Published : 25 Nov 2015 03:16 PM
Last Updated : 25 Nov 2015 03:16 PM
திருக்கார்த்திகை தீபங்கள் உழவர்களுக்கு உதவும் உன்னத விளக்கு பொறியாக இருப்பதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். 'அன்று செய்தவை அர்த்தமுள்ளவை' என்பதற்கு திருக்கார்த்திகை தீபத்திருவிழா ஒரு எடுத்துக்காட்டு என்றும் சொல்கிறார்கள்.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் வீடுகள்தோறும் விளக்கேற்றும் பண்பாடு நம்முடையது. பல ஆண்டுகளுக்கு முன் வரை விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமப்புறங்களில், இம்மாதத்தில் கார்த்திகை விளக்குகள் எரியாத வீடுகளை காணமுடியாது. இப்போது அது வழக்கொழிந்து வருகிறது. கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் பெயரளவுக்கே தீபவிளக்குகளை வைக்கிறார்கள்.
ஆனால், கார்த்திகை மாதத்தில் விளக்குகளை வீடுகளில் வைப்பது விவசாயத்துக்கு உதவியாக இருந்திருக்கிறது. மேலும் வீடுகளுக்குள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகள் சஞ்சரிப்பதையும் தடுத்திருக்கிறது.
பல ஆண்டுகளுக்கு முன் தற்போதுள்ளபடி கொசு விரட்டிகளை பயன்படுத்தவில்லை. மின்சார விளக்குகளும் இருக்கவில்லை. இதனால் வீடுகளுக்கு வெளிச்சம் அளிக்க விளக்குகளை ஏற்றிவைத்திருக்கிறார்கள். அத்துடன் விவசாயத்துக்கு இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை விரட்டவும் இந்த நடைமுறை உதவியிருக்கிறது.
வேளாண் அதிகாரி தகவல்
இதுகுறித்து சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு.பாலசுப்பிரமணியன் கூறியதாவது:
உழவர் பெருமக்களுக்கு இந்த சமுதாயம் நன்றி தெரிவித்து, சிறிய உதவி செய்யும் சீரிய விழாதான் தீபத் திருவிழா. வழக்கமாக பனியும், மழையும் மிகுந்த ராபிப் பருவம் என்கிற பின்பருவம்தான் (பிசானம், தாளடி, சம்பா பருவம் என பல்வேறு பெயர்கள் இதற்கு உண்டு) பயிர்களில் பூச்சிதாக்குதல் மிகுந்த பருவம்.
பூச்சி ஒழிப்பு
அதுவும் வடகிழக்குப்பருவ மழையைத்தொடர்ந்து கூட்டுப்புழுக்களில் இருந்து தாய் அந்துப்பூச்சிகள் வெளிவரும். இவை முட்டையிட்டு, அவற்றில் இருந்து வெளிவரும் புழுக்களும், குஞ்சுகளும்தான் பயிர்களைத் தாக்கிச் சேதப்படுத்தும். பூச்சி தாக்குதலுக்கு மூல காரணமான தாய்ப்பூச்சிகளை விளக்கு வெளிச்சத்தால் கவர்ந்து அழித்து விட்டால், பூச்சி தாக்குதல் வெகுவாகக் குறைந்து விடும். இதைத்தான் திருக்கார்த்திகை தீபம் மூலம் சமுதாயம் செய்கிறது.
அதிலும் முன்னிரவு நேரத்தில்தான் பயிருக்குத் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே ஒருங்கிணைந்த பயிர்ப்பாதுகாப்பின் ஒரு பகுதியாக, உழவர்களுக்கு உதவும் விதமாக ஒட்டுமொத்த சமுதாயமே கார்த்திகை மாதத்தில் வீடுதோறும் வாயில்களில் விளக்கு வைக்கிறது.
சொக்கப்பனையின் நன்மை
அதுவும் திருக்கார்த்திகை திருநாளிலும், அதையடுத்த 2-ம் , 3-ம் கார்த்திகை நாட்களிலும் அதிக விளக்குகளை அலங்கரித்து வைப்பதால், விளக்கு வெளிச்சத்தில் முன்னிரவு நேரத்தில் இயங்கும் தீமைசெய்யும் பூச்சிகள் கவர்ந்து அழிக்கப்படுகின்றன. பெரிய அளவில் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க, திருக்கார்த்திகையன்று கோயில்களில் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன. விடுபட்ட பூச்சிகளையும் கவர்ந்து அழிக்க சிவன் கோயிலில் ஒருநாள், பெருமாள் கோயிலில் மறுநாள் என வெவ்வேறு நாட்களில் சொக்கப்பனைகள் கொளுத்தப்படுகின்றன.
தன்னலம் கருதாது, மண்ணுலுகம் முழுமைக்கும் உணவளிக்கும் உழவர்களுக்கு திருக்கார்த்திகைத் தீபத்திருநாள் மூலம் உதவி செய்து சமுதாயம் உவகை கொள்கிறது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT