குடியரசுத் தலைவருக்குதான் இந்த அதிகாரம் இருக்கிறது என்று சொல்கிறது. மாநில ஆளுநர், குடியரசுத் தலைவருக்குதான் அதிகாரம் இருக்கிறது என்கிறார். இப்படியாக மூன்று பேரும் கால்பந்தாட்டத்தைப் போல எழுவர் விடுதலையைக் கையாள்கிறார்கள்.
இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தமிழக அரசினுடைய சிறை விதிகள் ஆயுள் தண்டனை 20 ஆண்டுகள் மட்டுமே என்று சொல்கிறது. அதைக் கடந்து 10 ஆண்டுகள் ஆயுள் தண்டனை அனுபவித்திருக்கிற ஏழு பேருக்கும் நீதி வேண்டும் என்பதையும் இந்த நேரத்திலே நான் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்”.
இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT