Last Updated : 09 Feb, 2021 03:28 PM

 

Published : 09 Feb 2021 03:28 PM
Last Updated : 09 Feb 2021 03:28 PM

மாநில அந்தஸ்து விவகாரம்; அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார்: புதுச்சேரி முதல்வர் பேட்டி

பேட்டியளித்த நாராயணசாமி. | படம்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி

மாநில அந்தஸ்துக்காக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கத் தயார் என்பது தனது தனிப்பட்ட கருத்து என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலமாக இல்லாமல் யூனியன் பிரதேசமாக இருப்பதால் அனைத்துக்கும் துணைநிலை ஆளுநர் ஒப்புதல் தேவை. மக்கள் பிரதிநிதிகளுக்கு அதிகாரமில்லாத சூழல் வெளிப்படையாகியுள்ளது. இச்சூழலில் மாநில அந்தஸ்து பெற அனைத்துக் கட்சியினரும், குறிப்பாக, ஆளும் காங்கிரஸ் கட்சியும் தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவிக்கத் தயாரா என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று (பிப். 09) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை கடந்த 35 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. மாநில அந்தஸ்து கோரிக்கையை காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படுமா என நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் எழுப்பியபோது, 'மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக உத்தேசம் இல்லை' என மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வலியுறுத்தி மத்திய அரசைக் கோரும் தீர்மானம் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், மாநில அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை வைக்கும், என்.ஆர்.காங்கிரஸ் சட்டப்பேரவையில் அதைப் பதிவு செய்யாமல் தற்போது மாநில அந்தஸ்த்தை வலியுறுத்தி தேர்தலைப் புறக்கணிக்கத் தயாரா என அக்கட்சியின் தலைவர் ரங்கசாமி கூறியுள்ளார். மத்திய அரசு நமது உரிமைகளைப் பறிப்பதால், காங்கிரஸ் கட்சியின் தலைமையின் முடிவைக் கேட்டு நாங்கள் எங்கள் முடிவைத் தெரிவிப்போம்

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்பது ஒருமித்த கருத்தோடு செயல்பட வேண்டும். இரட்டை கருத்து வரும் நிலை ஏற்படக்கூடாது. மாநில அந்தஸ்தைப் பெறுவதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும். புதுச்சேரி வரும் தலைமைத் தேர்தல் ஆணையரிடம் எங்களின் கருத்தைத் தெரிவிப்போம்".

இவ்வாறு முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

தேர்தல் புறக்கணிப்பு பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்டதற்கு, "புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகாலமாக அமைச்சரவையில் முடிவெடுத்து சட்டப்பேரவையில் நிதி ஒதுக்கப்பட்டு திட்டம் தீட்டி பின்பு ஒப்புதலுக்காக ஆளுநரிடம் செல்லும்போது, அதை நிறைவேற்றத் தடையும் நிகழும். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு என்ன மரியாதை என்ற கேள்வி எழும்.

அதிகார துஷ்பிரயோகம் செய்து ஆளும் அரசின் நடவடிக்கைகளை முடக்கும் வேலையில் ஆளுநர் ஈடுபடுவதால் மக்கள் நலத்திட்டங்கள் பாதிக்கப்படுகின்றன. அதனால் தினமும் வேதனை அனுபவிக்கிறேன். முதல்வராக இல்லாமல் புதுச்சேரி மாநில பிரஜையாக கூறுகிறேன், அதிகாரம் இல்லாத சட்டப்பேரவை இருந்து பிரயோஜனமில்லை. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்தால் கண்டிப்பாக தேர்தலைப் புறக்கணிக்கத் தயார் என்பது எனது தனிப்பட்ட கருத்து" என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x