Published : 09 Feb 2021 03:19 PM
Last Updated : 09 Feb 2021 03:19 PM
திமுகவின் 'பி' டீமாக சசிகலா-டிடிவி தினகரன் செயல்படுகிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இந்நிலையில், திமுகவுக்கு எந்த டீமும் தேவையில்லை. அதிமுகதான் பாஜகவின் 'பி' டீமாகச் செயல்படுகிறது என்று கனிமொழி தெரிவித்தார்.
சசிகலா, தினகரன் குறித்த கேள்விக்கு நேற்று பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார் “அதிமுகவில் உள்ள எட்டப்பர்கள் களையெடுக்கப்படுவார்கள். அதிமுகவில் சசிகலா இணைவதற்கு 100% வாய்ப்பு இல்லை. சசிகலா மற்றும் ஸ்டாலின் இடையே உடன்பாடு உள்ளது. திமுகவின் 'பி' டீம்தான் சசிகலாவும், டிடிவி தினகரனும். சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும்” எனத் தெரிவித்திருந்தார்.
திமுகவின் ‘பி’ டீமாக சசிகலாவும் டிடிவி தினகரனும் செயல்படுகின்றனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தது குறித்த கேள்விக்கு திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி பாஜகவின் 'பி' டீம்தான் அதிமுக என விமர்சித்தார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக எம்.பி. கனிமொழி கூறியதாவது:
“திமுகவுக்கு எந்த ‘பி’ டீமும் தேவையில்லை. அதிமுகதான் பாஜகவின் ‘பி’ டீமாக செயல்பட்டு வருகிறது. உடல்நலம் குன்றிய அம்மையாரை (சசிகலா) அதிமுகவினர் தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதல்வராவார். அதிமுகவினர் செய்யாததையெல்லாம் செய்ததாகச் சொல்லி ஓட்டுக் கேட்டு வருகிறார்கள். ஆனால், திமுக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு செய்த திட்டங்களை முன்னிறுத்தி வாக்கு கேட்டு வருகிறது. திமுக கூட்டணி அப்படியே தொடரும். ஏதாவது மாற்றம் இருந்தால், திமுக தலைமை முடிவு எடுக்கும்.
ஆட்சிக்கு வந்தபிறகு விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வோம் என்று திமுக கூறிய நிலையில், அந்தக் கடனைத் தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாகவே இருந்திருக்கின்றன. இந்தக் கடன் தள்ளுபடி அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்”.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT