Published : 09 Feb 2021 01:23 PM
Last Updated : 09 Feb 2021 01:23 PM
தமிழக சாலைகளில் தொடரும் விபத்துகள் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. நேற்று திண்டிவனம் அருகே சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியான நிலையில் இன்று மதுராந்தகத்தில் நடந்த சாலை விபத்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ளனர்.
தமிழகத்தில் சாலை விபத்துகள் கடந்த ஆண்டு பெருமளவு குறைந்ததாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்கு அடிப்படையான காரணம் கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக வாகனப்போக்குவரத்து இல்லாததே. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையில் சாலை விபத்துகள் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நேற்று காலை திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதியதில் வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலையில் மதுராந்தகம் அருகே ஒரு சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் வாகன ஓட்டுநரும் உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த பூந்தமல்லி கரையாண்சாவடியைச் சேர்ந்தவர் சுப்ரமணி இவர் தனது காரில் தனது மனைவி, மகள், பேத்தியுடன் சமயபுரம் கோயிலுக்குச் சென்றார். கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
காரை ஓட்டுநர் ஒருவர் ஓட்டினார். இந்நிலையில் மதுராந்தகத்தில் உள்ள தடாகம் காவல் நிலைய எல்லையில் உள்ள அத்திமானம் என்ற இடம் அருகே சென்ற போது முன்னாள் சென்ற லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் காரின் முன்பக்கம் பலத்தச் சேதம் அடைந்தது. காரில் பயணித்த சுப்ரமணி, அவரது மனைவி இந்திராணி, மகள் மகாலட்சுமி, பேத்தி சாந்தி மற்றும் கார் ஓட்டுநர் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தடாகம் போலீஸார் உயிரிழந்தவர்கள் உடலைக்கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
‘‘விபத்தில் 5 பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள் நகரங்களில் காரை செலுத்தும்போது அதில் உள்ள வித்தியாசத்தையும், நெடுஞ்சாலைகளில் உள்ள வித்தியாசத்தையும் கவனிக்க தவறுகின்றனர்.
அதேபோல் ஓட்டுநரை அழைத்துச் சென்றாலும் அவர் நெடுஞ்சாலையில் ஓட்டி பழக்கப்பட்டவரா என்பதை கேட்டு அறிந்து நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும். அதேப்போன்று ஓட்டுநருக்கு உரிய ஓய்வைக்கொடுக்க வேண்டும்.
காரை நகரத்தில் ஓட்டுவதற்கும் வெளியூர் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. வெளியூர் செல்வதற்கு முன் காரை ஒரு தடவை சர்வீஸுக்கு விட்டு காரின் இஞ்சின் ஆயில், பேட்டரி, எஞ்சின் தன்மை முக்கியமாக கார் டயர்களின் தன்மை குறித்து சரியாக உள்ளதா என சரிபார்த்தப் பின்பே பயணம் செய்ய வேண்டும்.
காருக்காக செய்யும் செலவு நம் குடும்பத்தின் வாழ்க்கைக்கான செலவு, சொந்தமாக வாகனத்தை இயக்குவதாக இருந்தாலும், ஓட்டுநரை வைத்து இயக்குவதாக இருந்தாலும் நெடுஞ்சாலை அனுபவம் உள்ளவராக இருத்தல் வேண்டும், நள்ளிரவு பயணத்தை தவிர்த்திடல் வேண்டும்’’ என ஓய்வுப்பெற்ற போக்குவரத்து புலனாய்வுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT