Published : 08 Feb 2021 01:34 PM
Last Updated : 08 Feb 2021 01:34 PM

மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு; ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் இன்று (பிப். 08) வெளியிட்ட அறிக்கை:

"சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திமுகவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிராக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் செயல்பட்டு வரும் மத்திய பாஜக அரசு, மண்டல் கமிஷன் தீர்ப்பின்படி இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசின் ஒரே ஒரு துறையில் கூட முழுமையாகச் செயல்படுத்தவில்லை.

பட்டியலின - பழங்குடியின மக்களின் இடஒதுக்கீட்டையும் புறக்கணித்து - மத்திய அரசின் துறைகளில், இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும், பட்டியலின - பழங்குடியினத்தவருக்கு இடமில்லை என்ற எழுதப்படாத உத்தரவினை வேகமாகச் செயல்படுத்தி வருவது நாட்டின் சமூகநீதிக் கட்டமைப்பையே உருக்குலைக்கும் செயலாகும்.

புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து, போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து, இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பாஜக தலைமையில் அமைந்திருக்கிறது என்பது, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு. இதன் அடுத்தகட்டமாகவே, தற்போது இணைச் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்கள் உள்ளிட்ட பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து ஆட்களை, அதுவும் பாஜக - ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தில் ஊறிப் போனவர்களை மத்திய அரசின் துறைகளுக்கு அழைத்து வந்து, எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க, பிற்படுத்தப்பட்ட சமுதாயம் என்று தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செய்வது மிகுந்த வேதனையளிக்கிறது.

தனியார் துறையிலிருந்து நியமனம் செய்யப்படும் போது இடஒதுக்கீட்டுக் கொள்கை தூக்கி எறியப்படும். அப்படி நியமிக்கப்படுவோர் அவர்களின் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அரசுத் துறைகளில் சேர்த்து விடுவார்கள்.

பத்து சதவீத இடஒதுக்கீடு போதாது என்று இப்படிக் குறுக்கு வழியிலும் இடஒதுக்கீட்டுக் கொள்கையைச் சீரழிக்க நடக்கும் இந்த முயற்சிகளைத் திமுக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது. இது கார்ப்பரேட் ஆட்சி என்பதால், பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்குத் தாரை வார்ப்பு என்று தொடங்கி, அது பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்தில், மத்திய அரசின் துறைகளையும் தனியார்மயமாக்கும் இந்த முடிவு அரசியல் சட்டத்திற்கே விரோதமானது.

அதுமட்டுமின்றி, மத்திய அரசு அலுவலகங்களில் தப்பித் தவறி பணியில் அமர்த்தப்பட்டுள்ள பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின அலுவலர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு உயர் பதவிகளை எட்டாக் கனியாக்கி, அனைத்திலும் முன்னேறிய வகுப்பினரும் கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டியவர்களும் ஆக்கிரமித்துக் கொள்வதற்கே வழி வகுக்கும்!

தேர்தலில் பொய்ப் பிரச்சாரம் செய்து, இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் வாக்குகளைப் பெற்ற மத்திய பாஜக அரசு இப்போது அவர்களைப் பழிவாங்கும் விதத்தில் செயல்பட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, மத்திய அரசுத் துறைகளில் இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் போன்ற பதவிகளுக்குத் தனியார் நிறுவனங்களில் இருந்து நியமனம் செய்யும் முடிவை உடனடியாக மத்திய பாஜக அரசு கைவிட வேண்டும் என்றும், அனைத்துத் துறைகளிலும் இதர பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியலின, பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடியைக் கேட்டுக் கொள்கிறேன். அதைச் செய்யத் தவறினால், வரலாறு நிச்சயம் மன்னிக்காது.

மத்திய அரசு நிர்வாகம் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமை என்பதை மத்திய பாஜக அரசு உணரும் நாள் வெகுதொலைவில் இல்லை. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும், எரிமலையுடன் விளையாடுவதற்கு ஒப்பானதாகும்.

எனவே, மத்திய பாஜக அரசு, தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனக் கருதினால், இதுகாறும் கடைப்பிடித்து வந்த அணுகுமுறையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் மட்டுமின்றி, சமூகநீதி காக்கப் போராடும் அனைவரது சார்பிலும் எச்சரிக்க விரும்புகிறேன்!".

இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x