கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடன் தள்ளுபடி; தேர்தல் 'ஸ்டண்ட்' - கே.எஸ்.அழகிரி விமர்சனம்
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருப்பது தேர்தல் 'ஸ்டண்ட்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் சமூக ஊடகத்துறை பிரச்சார இயக்கத்தை இன்று (பிப். 9) சத்தியமூர்த்தி பவனில் தொடங்கி வைத்து, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேசியதாவது:
"மத்தியில் மோடி அரசும், மாநிலத்தில் அதிமுக அரசும் சேர்ந்து, நாட்டையும், மாநிலத்தையும் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, பெண்களுக்கான மேம்பாடு என ஒவ்வொரு துறையிலும் அழிவை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் அரசுக்கு எதிராக அதிகரித்து வரும் கோபத்தை நாம் காண்கிறோம். அது குறித்துக் குறிப்பிட வேண்டும். ஏராளமான மக்கள், இளைஞர்கள், பெண்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பதைப் பார்க்கிறோம். ஆனால், மோடி அரசோ இந்தக் குரல்களை ஒடுக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்தச் சூழலில், குரலற்றவர்களின் குரலாக காங்கிரஸின் குரல் ஒலிக்கும்.
பாஜகவும் மற்றும் பிற கட்சிகளும் ஊடகங்களை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும், அதன்மூலம் இட்டுக்கட்டும் செய்திகள், மக்களைத் திசை திருப்பும் பொய்ச் செய்திகள் மற்றும் போலிச் செய்திகளை வெளியிடுவதைப் பற்றிப் பேச வேண்டும். சமீபத்தில் விவசாயிகள் போராட்டம் பற்றித் தவறான தகவலை சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக 1,178 ட்விட்டர் கணக்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது. அதே நேரத்தில், சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கிற வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடுகிற ஆர்எஸ்எஸ், பாஜக, வகுப்புவாத இயக்கத்தினர் மீது எந்த நடவடிக்கையையும் பாஜக அரசு எடுப்பதில்லை. இது பாஜக அரசின் பாரபட்ச போக்கையே காட்டுகிறது.
இந்த சர்வாதிகார மற்றும் பாசிச அரசாங்கத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரே வழி, நாம் ஒன்றாக இணைந்து, ஒரே குரலாக ஒலிப்பதுதான்.
ஒரே குரலாக இணைந்து ஒலிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நாடு முழுவதும் சிதறி ஒலித்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் அனுதாபிகளின் குரல்களை ஒரே குடையின் கீழ் ஒழுங்குபடுத்த வேண்டும். இதனை மனதில் வைத்தே, 'காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள்' என்ற பிரச்சாரத்தைக் காங்கிரஸ் சமூக ஊடகத்துறை தொடங்கியுள்ளது.
ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமத்துவம் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கப் போராட விரும்புவோரை, காங்கிரஸ் சமூக ஊடகத்தில் இணையுங்கள் என்ற பிரச்சார இயக்கத்தில் சேர நாம் வரவேற்கிறோம். இதில் சேர்ந்து இந்தியாவின் உண்மையான கொள்கைகளைப் பாதுகாக்கப் போராடுங்கள். காந்தி, நேரு, சர்தார் படேல், மற்றும் சுதந்திரத்துக்காகப் போராடிய நமது அனைத்துத் தலைவர்கள் மற்றும் முன்னோடிகளைக் கொண்டதுதான் இந்தியா.
இந்தப் பிரச்சாரம் வழியாக, 5 லட்சம் காங்கிரஸ் சமூக ஊடகப் போராளிகளை நாம் ஒன்றிணைக்க முடியும். இதில் 50 ஆயிரம் பேர் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகளாக இருப்பார்கள். அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் பணியைத் தேர்வு செய்யலாம். விழிப்புணர்வு, உறுப்பினர் சேர்ப்புப் பிரச்சாரம், நேர்காணல்கள், தேர்வு, பயிற்சி மற்றும் நியமனம் என ஒரு மாத காலத்துக்கு நாம் பணியாற்ற வேண்டும்.
மக்கள் இணையும் வகையில், மிஸ்டு கால் எண், வாட்ஸ் அப் எண், இணையம் மற்றும் இ-மெயில் முகவரி வழியிலான பிரச்சாரத்தை நாம் தொடங்குவோம்.
இந்தப் பிரச்சாரத்தில் இணையுமாறு, ராகுல் காந்தி விடுக்கும் அழைப்பை இந்த வீடியோவில் இடம்பெறச் செய்வோம்.
'குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும், போராட்டத்தைக் கைவிடுங்கள்' என்று பிரதமர் மோடி விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும், வேளாண் சட்டங்களை விவசாயிகள் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தியிருக்கிறார்.
கடந்த 72 நாட்களாக கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராடி 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். சிலர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்குப் பிறகும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற மறுக்கும் சர்வாதிகாரியாக மோடி செயல்படுவதையே அவரது அறிவிப்பு காட்டுகிறது.
குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று கூறுகிற பிரதமர் மோடி, அதற்கான சட்டப் பாதுகாப்பை வழங்க மறுப்பது ஏன் ? விவசாயிகளின் விளைபொருட்களைக் கொள்முதல் செய்கிற ஏகபோக உரிமையை அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்த்த பிறகு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் மோடியால் சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது. இதனால்தான் மோடி அரசு, விவசாய விரோத அரசு என்று குற்றம் சாட்டுகிறோம்.
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாயக் கடனை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தள்ளுபடி செய்திருக்கிறார். அதிமுக ஆட்சி அமைந்து 10 ஆண்டுகள் நெருங்கிய நிலையில் தேர்தலைச் சந்திக்கும் இந்த வேளையில் ரூபாய் 12 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்திருக்கிறார். இதற்கான முழு நிதியை பிப்ரவரி இறுதியில் பட்ஜெட் தாக்கலின்போது ஒதுக்குகிறார்களா என்பது தெரியவில்லை. ஏற்கெனவே, ரூபாய் 5 லட்சம் கோடி கடனில் திவாலான நிலையில் இருக்கிற தமிழக அரசு ஆட்சியை விட்டு அகலுகிற இரண்டு மாதங்களுக்கு முன்பாக தேர்தல் 'ஸ்டண்ட்'டாக கடன் ரத்து அறிவிப்பைச் செய்திருக்கிறது. இதுவொரு கண்துடைப்பு நாடகம். உண்மையிலேயே விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டுமென்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு அக்கறை இருந்திருந்தால் அவர் முதல்வர் ஆனதும் செய்திருக்க வேண்டும்.
கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடனை ரத்து செய்த அதிமுக அரசு, மத்திய பாஜக அரசை வலியுறுத்தி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் ரத்து செய்தால்தான் விவசாயிகளுக்கு முழுமையான பயன் கிடைக்கும்.
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிற 69 சதவிகித இட ஒதுக்கீடு அரசியலமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழகம் அனுபவித்து வருகிற 69 சதவிகிதத்தைப் பாதுகாக்கிற அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுக்க வேண்டும். ஆனால், மத்திய பாஜக அரசு இட ஒதுக்கீட்டுக்கு எதிராக சமூக நீதியைச் சீர்குலைக்கிற வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தப் பின்னணியில் பாஜகவின் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துகிற வகையில் அதிமுக அரசு செயல்படவில்லையெனில் அதற்கான விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து இரண்டாண்டுகளுக்கு மேலாகியுள்ளது. இந்தத் தடையை நீக்குவதற்கு பாஜக அரசு தயாராக இல்லை. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி அரசு பாஜகவின் கைப்பிடிக்குள் இருக்கிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடையாணை நீக்கப்பட்டால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக நீடிக்க முடியாது. இந்தச் சூழலைப் பயன்படுத்தி அதிமுகவோடு, பாஜக அரசியல் பேரம் பேசி வருகிறது. இதனைக் கண்டிக்கிற வகையில், உச்ச நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகளாக நீடிக்கிற தடையாணையை நீக்குகிற நடவடிக்கைகளை எடுக்கத் தவறிய மத்திய புலனாய்வுத் துறையின் சென்னை அலுவலகத்தை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் முற்றுகையிடுகிற போராட்டம் பிப்ரவரி மாத இறுதியில் நடத்தப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமீபத்தில் இலங்கை அரசு இந்தியாவோடு செய்திருந்த கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது. இதைத் தொடர்ந்து, 2019இல் சீன அரசோடு செய்து கொண்ட கொழும்பு துறைமுக முனையத்தை அறிவித்ததோடு, தற்போது சீன அரசோடு மின் உற்பத்திக்கான திட்டத்தை தமிழகத்திற்கு மிக அருகாமையில் உள்ள மூன்று தீவுகளில் தொடங்க ஒப்பந்தம் போட்டுள்ளது. இது தமிழகத்தில் இருந்து 50 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதோடு, தமிழகத்திற்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிற சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, இதுவரை மத்திய பாஜக அரசு எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த கவலையை தருகிறது.
எனவே, அண்டை நாடான இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். இது குறித்து, பிரதமர் மோடி தீவிர கவனம் செலுத்த வேண்டும்".
இவ்வாறு கே.எஸ்.அழகிரி பேசினார்.
