Published : 09 Feb 2021 07:46 PM
Last Updated : 09 Feb 2021 07:46 PM

தமிழகத்தில் மேலும் 246 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள்: அமைச்சர் உதயகுமார் தகவல்

மதுரை

தமிழகத்தில் மேலும் 246 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளதாக வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

இந்தியத் தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் மாநில அளவிலான கருத்தரங்கு சென்னையில் இன்று நடந்தது. இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இருந்து வருவாய் பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, ''கரோனாவால் தகவல் தொழில்நுட்பத் துறை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் வீட்டிலிருந்தே தொழில்நுட்பப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களோடு இணைந்து செயல்பட்டதால் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகள் தடையின்றி நடைபெற்றுள்ளன.

தமிழத்தில் உள்ள 18 தகவல் தொழில்நுட்பப் பொருளாதார மண்டலங்கள் மூலம் 4 லட்சம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 246 தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் உருவாக்கப்பட உள்ளன'' என்று அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வையற்றோர் மற்றும் பேச்சு மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்குத் தக்க செயலிகளுடன் கூடிய ரூ.12,799 மதிப்பிலான திறன் பேசிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் த.அன்பழகன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x