Last Updated : 07 Feb, 2021 07:20 PM

5  

Published : 07 Feb 2021 07:20 PM
Last Updated : 07 Feb 2021 07:20 PM

அதிமுக - பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேறும்: மத்திய அமைச்சர் வி.கே.சிங் தகவல்

மதுரை

அதிமுக - பாஜக கூட்டணியால் தமிழகம் முன்னேற்றம் அடையும் என மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் இணைப் பொறுப்பாளருமான வி.கே.சிங், மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்திய அரசின் பட்ஜெட் கரோனாவால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையை மீட்டெடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட்டில் தனிநபர்களுக்கு வருமான வரிச் சலுகை உள்பட எந்த சலுகையும் வழங்கப்படவில்லை என்கிறார்கள். நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தால் தனிநபர்களுக்கு தானாகவே பலன்கிடைக்கும்.

இந்த பட்ஜெட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதி, தொழில்துறை, சுகாதாரத்துறை, பாதுகாப்பு, பெண்கள் நலன் உள்பட அனைத்து துறையினருக்கும் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்பதால் எல்ஐசி மேம்படும்.

இந்தியா- இலங்கை இடையே ஏற்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தம் தற்போதும் தொடர்கிறது. இலங்கை அரசு இந்தியாவுடன் நட்புடன் உள்ளது. இந்தியாவின் முதலீடுகளை ஏற்றுக்கொள்கிறது. கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது தற்போது குறைந்துள்ளது. சில மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துவதாலும், எல்லை தண்டி மீன்பிடிப்பதாலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

இருப்பினும் இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு சமூக தீர்வு காணப்படுகிறது.

இந்திய - சீனா எல்லை வரைபடம் தவறுதலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளின் எல்லை சரியாக வரையறை செய்யப்படவில்லை. சீனா பல முறை இந்தியாவுக்குள் ஊடுறுவி உள்ளது.

சீனா 5 முறை இந்திய எல்லைக்குள் ஊடுறுவினால் இந்தியா 50 முறை சீனா எல்லைக்குள் ஊடுறுவியுள்ளது. ஆனால் இதை நாங்கள் வெளியில் சொல்வதில்லை.

சீனாவில் எல்லை மீறலை தடுக்க அவ்வப்போது பதிலடி கொடுத்து வருகிறோம். சீனாவின் செயலிகளுக்கு தடை விதிப்பது, பொருட்களை வாங்க மறுப்பது போன்று சீனா மீது பொருளாதார ரீதியான தாக்குதலை செய்து வருகிறோம்.

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. மத்திய அரசுடன் அதிமுக இணக்கமாக உள்ளது. தமிழகத்திலும் அதே நிலை தொடர்ந்தால் மாநிலத்திற்கு பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்ற முடியும்.

தமிழகத்தில் அதிகளவில் சாலைப்பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தில் அதிகளவில் சுங்க கட்டண வசூல் மையங்கள் செயல்படுகின்றன.

இவ்வாறு வி.கே.சிங் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x