Published : 08 Feb 2021 03:10 AM
Last Updated : 08 Feb 2021 03:10 AM

தொழிலாளர்கள் பற்றாக்குறையால் வைக்கோல் சுருணை தயாரிக்க இயந்திர பயன்பாடு அதிகரிப்பு

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் எச்சன அள்ளி கிராமத்தில், நெல் வயலில் அறுவடைக்குப் பின்னர் இயந்திரம் மூலம் வைக்கோலை சுருணைகளாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளி.

தருமபுரி

வேளாண் பணிகளுக்கான தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் தருமபுரி மாவட்டத்தின் சிறு கிராமங்கள் வரை நவீன வேளாண் இயந்திரங் களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

வேளாண் பணிகளுக்கான தொழிலாளர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு வேளாண் பணிகளை மேற்கொள்ள புதிதுபுதிதாக இயந்திரங்கள் அறிமுகம் ஆகிக் கொண்டே இருக்கின்றன. அந்த வரிசையில் நெல் வயல்களில் அறுவடைக்கு பின்னர் உலர்ந்த வைக்கோலை சிறிய அளவில் உருட்டிக்கொடுக்க, டிராக்டருடன் இணைத்து இயக்கப்படும் இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த இயந்திரம் வைக்கோலை நேர்த்தியாக, ஒரே அளவில் சுருட்டிக் கொடுக்கிறது. இவ்வாறு சுருட்டப்படும் வைக்கோல் சுருணைகள் வேறு இடங்களுக்கு எளிதாக எடுத்துச் செல்லவும், விவசாயி இருப்பு வைத்துக் கொள்ளவும் மிக வசதியான வசதியான வடிவில் உள்ளன. இவ்வகை இயந்திரங்கள் தஞ்சை மாவட்டம் போன்ற, அதிக பரப்பில் நெல் சாகுபடி நடக்கும் இடங்களில் தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது சிறு கிராமங்கள் வரை நெல் அறுவடைக்குப் பின்னர் வைக்கோலை சுருணைகளாக்கும் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதுபற்றி, பென்னாகரம் வட்டம் எச்சனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாலாஜி கூறியது:

வைக்கோலை விவசாயிகள் தங்களின் கால்நடைகளுக்கான தீவன தேவைகளுக்காக இருப்பு வைப்பர். கூம்பு வடிவ குவியல் உட்பட ஊருக்கு ஏற்ற நடைமுறைப்படி வைக்கோல் போன்ற தீவனங்கள் இருப்பு வைக்கப்படும். இதை கிராமங்களில் ‘போர்’ என்று அழைப்பார். இந்த தீவன போர் உரிய வடிவில் அமைக்காவிட்டால் சில வாரங்களுக்கு பின்னர் போர் சரிந்து விழுந்து விடும். அதேபோல, சில மாதங்களுக்கு பின்னர் போரின் உச்சிப் பகுதியில் பள்ளம் ஏற்பட்டு மழைநீர் உட்புகுந்து மொத்த தீவனமும் வீணாகி விடும். பாதிப்புகள் ஏற்படாத வகையில் போர் அமைக்கத் தெரிந்த தொழிலாளர்களும், விவசாயி களும் முதுமை காரணமாக இதுபோன்ற பணிகளில் தற்போது ஈடுபடுவதில்லை.

எனவே, நவீன நுட்பங்களைக் கொண்டு வைக்கோலை சுருணைகளாக்கி பாதுகாக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஒரு சுருணை தயாரிக்க ரூ.40 கட்டணம் செல வாகிறது. இருப்பினும், தற்கால சூழலில் வைக்கோலை இருப்பு வைக்க இதுவே எளிதான வழியாக இருப்பதால் விவசாயிகள் பலரும் இயந்திர முறைக்கு மாறி வருகிறோம்.இவ்வாறு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x