Last Updated : 09 Feb, 2021 03:13 AM

 

Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

இலவச பேருந்து இல்லை - உணவில்லை - அரிசியில்லை: புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்கள் தவிப்பு

புதுச்சேரி

புதுச்சேரி, காரைக்காலில் அரசு பள்ளிகள் தொடங்கியுள்ள சூழலில் காலை, மதிய உணவு கரோனாவை காரணம் காட்டி தரப்படுவதில்லை. அக்குழந்தைகள் நெடுந்தொலைவிலிருந்து வர இலவச பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கான உணவு உறுதித் திட்டத்தில் தொடக்கத்தில் வழங்கப்பட்டு வந்த அரிசியும் நிறுத்தப்பட்டிருக்கிறது.

கரோனா தொற்று நாடெங்கும் தீவிரமாக பரவத் தொடங்கியதையடுத்து முன் தடுப்பு நடவடிக்கையாக, கடந்தாண்டு மார்ச் மாதம் இறுதியில் தமிழகத்தைப் போல் புதுச்சேரியிலும் அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டன. மத்திய் அரசு அறிவித்த ஊரடங்கு தளர்வுகளுக்குப் பின்னர் அக்டோபர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஐயம் தீர் வகுப்புகள் நடைபெற்றன.

கடந்த ஜனவரி 18-ம் தேதியில் இருந்து, 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை 9.30 மணியிலிருந்து மதியம் 12.30 மணிவரை பள்ளிகள் நடைபெற்று வருகின்றன. அரை நாள் தான் பள்ளி என்பதால் அவர்களுக்கான உணவையும் புதுச்சேரி அரசு தருவதில்லை. ஆனாலும், வகுப்புகள் முடிந்து இந்த மாணவர்கள் புற நகர்பகுதிக்கு பேருந்துகளைப் பிடித்துச் செல்வதற்கு மதியம் 3 மணி ஆகி விடுகிறது. அரசுப் பள்ளியில் ஏழ்மை நிலையில் பயிலும் இம்மாணவர்கள் பசியுடனே செல்லும் நிலை ஏற்பட் டிருக்கிறது

புதுச்சேரி கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் இதுதொடர்பாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில், புதுச்சேரியில் உள்ள ஒரு அரசு பள்ளி பெயரைக் குறிப்பிட்டு, இப்பிரச்சினையை பதிவிட்டிருக்கிறார்.

இதுபற்றி ஆசிரியர்கள் தரப்பில் விசாரித்தபோது, " புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார். இட்லி, சாம்பார், சட்னி, கேசரி என்று அறிவித்து தொடங்கிய திட்டம் அதன் பிறகு பள்ளி திறக்கும்போது செயல்படும் என்றார்கள். தற்போது, 1 முதல் 12-ம் வகுப்புகள் வரை தொடங்கிய பிறகும், திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.

அனைத்துப் பள்ளிகளையும் திறந்து விட்ட அரசு, விளிம்பு நிலை மாணவர்களின் உணவைப் பற்றியும், உயிரைப் பற்றியும் கவலைப்படவில்லை.

பள்ளிகளை மதியம் 12.30 மணிக்கு விடுகிறார்கள். மாணவர்களுக்கான இலவசப் பேருந்துகளையும் இன்னும் விடவில்லை. புற நகர் பகுதியில் இருந்து வரும் ஏழை மாணவர்கள் பேருந்துக்கு காசில்லாமல் தங்கள் பகுதிச் சேர்ந்தவர்கள் ஊர் திரும்பும் போது அவர்களது இரு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். பல மாணவர்கள் பசியுடன் செல்ல வேண்டிய சூழல் உள்ளது. உடனே பழையபடி இலவச பேருந்து விடுவதுடன், மதிய உணவையும் அளிக்க வேண்டும்" என்கின்றனர்.

இதுபற்றி கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடுவிடம் கேட்டதற்கு, "நாடு முழுக்க எங்குமே கரோனாவால் மதிய,காலை உணவுத்திட்டம் தொடங்கப்படவில்லை" என்றார்.

கரோனா காலத்தை கருத்தில் கொண்டு அரசு பள்ளி குழந்தைகளுக்கு உணவு உத்தரவாத திட்டம் என்ற பெயரில், ‘இலவச அரிசி, ரொக்கப் பணம் தரப்பட்டது’ அது தரப்படவில்லை. இதுபற்றி கேட்டதற்கு, “ முதல்கட்டமாக அளித்தோம். இரண்டாவது கட்டமாக அரிசி தர ஒப்புதல் கிடைத்துள்ளது. அடுத்த வாரம் தந்து விடுவோம்" என்றார். இலவச பேருந்து தொடர்பாக கேட்டதற்கு, "டெண்டர் கோரியுள்ளோம். அது நிறை வடைந்தபிறகுதான் நடைமுறைக்கு வரும்" என்றார்.

கருணாநிதி பெயரில் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி, கடந்தாண்டு நவம்பர் 15-ம் தேதி தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x