Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
பார்ப்பவரை வசியப்படுத்தும் விந்தை மொழி ஓவியம். இக்கலையின் உன்னதம் கலை சார்ந்த பார்வையுடையவர்கள் மட்டுமின்றி, அரசியல் சார் அறிவுடை யோருக்கும் நன்றாய் தெரியும்.
எத்தனை டிஜிட்டல் சாதனங்கள் வந்தாலும், தேர்தல் நேரத்தில் அவற்றைப் பின்னுக்குத் தள்ளி, இன்னும் ஒய்யாரமாய் உட்கார்ந்திருப்பது சுவர் ஓவியங்களே..!
தேர்தல் ஆணையத்தின் கட்டுப் பாடுகள் இன்னும் தொடங்காத நிலையில், ஊருக்கு ஊர் இந்த சுவர் ஓவியங்கள் பட்டையை கிளப்பி வருகின்றன.
டிஜிட்டல் பேனரின் வருகையால், சுவர் விளம்பரத்திற்கான தேவை கடந்த சில ஆண்டுகளில் வெகுவாய் குறைந்தது. சென்னையில், இரு ஆண்டுகளுக்கு முன் டிஜிட்டல் பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஐ.டி பெண் ஊழியர் சுப உயிரிழந்தார். கடும் விமர்சனத்திற்கு ஆளான இச்சம்பவத்திற்குப் பின் டிஜிட்டல் பேனர் வைப்பதில் அரசு கட்டுப்பாடுகளை விதித்தது.
பேனர் வைக்க கட்டுப்பாடு இருப்பதால், மீண்டும் சுவர் விளம்பரத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர் அரசியல் கட்சியினர். கடந்த சில நாட்களில், இந்த விளம்பரத்திற்காக முக்கியப் பகுதிகளை பிடிப்பதில் சிறுசிறு சுவரடிச் சண்டையையும் நடந்து முடிந்திருக்கிறது.
ஆனாலும், மக்களின் பார்வையில் படும் எந்தச் சுவரையும் கட்சித் தொண்டர்கள் விட்டு வைப்பதில்லை. இதனால் கடலூர் மாவட்டத்தின் பல இடங்களில் சுவர்கள் தோறும் அபிமான தலைவர்கள், தங்கள் கட்சிச் சின்னங்களுடன் புதுப் பொலிவுடன் புன்னகைத்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தலைத் தாண்டி, தலைவர்களின் பிறந்த நாள் நிகழ்வுகள், முக்கியத் தலைவர்களின் சிறப்பு வருகை என முன்னைக் காட்டிலும் சுவர் விளம்பரங்கள் சூடு பிடித்திருக்கின்றன.
நெய்வேலி அருகே சுவர் விளம் பரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருந்த பண்ருட்டியைச் சேர்ந்த ஓவியர் சிவாவிடம் பேசினோம்…
“டிஜிட்டல் பேனர் தடையால் தொழில் பாதிக்கப்பட்டது. ஓட்டுநர் பணிக்குச் சென்றேன். கரோனா வந்து அதையும் காலி செய்தது. இப்போது தேர்தல் நேரம் என்பதால் சுவர் விளம்பரத்துக்காக அழைத்து வந்து விட்டார்கள். தேர்தல் மட்டுமல்ல, அதற்கு முன்னும் பின்னும் வரும் அரசியல் கட்சித் தலைவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தாலும் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக ஆர்டர் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. கட்சிக்காரர்கள் முன்பு போல், பெரிய அளவில் பேரம் பேசுவதில்லை. கேட்ட காசை உடனே தருகிறார்கள். அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம், தங்கள் தலைவர்களின் அழகு முகங்கள் அழகாய் தெரிய வேண்டும்; அதற்குப் பக்கத்தில் தங்கள் பெயர்களும் பெரிதாய் பளிச்சிட வேண்டும். அவ்வளவே!
இந்த முறை உயர்மட்ட தலைவர்கள் கூடுதல் சுறுசுறுப்பில் இருக்கிறார்கள். இதனால் நவம்பர் தொடக்கம் முதலே எங்களுக்கு நல்ல மாதிரி போகிறது” என்கிறார்.
தங்கள் தலைவர்களின் அழகு முகங்கள் அழகாய் தெரிய வேண்டும்; அதற்குப் பக்கத்தில் தங்கள் பெயர்களும் பெரிதாய் பளிச்சிட வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT