Published : 10 Feb 2021 07:38 AM
Last Updated : 10 Feb 2021 07:38 AM
`உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் 2-ம் கட்ட பிரச்சாரத்தை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்திருக்கிறார். இப்படி 2-ம் கட்ட பிரச்சார பயணத்திட்டத்தில், காலையில் ஒரு மாவட்டம், மதியம் மற்றொரு மாவட்டம் என ஓடிஓடிச் சென்று மக்களை, சந்தித்துக் கொண்டிருந்தார் ஸ்டாலின். அதேவேளையில், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில், நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயில், கீழப்பாவூர் நரசிம்மர் கோயில் ஆகிய கோயில்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
நாங்குநேரி பெருமாள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்குப்பின், வானமாமலை மடத்துக்குச் சென்று, ஸ்ரீமதுரகவி ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் ஆசிபெற்றார். இக்கோயில் வளாகத்தில் மூதாட்டி ஒருவருடன், துர்கா ஸ்டாலின் உரையாடும் விடியோ பதிவு, சமூக வலைதங்களில் வைரலாகிது. கோயிலில் இருந்து வந்த துர்கா ஸ்டாலினை, `கருணாநிதியின் மருமகள்’ என்று, அந்த மூதாட்டிக்கு ஒருவர் அறிமுகம் செய்து வைக்க, அந்த மூதாட்டியும், துர்கா ஸ்டாலினும் உரையாடுகிறார்கள்.`ஸ்டாலின் கோயிலுக்கு வரமாட்டார் இல்லையா?’ என்று மூதாட்டி கேட்கிறார்.
`வருவாங்க, வருவாங்க, ஏன் வரமாட்டாங்க?’ என்று, துர்கா பதில் அளிக்கிறார். `பெருமாள் மீது, ஸ்டாலினுக்கு நம்பிக்கை உண்டா?’ என்று, மூதாட்டி எதிர்கேள்வி கேட்கிறார்.`நம்பிக்கை உண்டு’ என்று துர்கா பதில் கூறுகிறார். இறுதியில் அந்த மூதாட்டியின் காலில் விழுந்து ஆசிபெறுகிறார். ஸ்டாலினின் 3-ம் கட்ட பிரச்சார பயணம்,வரும் 12-ம் தேதி தொடங்கவுள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT