Last Updated : 09 Feb, 2021 08:27 AM

10  

Published : 09 Feb 2021 08:27 AM
Last Updated : 09 Feb 2021 08:27 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக நடைபெறும் திமுகவின் வேல் நாடகத்துக்கு ம‌க்கள் பதிலடி தருவார்கள்: பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி  திட்டவட்டம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி டெல்லியில்‌ மேலிடத் தலைவர்களுடன் தேர்தல் வியூக கூட்டத்தை முடித்துவிட்டு நேற்றுமுன்தினம் பெங்களூரு வந்திறங்கினார். தேர்தல் குறித்து பாஜக அறிவுக் குழுவினருடன் ஆலோசனையில் ஈடுபட்டிருந்த சி.டி.ரவியை 'இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் சந்தித்து, உரையாடியதில் இருந்து..

தென்னிந்தியாவில் முதல் முறையாக கர்நாடகாவில் ஆட்சியை பிடித்துவிட்டீர்கள். அண்டை மாநிலமான தமிழகத்தில் பணியாற்றுவது எப்படி இருக்கிறது?

கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு பூத் கமிட்டி உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை தொடங்கியவன் நான். மக்களோடு மக்களாக நின்று கடுமையான உழைத்த‌தால்தான் தேசிய செயலாளராக உயர்ந்துள்ளேன். அண்டை மாநிலமான தமிழகத்தைப் பற்றி நன்றாக தெரியும் என்பதால் என்னை தமிழக பொறுப்பாளராக நியமித்திருக்கிறார்கள். தமிழ் மொழியையும் பண்பாட்டையும் நன்றாக புரிந்து கொண்டு என்னால் துரிதமாக செயல்பட முடிகிறது.

தமிழர்களின் மண், மொழி, பண்பாடு, வரலாறு போன்ற உணர்வுப்பூர்வமான விஷயங்களை துல்லியமாக புரிந்து கொண்டு பணியாற்றுகிறேன். வேல் யாத்திரை, நம்ம ஊரு பொங்கல், பிரதமர் மோடியின் தமிழ் அடையாள முன்னெடுப்பு ஆகியவற்றுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள 70 ஆயிரம்பூத் கமிட்டிகளில் 40 ஆயிரம் பூத் கமிட்டிகளுக்கு நிர்வாகிகளை நியமித்துள்ளோம். அதில் பெரும்பாலானவை சிறப்பாக செயல்படுகின்றன. களத்தில் பிற கட்சிகளை காட்டிலும் பாஜக வேகமாக வளர்வதால் பிற‌ கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், நடிகர்கள், முன்னாள் நீதிபதிகள், முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என ஏராளமானோர் எங்கள் கட்சியில் இணைந்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும், பாஜக‌ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் இம்மாத இறுதிக்குள் தமிழகம் வருகிறார்கள். மோடியின் வருகைக்கு பின் தமிழகத்தின் தேர்தல் களம் முற்றிலும் மாறும். அதன் பிறகு பல்வேறு கட்சிகளை சேர்ந்த பெரிய தலைவர்கள் பாஜக.வை தேடி வருவார்கள். இன்னொரு பக்கம் ‌பூத் கமிட்டியில் கடுமையாக உழைக்கும் தொண்டன் காலப் போக்கில் தலைவனாக மாறும்போது, தமிழகத்தில் பாஜக பெரிய கட்சியாக மாறி இருக்கும். அப்போது கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் ஆட்சியை பிடிக்கும்.

2021 தேர்தலில் பாஜக.வின் பிரதான இலக்கு என்ன? எத்தகைய வியூகங்களை வகுத்திருக்கிறீர்கள்?

தமிழகத்தின் உள்ளூர் பிரச்சினைகள், மாவட்ட வாரியான மக்களின் நலன்களை‌ கண்டறிந்து அதற்காக பணியாற்றுமாறு மேலிடத் தலைவர்கள் அறிவுரை வழங்கி இருக்கிறார்கள். சாதி, மதம் என்பது சட்டத்துக்கும், மனித மாண்புக்கும் எதிரானவை என்றாலும், அவை தான் இந்திய சமூகத்தை இயக்குகின்றன. தேர்தல் அரசியலில் முக்கிய பங்காற்றுகின்றன. தமிழகத்தில் சாதி இன்னும் ஆழமாக ஊடுருவி எல்லா தளத்தில் தீவிரமாக செயல்படுகிறது.

அதனால் சாதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமோ, அவ்வாறு பயன்படுத்துகிறோம். அனைத்து சாதி தலைவர்களையும் எங்கள் கட்சியில் இணைத்துள்ளோம். பிற கட்சியினரை விட கூடுதல் முக்கியத்தை கொடுத்துள்ளோம். இன்று கூட ஒரு சாதி சங்கத்தினர் என்னை சந்தித்து, பிற கட்சிகளில் இருக்கும் தங்கள் சாதித் தலைவர்களை பாஜக.வில் இணைப்பதாக கூறினர். அதே வேளையில் சாதி, வட்டார தன்மையோடு மட்டும் இயங்காமல் ஒட்டுமொத்த தமிழக மக்களின் நலனுக்காகவும் இயங்குகிறோம். எனவே இந்த தேர்தலில் இரட்டை இலக்க எண்ணிக்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதை பிரதான இலக்காக வைத்துள்ளோம்.

ஆனால் பாஜக.வை தமிழகத்தில் காலூன்ற விடமாட்டோம் என திமுக.வினர் கூறுகின்றனரே?

திமுக பெயரை கேட்டாலே மக்கள் பயப்படுகிறார்கள். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பல கோடி ரூபாய் ஊழல் புரிவார்கள், அராஜகமாக செயல்படுவார்கள், சாதிக் கலவரத்தை தூண்டிவிடுவார்கள் என மக்கள் நினைக்கிறார்கள். எங்களை காலூன்ற விட மாட்டோம் என கூறும் திமுகவினர், நாங்கள் முன்னெடுத்த வேல் யாத்திரையை ஏன் காப்பி அடிக்கிறார்கள்? எங்களது வேல் யாத்திரையால் லட்சக்கணக்கானோர் வீடுகளில் வேல் பூஜை செய்ததை பார்த்து பயந்த ஸ்டாலின் இப்போது கையில் வேல் ஏந்தியுள்ளார். அவரது மனைவியும் மகனும் கோயில் கோயிலாக சுற்றுகிறார்கள். இத்தனை காலம் கடவுள் இல்லை என பேசிவிட்டு இப்போது தேர்தலுக்காக நாடகம் போடுகிறார்கள். திமுகவின் வேல் நாடக‌த்துக்கு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்.

ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என அறிவித்தது பாஜக.வுக்கு ஏமாற்றம்தானே? ஏனென்றால் ரஜினி அந்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு வரை பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக பாஜக ஏற்கவில்லையே?

அரசியலில் ஒவ்வொரு அசைவையும் சாதகமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ரஜினியின் அரசியல் வருகையை எதிர்பார்த்தோம். அவர் கடைசியில் உடல்நிலை காரணமாக கட்சி தொடங்கவில்லை என கூறிவிட்டதால் அதைப் பற்றி விரிவாக பேச விரும்பவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் இரு முறை தனி மெஜாரிட்டியுடன் வென்ற பாஜக.வுக்கு ரஜினியை வைத்து அரசியல் செய்ய‌ வேண்டிய அவசியம் இல்லை.

அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் பற்றிய அறிவிப்பு தாமதம் ஆகிறதே? அதிமுக‌வுடன் நீங்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டீர்களா? பாஜக.வுக்கு எத்தனை இடங்களை கேட்டுள்ளீர்கள்?

அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்கின்றன. இன்னும் பல புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது குறித்து விரைவில் அதிமுக முடிவெடுக்கும். அதிமுக.வுடன் நாங்கள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளோம். பாஜக எத்தனை இடங்களில் போட்டியிட வேண்டும் என்பதை விட எத்தனை இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம். 234 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவதாகவே நினைத்து பணியாற்றுமாறு நிர்வாகிகளிடம் சொல்லி இருக்கிறேன்.

கர்நாடகாவில் மஜத.வுடன் கூட்டணி ஆட்சியில் பங்கேற்றதை போல, அதிமுகவுடன் கூட்டணி ஆட்சியில் பங்கேற்பது குறித்து பேசப்பட்டதா?

ஆட்சியில் பங்கேற்பது குறித்து தேர்தலுக்கு பின்னரே முடிவெடுக்கப்படும். எங்கள் கூட்டணி வெற்றி பெற்றால், தமிழகத்தில் இதுவரை இல்லாத ஆட்சி முறையை கொண்டு வருவோம்.

டிடிவி தினகரன் டெல்லியில் பாஜக மேலிடத் தலைவர்களை சந்தித்ததாகவும் அதனால் சசிகலாவை இணைத்துக் கொள்ளுமாறு அதிமுக.வுக்கு பாஜக அழுத்தம் கொடுப்பதாகவும் தகவல்கள் வருகின்றனவே.

சசிகலாவை இணைத்துக் கொள்வதா, வேண்டாமா என்பது அதிமுக.வின் உட்கட்சி விவகாரம். அதில் நாங்கள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தலையிட மாட்டோம். அதிமுக - அமமுக இணைப்பு குறித்து அந்த கட்சிகள் தான் முடிவெடுக்க வேண்டும். சசிகலா விவகாரத்தில் அதிமுக என்ன முடிவு எடுக்கிறதோ அதை கூட்டணிக் கட்சி என்ற முறையில் நாங்கள் ஆதரிப்போம். இவ்வாறு பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x