

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வன்னியர்களுக்கு 15 சதவீதம் உள் இடஒதுக்கீடு பெற்றுத் தருவதே தனது முதல் பணியாக இருக்கும் என்று திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் உறுதிபட தெரிவிக்கிறார்.
தேர்தல் தொடர்பாக அவர் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை வருமாறு:-
கேள்வி: வன்னியர் இடஒதுக்கீடு மூலம் தேர்தல் கணக்கு போட்ட பாமகவின் பேரம் பேசும் சக்தி குறைந்திருப்பதாகக் கூறப்படுகிறதே?
பதில்: பிற்படுத்தப்பட்ட மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட சட்டநாதன் குழு, அம்பாசங்கர் குழு ஆகியவற்றின் பரிந்துரை மற்றும் ஜனார்த்தனன் தலைமையிலான பிற்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை அடிப்படையில் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அதிமுக அரசும் அரசாணையை பிறப்பித்தது. இவற்றின்பேரில், உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுவிட்டால் தனது அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என்பதால், வன்னியர்களுக்கான 20 சதவீத தனி இடஒதுக்கீட்டில் இருந்து டாக்டர் ராமதாஸ் பின்வாங்கியுள்ளார்.
கேள்வி: வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டில் தங்களது நிலைப்பாடு என்ன?
பதில்: வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்ததும், வன்னியர்களுக்கு 15 சதவீத உள் இடஒதுக்கீடு பெற்றுத் தருவதே எனது முதல் பணியாக இருக்கும். இந்த உள் இடஒதுக்கீடு குறித்த அறிவிப்பு திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.
கேள்வி: உங்களது எதிர்காலத் திட்டம் என்ன?
பதில்: தமிழக வேலை தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். உதாரணத்துக்கு நெய்வேலி என்.எல்.சி.யில் 259 பொறியாளர் தேர்வில் 8 பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். அந்த 8 பேரிலும் 2 பேர்தான் தமிழர்கள். தமிழகத்தின் உரிமையைப் பாதுகாப்பதே எங்களது எதிர்காலத் திட்டமாகவும், வரும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் முதன்மை பிரச்சாரமாகவும் இருக்கும். இவ்வாறு வேல்முருகன் கூறினார்.