Published : 10 Feb 2021 08:01 AM
Last Updated : 10 Feb 2021 08:01 AM

விடுதலைப் புலி ஆதரவு கட்சிகள் வென்றதில்லை: கூட்டணி வலையில் சிக்கியதால் காங். வளர்ச்சி குறைந்தது - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சிறப்புப் பேட்டி

சென்னை

கூட்டணி என்ற மாய வலையில் சிக்கியதால் தமிழகத்தில் காங்கிரஸின் வளர்ச்சி குறைந்து விட்டதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:

ராகுல் காந்தி முன்கூட்டியே பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். அவரது முதல் கட்ட பிரச்சாரத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

ஜல்லிக்கட்டு போட்டியைக் காணராகுல் காந்தியின் மதுரை வருகையும், கொங்கு மண்டலத்தில் அவரது 3 நாள் பிரச்சாரமும் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மக்கள் மத்தியில் சென்று சேர்ந்துள்ளது. ஜி.கே.மூப்பனார் காலம் வரை தமிழகத்தில் காங்கிரஸ் எழுச்சியோடு இருந்தது. அதன்பிறகு பல்வேறு காரணங்களால் அந்த எழுச்சி குறைந்தது. ஒவ்வொரு முறையும் கூட்டணி என்ற மாயவலையில் சிக்கி, தங்களுக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தால்போதும் என்று காங்கிரஸ் கட்சியினர் ஏங்கும் சூழ்நிலையை ஏற்படுத்திவிட்டது.

கூட்டணி என்றால் அதில் இருக்கும் கட்சிகள் அனைத்தும் பலனடைய வேண்டும். ஆனால், தமிழகத்தில் அது நேர் எதிர்மறையாகி, கூட்டணி என்பது ஒரு கட்சியை பலவீனப்படுத்துவதாக மாறிவிட்டது. தமிழகத்தில் நாங்கள் கூட்டணியை கையாண்ட விதம், காங்கிரஸின் வளர்ச்சியைக் குறைத்துவிட்டது. இந்த நிலையை மாற்றவே ராகுல் களமிறங்கியுள்ளார். கூட்டணி வேண்டாம் என்பது அவரது கருத்து அல்ல. ஆனால், கூட்டணி பலனுள்ளதாக அமைய வேண்டும் என்று ராகுல் நினைக்கிறார்.

20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்கிரஸின் வாக்கு வங்கி 4.3 சதவீதமாக சரிந்து விட்டது. இதற்கு கூட்டணி மட்டும்தான் காரணமா?

கூட்டணி அளித்த பலவீனம் ஒரு முக்கிய காரணம். ஆனால், காமராஜர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் ஆட்சியின் சாதனைகள் காங்கிரஸ் போதுமான அளவுக்கு மக்களிடம் பிரச்சாரம் செய்யவில்லை. இன்றைய தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டது 20 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சிதான் காரணம். ஆனால், இதனை மக்களிடம் கொண்டுச் செல்ல தவறிவிட்டோம். காங்கிரஸின் வாக்கு வங்கி சரிவுக்கு இதுவும் காரணம். ஆனால், தமிழகத்தில் காங்கிரஸின் வேர் ஆழமாக ஊன்றப்பட்டுள்ளதால் மீண்டும் பலம் பொருந்திய கட்சியாக மாறும்.

காங்கிரஸ் இன்னொரு திமுகவாக மாறிவிட்டது. தேசியவாதத்தை துறந்துவிட்டு இடதுசாரி சித்தாந்தம் பேசுகிறார்கள் என்று பாஜக குற்றம்சாட்டுகிறதே?

காங்கிரஸால் தேசியத்தை எப்படி மறக்க முடியும்? பாஜக சொல்லும் அப்பட்டமான பொய்களில் இதுவும் ஒன்று. இந்தியாவின் மிகச் சிறந்த இடதுசாரி இயக்கம் காங்கிரஸ்தான். இன்று நேற்றல்ல 100 ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி கொள்கையை காங்கிரஸ் பேசி வருகிறது. இடஒதுக்கீட்டுக்கான முதல் சட்டத்திருத்தம் முதல், நாட்டில் நிகழ்ந்துள்ள சமூக மாற்றங்களுக்கு காங்கிரஸ்தான் காரணம். எல்லோரையும் இணைத்து நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்பவர்களாக காங்கிரஸில் இருந்த இடதுசாரிகள் இருந்தார்கள். அதனால் தான் நாட்டை வழிநடத்தும் பொறுப்பை கடவுள், மத நம்பிக்கையில்லாத நேருவிடம் மகாத்மா காந்தி ஒப்படைத்தார்.

திமுகவுடன் தொகுப் பங்கீடு பேச்சு நடக்கிறதா? காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும்?

தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் தலைமை பேசி வருகிறது. திமுக – காங்கிரஸ் இடையே இணக்கமான உடன்பாடு ஏற்படுவது உறுதி. "ஒன்றைப் பெறுவதாக இருந்தாலும், ஒன்றைத் தருவதாக இருந்தாலும் அதன் பின்னணியில் சரியான காரணங்கள் இருக்க வேண்டும். தேவையானதை உறுதியாகப் பெற வேண்டும்.

தேவைக்கும் மேலாகவும் எதையும் பெற விரும்பக் கூடாது" என்பது எனது கருத்து. தொகுதிப் பங்கீடு என்பது பண்ட மாற்று முறையோ, வியாபாரமோ அல்ல. காங்கிரஸின் உரிமையை நிலைநாட்டுவோம். கூட்டணியில் அதிகமான கட்சிகள் இருக்கின்றன. காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும். ஆனால், நாங்கள் எதையும் இழந்துவிட மாட்டோம் என்பதை உறுதியாக கூறுகிறேன்.

ஒவ்வொரு தேர்தலில் சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் உரிய வாய்ப்பளிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுகிறதே?

இது தவறான குற்றச்சாட்டு. கடந்த மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதி ஜே.எம்.ஹாரூணுக்கு ஒதுக்கப்பட்டது. கடைசி நேரத்தில் உடல்நலக் குறைவால் அவர் போட்டியிட இயலாத நிலை ஏற்பட்டதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டார். 7 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் இருவர் சிறுபான்மையினர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு அவர்களது விகிதாச்சாரத்துக்கு ஏற்ப அல்லது அதற்கும் மேலும்கூட இடங்கள் வழங்கப்படும்.

கமல்ஹாசனை கூட்டணிக்கு நீங்கள் அழைத்தீர்கள். ஆனால், திமுகவிடம் இருந்து சாதகமான பதில் வரவில்லையே?

திமுக கூட்டணிக்கு கமல்ஹாசன் வந்தால் ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, வந்தால் ஏற்றுக் கொள்வோம் என்று பதிலளித்தேன். நானாக எதையும் கூறவில்லை. கமல்ஹாசனை கூட்டணியில் இணைக்க நான் தனியாக எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இனி திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை.

சசிகலா வருகை அதிமுகவில், தமிழக அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

ஜெயலலிதா என்ற பெரிய அரசியல் ஆளுமையின் பின்னணியில் இருந்தவர் சசிகலா. அதிமுகவுக்குள் அரசியல் காய்களை எப்படி நகர்த்த வேண்டும் என்பதை நன்கறிந்தவர். நகர்த்தியும் காட்டியவர். அவர் திறமைசாலி என்பதை யாரும் மறுத்துவிட முடியாது. ஆனால், அவர் மக்கள் தலைவர் அல்ல. மக்களை வசீகரிக்கும் ஆற்றல் அவருக்கு கிடையாது. ஆனால், கட்சி அமைப்புக்குள் அவருக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. அதிகாரத்தில் இருப்பதால் முதல்வர், துணை முதல்வருக்கு கிடைக்கும் விளம்பரத்துக்கு இணையாக சசிகலாவுக்கும் விளம்பரம் கிடைக்கிறது. அதனை எப்படி பயன்படுத்திக் கொள்ளப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஒரு நல்ல விஷயம் கூட உங்களுக்கு தென்படவில்லையே?

தேர்வுக்கு படிக்காத மாணவர்கள்கூட சில மதிப்பெண்கள் பெற்று விடுவது உண்டு. அதுபோல இயற்கையாக சில நல்ல விஷயங்கள் நடந்திருக்கலாம். மத்திய அரசை அதிமுக ஆதரித்தும்கூட தமிழகத்துக்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. எந்த வகையில் பார்த்தாலும் அதிமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்த அரசு.

வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறவில்லையே?

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களில் மண்டி முறை உள்ளது. இதனால் ஒவ்வொரு கிராமத்திலும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால்தான் அங்கு போராட்டம் வலுவாக உள்ளது. தமிழகத்தில் அரசின் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. அதனால் இங்கு பெரிய அளவில் போராட்டங்கள் இல்லை.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் தான் தீர்மானிக்க முடியும் என்ற தமிழக ஆளுநரின் முடிவை எப்படி பார்க்கிறீர்கள்?

கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கோருவதில் எந்த நியாயமும் இல்லை. ஏராளமான தமிழர்கள் பல்லாண்டுகளாக சிறையில் இருக்கும்போது, இந்த 7 பேரை மட்டும் விடுதலை செய்ய கோருவது ஏன்? பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் நீதிமன்றம் விடுவித்தால் எதிர்க்க மாட்டோம். ஆனால், அவர்களின் விடுதலைக்காக அரசியல் அழுத்தம் கொடுப்பதை ஏற்க முடியாது. விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு நிலைப்பாடு எடுத்த எந்தக் கட்சியும் தமிழகத்தில் வெற்றிபெற்றதே இல்லை. இந்த வரலாற்று உண்மையை மட்டும் இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x