Published : 09 Feb 2021 07:57 AM
Last Updated : 09 Feb 2021 07:57 AM

தீவிர அரசியலில் ஈடுபடுவேன் தொண்டர்களிடம் சசிகலா உறுதி 

ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி 2-வது சிப்காட்டில் உள்ள  மஹா பிரத்யங்கரா தேவி கோயிலில் அம்மனை வழிபட்டார் சசிகலா. அருகில் அவரது உறவினர் டாக்டர் வெங்கடேஷ்.

திருப்பத்தூர்

தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், விரைவில் மக்களை சந்திப்பேன், மீண்டும் ஆட்சியில் அமர அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என வாணியம் பாடியில் சசிகலா தெரிவித்தார். வாணியம்பாடி நெக்குந்தி சுங்கச்சாவடிக்கு சசிகலா வந்தபோது, அமமுக திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணி, ஜோலார்பேட்டை நகரச் செயலாளர் தென்னரசு, மாவட்டப் பொருளாளர் கண்ணபிரான் ஆகியோர் வரவேற்பு அளித்தனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் சசிகலா கூறும்போது, “தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன். அதிமுக அலுவலகத்துக்கு செல்வீர்களா என நிறைய பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று. தொண்டர்களின் உற்சாக வரவேற்பை கண்டு நெகிழ்ச்சி அடைகிறேன். தொண்டர்களின் அன்புக்கும், மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. புரட்சித்தலைவர் கூறியதைபோல, ‘அன்புக்கு நான் அடிமை, தமிழ் பண்புக்கும் நான் அடிமை, கொண்ட கொள்கைக்கும் நான் அடிமை, தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் என்றுமே நான் அடிமை’.

அடக்கு முறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அவசர அவசரமாக திறக்கப்பட்டது. அதன்பிறகு அதே அவசர கதியில் மூடப்பட்டது ஏன் என்பது தமிழக மக்களுக்கு தெரியும். எனது வாகனத்தில் அதிமுக கொடி பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சர்கள் போலீஸாரிடம் புகார் அளித்திருப்பது அவர்களது பயத்தை காட்டுகிறது.

அதிமுகவை கைப்பற்றுவீர்களா என சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை சோதனைகளை அதிமுக சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் 'பீனிக்ஸ்' பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

மீண்டும் ஆட்சியில் அமரக்கூடாது என ஒரு கூட்டம் தனியாக செயல்படுகிறது. அதை முறியடிக்க வேண்டும். மீண்டும் ஆட்சியில் அமர நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து
செயல்பட வேண்டும். வளர்க அதிமுக, புரட்சித் தலைவர் நாமம்வாழ்க, புரட்சித் தலைவி நாமம் வாழ்க’’ இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x