Published : 10 Feb 2021 09:01 AM
Last Updated : 10 Feb 2021 09:01 AM
சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு வந்த விவகாரத்தில் உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
தமிழக அரசால் 2013-ம் ஆண்டு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்களை 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்ததற்காக, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் மீது உரிமை மீறல் பிரச்சினை எடுக்கப்பட்டு, பேரவை உரிமைக் குழு மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமைக் குழு நோட்டீஸை ரத்து செய்யக் கோரி மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்எல்ஏக்களும் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அமர்வு, 2017-ல் அனுப்பப்பட்ட நோட்டீஸ் நடைமுறையில் அடிப்படைத் தவறுகள் உள்ளதால் அதை ரத்து செய்து உத்தரவிட்டது.
மேலும், பேரவை உரிமைக் குழு விருப்பப்பட்டால் புதிய நோட்டீஸ் அனுப்பலாம் என்றும், திமுக எம்எல்ஏக்கள் அவர்களின் கருத்துகளை அக்குழுவிடம் முன்வைக்கலாம் என்றும் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் உரிமைக் குழு செப்டம்பர் 7-ம் தேதி பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடியது. திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 எம்எல்ஏக்களுக்கும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க.செல்வத்திற்கும் புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டு, சட்டப்பேரவை தொடங்கிய செப்டம்பர் 14-ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டது.
இந்தப் புதிய நோட்டீஸை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 18 பேரும் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி நீதிபதி கே.ரவிச்சந்திர பாபு முன் திமுக தரப்பில் செப்.16 அன்று முறையீடு செய்யப்பட்டது. வழக்கு செப்.17 அன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா விசாரித்து வந்தார். இரு தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி ஆகியோரும், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் ஆஜராகி வாதிட்டனர்.
அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 4-ல் நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா அமர்வு தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பளிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT