Last Updated : 09 Feb, 2021 07:41 PM

1  

Published : 09 Feb 2021 07:41 PM
Last Updated : 09 Feb 2021 07:41 PM

ஸ்டீல், சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்து கட்டுமானத் தொழில் அமைப்புகள் பிப்.12-ல் வேலைநிறுத்தம்

கோவை

ஸ்டீல், சிமென்ட் விலை உயர்வைக் கண்டித்து கோவையில் கட்டுமானத் தொழில் அமைப்புகள் பிப்ரவரி 12-ம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

இது தொடர்பாகக் கோவையில் உள்ள 8 முக்கியக் கட்டுமானத் தொழில் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் டி.அபிஷேக், அகில இந்தியக் கட்டுநர் வல்லுநர் சங்கத்தின் துணைத் தலைவர் கே.சின்னசாமி ஆகியோர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''நாட்டிலேயே வேலைவாய்ப்புகளை வழங்குவதில் கட்டுமானத் தொழில்துறை இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்நிலையில், அதிவேகமாக உயர்ந்து வரும் ஸ்டீல் மற்றும் சிமென்ட் விலை, கட்டுமானத் துறையில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு தொடக்கத்தில் ஸ்டீல் விலை டன் ஒன்றுக்கு ரூ.35,000 ஆக இருந்தது. தற்போது அது ரூ.65,600 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு ஒரு பை சிமென்ட் விலை ரூ.280 ஆக இருந்தது. தற்போது ரூ.420 ஆக உயர்ந்துள்ளது.

வீடு கட்டி வருவோர் திட்டமிட்ட தொகைக்கும் மேலாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், கட்டி முடிக்கத் திணறி வருகின்றனர். கட்டுமானத் தொழிலில் உள்ளவர்கள், ஒப்பந்ததாரர்கள், குறைந்த அளவு முன்பணம் வைத்துத் தொடங்கியவர்கள், விலை உயர்வால் வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்திப் பணம் பெற வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. கட்டுமானத் தொழிலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மத்திய, மாநில அரசுகளுக்குக் கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

எனவே, ஸ்டீல் மற்றும் சிமென்ட் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். விலையைச் சீராக்க, 'ரேரா' போன்ற ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும், விலை உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்தும் வரும் 12-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும்''.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x