Published : 08 Feb 2021 08:11 PM
Last Updated : 08 Feb 2021 08:11 PM
புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போடச் சுகாதாரப் பணியாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். முதல்கட்டமாக 24 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி என திட்டமிட்டு நாளொன்றுக்கு 800 பேர் வரை தடுப்பூசி போட முடிவு எடுத்தும் இதுவரை 3,601 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர். பலரும் தடுப்பூசி போட வர மறுப்பதால் சுகாதாரத் துறையினர் தவிக்கின்றனர்.
நாடு முதல்வதும் கரோனா தடுப்பூசி போடும் பணியைப் பிரதமர் மோடி கடந்த ஜனவரி 16-ம் தேதி தொடங்கி வைத்தார். புனே சீரம் இன்ஸ்டிடியூட் தயாரித்த கோவிஷீல்டு, ஹைதராபாத் பாரத் பயோடெக் தயாரித்த கோவேக்சின் ஆகிய கரோனா தடுப்பூசிகள் போட அனுமதி தரப்பட்டுள்ளது. புதுச்சேரிக்கு 17,500 கோவிஷீல்டு தடுப்பூசி பாட்டில்கள் வந்துள்ளன. புதுச்சேரியில் 8 மையங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது.
முதல்கட்டமாகப் புதுச்சேரியில் 24 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோருக்கு போடத் திட்டமிடப்பட்டுள்ளது. 8 மையங்களில் தலா 100 பேர் வீதம் 800 பேருக்குக் கரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மிகவும் குறைவானோரே ஊசி போட்டு வருகின்றனர்.
இதுபற்றிச் சுகாதாரத்துறை தரப்பில் விசாரித்தபோது, "இதுவரை சுகாதாரப் பணியாளர்களுக்கு 12 நாட்கள் தடுப்பூசி போட்டோம். மொத்தம் 3,557 பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளனர்.
முன்களப் பணியாளர்களுக்கு இதுவரை தடுப்பூசி போட்டதில் 44 பேர் போட்டுள்ளனர். நாள் ஒன்றுக்கு 800 பேர் வரை தடுப்பூசி போடத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் பலரும் வரவில்லை. போன் செய்து அழைத்தாலும் பலரும் வேண்டாம் என்று வர மறுக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிடுகின்றனர்.
காரைக்கால் பெண் கரோனாவுக்கு பலி
புதுவையில் நேற்று ஆயிரத்து 346 பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை நடத்தப்பட்டது. புதிதாக 26 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 39 ஆயிரத்து 318 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 ஆயிரத்து 354 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவை மாநிலத்தில் தற்போது 309 பேர் கரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் காரைக்கால் அரசு மருத்துவமனையில் 58 வயதுப் பெண் சிகிச்சைப் பலனின்றி இறந்தார். இதனால் புதுவை மாநிலத்தில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 655 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT