Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

கட்சியைப் பார்த்து தள்ளுபடி செய்யவில்லை; விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்துதான் பயிர்க் கடனை தள்ளுபடி செய்தோம்: திருவள்ளூரில் விவசாயிகள், நெசவாளர்களுடனான கலந்துரையாடலில் முதல்வர் பழனிசாமி கருத்து

திருவள்ளூர்

எதிர்க்கட்சித் தலைவர் சொல்வதுபோல, கட்சியைப் பார்த்து விவசாயக் கடனை தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகளின் கஷ்டத்தை பார்த்து தள்ளுபடி செய்துள்ளோம் என்று திருவள்ளூரில் நடந்த விவசாயிகள், நெசவாளர்கள் உடனான கலந்துரையாடல் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், முதல்வர் பழனிசாமி, நேற்று 5-வது கட்ட பிரச்சார பயணத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் மேற்கொண்டார். ஆவடி தொகுதியில் திருவேற்காடு அடுத்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் அதிமுகவின் தகவல்தொழில்நுட்பப் பிரிவு, இளைஞர்,இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார். இதில் முதல்வர் பேசியதாவது:

அதிமுக ஜனநாயக அமைப்பு. ஆனால் திமுகவோ கார்ப்பரேட் கம்பெனி. வேண்டுமென்றே எதிர்க்கட்சியினர் தவறான செய்திகளை தகவல் தொழில்நுட்பம் மூலம்பரப்பி, அதிமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அதை நமது தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் முறியடிக்கவேண்டும்.

அதிமுகவின் இளைஞர் அணி இத் தேர்தலில் விழிப்புணர்வுடன் இருந்து எதிரிகளை வீழ்த்தி, நம்மை வெற்றி பெறச் செய்யவேண்டும்.

பொதுமக்கள் குடிநீர், சாலை, கழிவுநீர் பிரச்சினை குறித்து, வீட்டில் இருந்தபடியே செல்போன் மூலம் அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதற்காக, முதல்வரின் உதவி மையம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்வு மேலாண்மை திட்டத்தை இன்னும் ஒரு மாதத்தில் தொடங்க உள்ளேன். இந்த உதவி மைய எண் 1100 ஆகும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

இந்நிகழ்வில், அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், முன்னாள் எம்பிக்களான அரி, வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவள்ளூரில் பிரச்சாரம்

திருவள்ளூரில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் விவசாயிகள், நெசவாளர்களுடன் முதல்வர் நேற்று மாலை கலந்துரையாடினார். இதில், முதல்வர் பேசியதாவது:

நான் விவசாயி என்றால், ஸ்டாலின் கோபப்படுகிறார். ‘விவசாயிகள் எல்லாம் அதிமுகவினர். அதனால், விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’ என்கிறார். கட்சியைப் பார்த்து கடனை தள்ளுபடி செய்யவில்லை, கஷ்டத்தைபார்த்து தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்தால், விரைவாக பட்டா மாறுதல் செய்து தருமாறு வருவாய்த் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளுக்கு திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் வழங்கவேண்டிய ரூ.8.74 கோடியை உடனே வழங்க நேற்று உத்தரவிட்டுள்ளேன் நெசவாளர்களுக்கு தொடர்ந்து பசுமை வீடுகள் கட்டித் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெண்களுக்கு பாதுகாப்பு

திருவள்ளூர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் அம்பத்தூரில் நடந்த மகளிருடனான கலந்துரையாடலில் முதல்வர் பேசியபோது, ‘‘பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் அதிமுக அரசு, மகளிர் சுயஉதவிக் குழுவினர் ஏற்றம் பெற ரூ.81 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 14,985 மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளன. இந்தக் குழுக்கள் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,785 கோடி வங்கி இணைப்பு கடன் பெற்றுள்ளன’’ என்றார். இதில் அம்பத்தூர் எம்எல்ஏ அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பாடியநல்லூர் பகுதியிலும் மகளிர் உடனான கலந்துரையாடல் நிகழ்வில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.

முன்னதாக, சென்னை போரூர் சந்திப்பில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

ஸ்டாலின் ஊர் ஊராக சென்று ஒரு பெட்டி வைத்துக் கொள்கிறார். ‘உங்கள் பிரச்சினைகளை எல்லாம் பெட்டியில் போடுங்கள். நான் பூட்டி வைத்துக் கொள்கிறேன்’ என்கிறார். பூட்டி வைக்கவா மனு கொடுக்கிறார்கள். அதை எல்லாம் திறந்து படியுங்கள். சென்னை மேயராக, அமைச்சராக, துணை முதல்வராக இருந்தபோது மக்களுக்காக ஏதாவது செய்திருந் தால் இப்போது பெட்டி வைக்கஅவசியமே இல்லை. அப்போதுஎல்லாம் மக்களை மறந்து விட்டீர்கள். அதனால் இப்போதுமக்கள் உங்களை மறந்துவிட் டார்கள். தற்போது 100 நாட்களில் பிரச்சினைகளை தீர்க்கிறோம் என்று கூறுவது, மக்களை ஏமாற்ற ஸ்டாலின் நடத்தும் நாடகம்.

மக்களுக்கு தேவையான திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியதால்தான் 2016-ல் மீண்டும் எங்களை தேர்ந்தெடுத் தனர். தற்போதும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங் களும் கிடைப்பதால், 3-வது முறையாகவும் அதிமுக அரசை தேர்ந்தெடுப்பார்கள்.

அவர்கள் ஏறக்குறைய 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை, அதிகாரம் இல்லை. சாதாரண பசி அல்ல. அகோரப் பசியில் இருக்கிறார்கள். மக்கள் கவனமாக இருந்து தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிறைவாக மீஞ்சூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியமுதல்வர் பழனிசாமி, ‘‘வீட்டு மனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று உறுதி அளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x