Published : 16 Nov 2015 06:41 PM
Last Updated : 16 Nov 2015 06:41 PM
ஒவ்வொரு முறையும் இயற்கை சீற்றத்தை எதிர்கொள்ளும் கடலூர் மாவட்டத்தில், வடலூரை அடுத்த மருவாய் அருகே நடு பரவனாற்றில் ஏற்படும் உடைப்பால் 10 கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைகள் பாதிப்புக்குள்ளாகின்றன.
வடலூர் நகரிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5.கி.மீ தொலைவில் உள்ளது மருவாய் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி வாலாஜா ஏரியும், வாலாஜா ஏரிக்கான நீர்வரத்து பாசன ஆறான பரவனாறும் மருவாய் கிராமம் வழியாகத் தான் செல்கிறது.மேலும் வாலாஜா ஏரி நிரம்பியதும் அதே பரவனாற்று வழியாகத் தான் பெருமாள் ஏரிக்கும் உபரி நீர் செல்கிறது. விருத்தாசலம், கருவேப்பிலங்குறிச்சி, கம்மாபுரம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையும், என்எல்சி 2-ம் சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரும் தான் பரவனாற்றின் நீராதாரங்கள்.
இந்த நிலையில் கடந்த 20 வருடங்களில் பெரும் மழையின் காரணமாக 3 முறை மருவாய் அருகே நடு பரவனாற்றில் ஏற்படும் உடைப்பு காரணமாக மருவாய், அரங்கமங்கலம், கல்குணம், பூதம்பாடி, கும்முடிமுளை, கொத்தவாச்சேரி, ஆடூர் அகரம், வரதராஜன்பேட்டை, கரைமேடு, அந்தராசிப்பேட்டை, பரதம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தும், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடிசைகளும், 5 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களும் பாதிப்புக்குள்ளாவது தொடர்ந்து நடைபெறுகிறது.
பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் ஆட்சியில் இருப்பவர்களும், எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் மருவாயை பார்வையிட்டு,பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக நிவாரணம் வழங்குவது வாடிக்கையாக இருக்கிறதே தவிர நிரந்தர தீர்வுக்கு யாரும் வழிகோலவில்லை வில்லை என்பது தான் வேதனை.
கடந்த 2005-ம் ஆண்டு ஏற்பட்ட பாதிப்பின் போது மருவாய் பகுதியில் சாலை அரித்துச் செல்லப்பட்டதுடன், விளைநிலங்களும் பாழானது. இதனால் வடலூர்-கும்பகோணம் இடையேயான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதா மருவாய்க்கு நேரில் வந்து பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியும், தீர்வு ஏற்படுத்துவதாகவும் உறுதியளித்தார். இவரைத் தொடர்ந்து திமுக தலைவரும் மருவாய்க்கு வந்தார். அதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வந்து சென்றனர்.
பின்னர் 2010-ம் ஆண்டு அதே பரவனாறு உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மருவாயில் பெரும் பாதிப்பு உருவானது. இதையடுத்து அப்போதைய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து பார்வையிட்டு நிவாரண உதவிகளை தொடக்கிவைத்துச் சென்றார்.
மீண்டும் 5 ஆண்டுகளுக்குப் பின் அதே மருவாய் பகுதியில் பரவனாறு உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.தற்போது தமிழக அமைச்சரவைக் குழு அவ்விடத்தைப் பார்வைட்டு நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது.திமுக பொருளாளர் ஸ்டாலினும், மற்ற அரசியல் கட்சிகளும் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனால் நிரந்தரத் தீர்வு தான் ஏற்படவில்லை.
இந்த நிலையில் வாலாஜா ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ராமானுஜம் கூறும்போது, ''பரவனாறு உடைப்பு ஏற்படுவது தொடர்கதையாகிவருகிறது. பாதிப்பு ஏற்படும்போதெல்லாம் ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் வந்து செல்கின்றனரே தவிர நிரந்தர தீர்வு ஏற்படுத்துவதில்லை.
பரவனாற்றில் உடைப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காராணம், நடு மற்றும் கீழ் பரவானாற்றில் தூர் வாரப்பட வேண்டும்.ஆற்றில் முளைத்துள்ள நாணல் செடிகொடிகளை அகற்றினால் நீர் வேகமெடுத்து பெருமாள் ஏரிக்கும்,அதைத்தொடர்ந்து கடலையும் வெள்ளநீர் சென்றடையும். தூர்வாரத பட்சத்தில் தண்ணீர் செல்ல வழியின்றி, விளை நிலங்களும், குடிசைகளும் பாதிப்புக்குள்ளாகும்.
மேலும் வாலாஜா ஏரி முதல் பெருமாள் ஏரி வரையிலான 10.கி.மீ வரை பரவனாற்றின் இரு கரைகளிலும் கான்கிரீட் சுவர் எழுப்பினால் வெள்ளநீரில் இருந்து விளை நிலங்களையும் குடியிருப்புப் பகுதிகளையும் காப்பாற்ற முடியும்.ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்களுடன் அதிகாரிகளும் புடை சூழ வருகின்றனர். காயம்பட்ட மருவாய்க்கு தற்காலிக மருந்திட்டுச் செல்கின்றனரே தவிர காயம் ஆறுவதற்கான நிரந்தரத் தீர்வு கண்டபாடில்லை'' என்றார்.
இது தொடர்பாக பொதுப்பணித்துறை வெள்ளாறு கோட்ட வடிநிலப்பகுதி பொறியாளர்கள் கூறும்போது, ''நீர் பரவி செல்லக்கூடியதால் தான் அந்த ஆற்றுக்கு பெயரே பரவனாறு என்று பெயர் வந்தது.மழைக்காலங்களில் சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீருடன், சுற்றுவட்டாரக் கிராமப் புறங்களில் பெய்யும் மழை சிறுசிறு ஓடைகள் வழியாக பரவனாற்றில் கலப்பதால், 2000 கனஅடி தண்ணீர் கூடுதலாக வரும். அப்போது அதைக் கட்டுப்படுத்தக் கூடிய அளவில் புதியத் திட்டம் வகுக்கப்படவேண்டும்'' என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT