Published : 09 Feb 2021 05:58 PM
Last Updated : 09 Feb 2021 05:58 PM
சசிகலா வெளியில் வந்தது குறித்து அதிகமாக அதிமுகவினர்தான் பயம் கொண்டுள்ளனர். ஆளும் அதிமுக அரசுக்கு இது ஒரு இடியாகத்தான் விழுந்துள்ளது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் முகல்லா ஜமாத் நிர்வாகிகள், உலமாக்கள் கலந்துரையாடல் கூட்டம் இன்று (பிப். 09) நடைபெற்றது.
இதில் பங்கேற்றபின் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்ந்து அங்கம் வகிக்கிறது. முஸ்லிம் சமூகத்தின் சார்பில் முதல்வர் வி.நாராயணசாமியிடம் வைக்கப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளை அவர் நிறைவேற்ற வேண்டும். காரைக்காலைச் சேர்ந்த ஏ.கே.அப்துல்சமது பெயரை இங்குள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்குச் சூட்ட வேண்டும். கூட்டணியில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளையாவது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்குக்கு ஒதுக்க வேண்டும்.
துணைநிலை ஆளுநருக்கும், முதல்வருக்குமிடையே உள்ள கருத்து மோதல் மாநில மக்களுக்கு நல்லதல்ல. இதற்குத் தீர்வு காணும் நோக்கில், கட்சியின் சார்பில் ஒரு குழு அமைத்து, துணைநிலை ஆளுநரைச் சந்தித்துப் பேச முடிவு செய்துள்ளோம். புதுச்சேரியில் கட்சி வலுவற்ற நிலையில் உள்ள பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக மேற்கொள்ளப்படும்.
மத்திய பாஜக அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான பல சட்டங்களைக் கொண்டுவந்து குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தை அவமதிக்கிறார்கள். பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத்தைத் தடுப்பதாகக் கூறி காதல் திருமணங்களைத் தடுக்கும் வகையில் சட்டங்கள் இயற்றி வருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணானது. விவசாயிகளின் போராட்டங்கள் உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.
நாட்டில் ஜனநாயகத்தின் பெயரால் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்களில் சமய சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளை ஒன்றிணைக்கும் முயற்சியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரிக்கு மட்டுமல்லாது அனைத்து யூனியன் பிரதேசங்களுக்கும் தனி மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு. சசிகலா வெளியில் வந்தது குறித்து அதிகமாக அதிமுகவினர்தான் பயம் கொண்டுள்ளனர். ஆளும் அதிமுக அரசுக்கு இது ஒரு இடியாகத்தான் விழுந்துள்ளது.
கட்சியின் சார்பில் பிப். 27-ம் தேதி சென்னை பெரியார் திடலில், தேர்தல் பணிக்குழுவினர் மாநாடு நடத்தப்படவுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றுகிறார். டிசம்பர் கடைசி வாரத்தில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள முகல்லா ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு சென்னையில் நடத்தப்படவுள்ளது".
இவ்வாறு காதர் மொய்தீன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT