Last Updated : 09 Feb, 2021 03:13 AM

 

Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

ரங்கசாமியின் ‘தேர்தல் புறக்கணிப்பு’ அஸ்திரம் எடுபடுமா? - எதிர் முகாமில் இருந்து திமுக ஆதரவு: ஆளும் காங்கிரஸ் எதிர்ப்பு - பாஜக மவுனம்

புதுச்சேரி

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. புதுச்சேரியில் கடந்த நான்கே முக்கால் ஆண்டுகளில் மக்கள் பிரதிநிதிகளின் அதிகாரம் என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

“அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும், திறம்பட செயலாற்ற ‘மாநிலஅந்தஸ்து’ முக்கியம். இதைப் பெற ‘ நாம் அனைவரும் சேர்ந்து,குறிப்பாக ஆளும் காங்கிரஸூம் சேர்ந்து தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்று அறிவிக்கத் தயாரா?" என்று எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி கேட்டிருக்கிறார்.

புதுச்சேரியின் முக்கிய கட்சி தலைவர்கள் இக்கருத்து தொடர் பாக கூறியதாவது

மாநில காங் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன்:

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள ரங்கசாமி மாநில அந்துஸ் துக்காக தேர்தலை புறக்கணிக்க சொல்வது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. காங் கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை இதனை வறட்டு விவாதமாக பார்க்கிறோம். ஏனெனில் ரங்கசாமி கூடாரம் கலைந்து வருகிறது. அவர் கட்சியிலிருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். போட்டி யிடுவதற்கே வேட்பாளர்கள் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால்தான்அவர், ‘தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும்’ என்ற சாத்தியமில்லா ததை கூறி வருகிறார்.

சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி:

`புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும்’ என்ற நிலைப்பாட்டில் முன்னாள் முதல்வர் ரங்கசாமி உறுதியோடு கூறியுள்ளார். இதனைநாங்கள் வரவேற்கிறோம். இதற்காக, ‘தேர்தலைப் புறக்கணிக்கத் தயாரா?’ என கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அனைத்து கட்சிகளையும் அழைத்துத்தான் பேச வேண்டும். மாநில அந்தஸ்துக்காக குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரைச் சந்திக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்குத்தான் அதிகாரம் என்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தலாம். இதற்காக எங்களுடன் இணைந்து டெல்லியில் குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க ரங்கசாமி தயாரா?

பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன்:

கருத்து சொல்ல இயலாது. இவ்விஷயத்தில் பாஜகவை பொறுத்தவரை கட்சி மேலிடம்தான் முடிவு செய்ய முடியும்.

எதற்காக இந்த திடீர் முடிவு?

மாநில அந்தஸ்து தொடர்பான ரங்கசாமியின் இந்தப் பேச்சு, பாஜகவுடன் கூட்டணிக்கு நிபந்தனை விதிப்பதாகவே தெரிகிறது.

அதையும் தாண்டி தற்போது மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுகளுக்கு எதிரான வாக்குகளைப் பெற ‘மாநில அந்தஸ்து’ விஷயத்தை கையில் எடுத்து தனி அணி அமைக்க ரங்கசாமி முடிவு எடுத்துள்ளது தெரிகிறது. காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தியாக உள்ள திமுக உள்ளிட்ட கட்சிகளை ஒன்றிணைத்து தேர்தலை என்.ஆர்.காங்கிரஸ் சந்திக்க வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.

இதையெல்லாம் கணக்கில் கொண்டே ரங்கசாமி ‘மாநில அந்தஸ்து’ அஸ்திரத்தை மீண்டும் கூர்மைபடுத்தியிருப்பதாக தெரிகிறது. அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன்:

புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதில் அதிமுகவுக்கு மாற்று கருத்து கிடையாது. மாநில அந்தஸ்து அவசியம். இதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் புதுவைக்கு அதிகாரம் கிடைக்கும். தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று, புதுவை மக்களின் எண்ணத்தை மத்திய அரசிடம் பிரதிபலித்து மாநில அந்தஸ்து பெற வேண்டும்.

தெற்கு மாநில திமுக அமைப்பாளர் சிவா:

இது வரவேற்கக்கூடியதுதான். முன்பு பாஜகவுடன் கூட்டணி வைத்து, நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது என்.ஆர்.காங்கிரஸ். வெற்றியும் பெற்றது. அப்போது மாநில அந்தஸ்து பெறவே கூட்டணி அமைத்துள்ளதாக கூறினார். தற்போது வரையிலும், மாநில அந்தஸ்து தராத பாஜகவுடன் ரங்கசாமி கூட்டணியில் தொடர்கிறார். புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற போராட்டத்தை முன்னெடுக்கும் சரியான காலம் இது. அனைத்து கட்சியினரும் மாநில அந்தஸ்துக்காக தேர்தலை புறக் கணிப்பது எதிர்காலத்துக்கு நல்லது. அதை செய்யாதபட்சத்தில் மக்கள் தேர்வு செய்த அமைச்சரவை வேடிக்கைதான் பார்க்கும் நிலையும், தர்ணா, உண்ணாவிரதம் இருக்கும் நிலையும்தான் ஏற்படும். மாநில அந்துஸ்துக்காக அனைத்து கட்சியும் தேர்தலை புறக்கணிக்க முன்வந்தால், புதுவை மக்களின் நலனுக்காக கட்சித்தலைவர் ஸ்டாலின் அனுமதியுடன் திமுகவும் அதில் பங்கேற்கும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம்:

பாஜகவுடன் அரசியல் உறவு வைத்துக் கொண்டு ‘தேர்தலை புறக்கணிப்போம்’ என்பது முரண் பாடாக தெரிகிறது. ஆளுநர் மூலம் மாநில உரிமைகள் அனைத்தையும் பறிப்பது பாஜகதான். வெளிப் படையாக ரங்கசாமி தனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும். அப்படி சொன்னால் இதுபற்றிவிவாதிக்கலாம். இல்லாவிட்டால் அவரின் கருத்து முரண்பாடான துதான். முதலில் பாஜக தவறை சுட்டிகாட்டி, கூட்டணியில் இருந்து அவர் வெளியே வரட்டும். அதன்பிறகு பேசலாம்.

மார்க்சிஸ்ட் கம்யூ. பிரதேச செயலாளர் ராஜாங்கம்:

தேர்தல் புறக்கணிப்பு சரியான தீர்வல்ல. இது ஜனநாயகத்தையே பாதிக்கும். மாநில உரிமைகளை பாஜகவும், ஆளுநரும்,பறித்து வருகின்றனர். எந்த பிரச்சினையிலும் எதிர்கட்சித் தலைவர் ரங்கசாமி மாநில அந்தஸ்துக்கு தேர்தல் புறக்கணிப்பு என கூறுவது ஏமாற்றுவேலை. மாநில அந்தஸ்துக்காக அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மாநில அந்தஸ்து கேட்பது குழப்பத்தை ஏற்படுத்தும். முதலில் கூட்டணியிலிருந்து ரங்கசாமி வெளியேறி, மாநில உரிமைக்கான போராட்டத்தை முன்னெடுக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x