Last Updated : 20 Nov, 2015 12:00 PM

 

Published : 20 Nov 2015 12:00 PM
Last Updated : 20 Nov 2015 12:00 PM

மீனவ கைம்பெண்களின் வாழ்க்கை போராட்டம்

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று உயிரிழப்பது உட்பட மீனவர்கள் மரணத்துக்குப் பிறகு போராட்டங்கள், கோரிக்கைகள், ஆளும் கட்சி மீது விமர்சனம் ஆகியவை நடப்பது பெரும்பாலும் பலதரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. ஆனால் மீனவ கைம்பெண்களின் வாழ்க்கைப் போராட்டம் பற்றி அதிகம் பேசப்படுவதில்லை.

மீனவக் கைம்பெண்கள், குடும்ப வருவாய்க்கு ஆதாரமானவரை இழந்த பிறகு பெரும்பாலும் குழந்தைகளுடன் சற்றும் கருணையற்ற சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

2012-ம் ஆண்டு முதல் தமிழக கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த 1,640 மீனவர்கள் விபத்தின் காரணமாகவோ, இயற்கைச் சீற்றத்துக்கோ பலியாகியுள்ளனர். இவர்களில் பெரும்பாலும் இளம் வயதினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உதவி

குடும்பத்தலைவனை இழந்த மீனவ குடும்பங்களுக்கு அரசு நிதி உதவி அளிக்கிறது, குடும்பத்தினருக்கு மாற்று வேலைகளையும் வழங்குகிறது. ஆனால் சமூகத்தில் ஒரு கைம்பெண்ணாக அவர்கள் வாழ்க்கை நடத்துவது பெரும் போராட்டமாகவே உள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மினவர் நல வாரியம் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து, ராமநாதபுரம், நாகப்பட்டிணம், கன்னியாகுமரி, மற்றும் பிற கடலோர மாவட்டங்களில் நிறைய கைம்பெண்களை சந்தித்து பேசினர்.

இதில் கைம்பெண்கள் பலர் உணர்வு ரீதியான சிக்கலில் இருப்பது தெரியவந்தது. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் 2012-13-க்குப் பிறகு மீனவர்கள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

2012-ம் ஆண்டு முதல் 14 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். இவர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றே கருதப்படுகிறது. ஆனால் இவர்கள் திரும்பி வருவார்கள் என்று குடும்பத்தினர் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

“கைம்பெண்கள் தாங்கள் தனிமைப் படுத்தப்பட்டு விட்டதாகவும், பிரச்சினைகளைச் சந்திக்க தங்களிடம் நம்பிக்கை இல்லை என்பதாகவும் உணர்கின்றனர். போதுமான வாழ்வாதாரங்கள் இல்லாத நிலையில் குழந்தைகளை வளர்ப்பதில் பெரும் சிக்கல்களை இவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர். பாலியல் துன்புறுத்தல், சமூக ஏற்றத்தாழ்வு நிலை போன்ற காரணிகளும் இருக்கின்றன” என்கிறார் தமிழ்நாடு மனநல ஆரோக்கிய திட்ட மாநில அதிகாரி சி.ராமசுப்பிரமணியன்.

இதனால் மீனவ கைம்பெண்கள் தங்கள் வாழ்வின் சிக்கல்களை எதிர்கொண்டு மீண்டு வர சில நடைமுறை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

“ராமநாதபுரத்தில் மட்டும் 300 மீனவ கைம்பெண்கள் உள்ளனர். இதனையடுத்து இந்தப் பெண்களுக்கு உதவ பல்வேறு அவசரத் திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. இதில் கிடைக்கும் பலனைப் பொறுத்து மற்ற கடலோர மாவட்டங்களிலும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப் படவுள்ளன. தொழில்முறை மனநல ஆலோசகர்கள் இவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கவுள்ளனர். மாற்று வாழ்க்கை முறை, எதிர்காலம் பற்றிய கவலையை தணிப்பது, குழந்தைகளுக்கான நலவாழ்வு ஆகியவை இந்தத் திட்டங்களில் அடங்கும்” என்கிறார் சி.ராமசுப்பிரமணியன்.

அரசு உதவிகள் இருந்தாலும், சமூகத்தில் இவர்களின் வாழ்க்கை பெரும் சோதனைகளைச் சந்தித்து வருகிறது என்பதே நடைமுறை எதார்த்தமாக இருந்து வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x