Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
கூட்டம் கூட்டுவதும், கூடியதை கலையாமல் கட்டுக்குள் வைத்திருப்பதும் அரசியல் நகர்வில் ஆகப்பெரிய கலை. இக்கலையில் கைதேர்ந்தவர்கள் மட்டுமே அரசியலில் அரியணை ஏறுகிறார்கள்.
கூடிய கூட்டமோ, கூட்டும் கூட்டமோகூட்டத்தை தக்க வைக்க சில பல செயல்களைச் செய்து பார்வையாளர்களை எப்போதுமே பரவசத்தில் வைத்திருக்க வேண்டியதிருக்கிறது. அதற்காகவே கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கட்சிகளின் முக்கிய நிகழ்வுகளில் குதிரை ஆட்டத்தை தற்போது கையில் எடுத்திருக்கின்றனர்.
முக்கியத் தலைவர்கள் வருவதற்கு முன், கூடியிருக்கும் கூட்டத்திற்கு மத்தியில் இந்த குதிரை ஆட்டம் களை கட்டுகிறது.
பளப்பளப்பான பட்டாடை, ஆபரணஅலங்காரம் என திருமண விழாவில்மணமகனை ஏற்றிக் கொண்டு தாரை தப்பட்டை பேண்டு வாத்தியங்களுக்கேற்ப ஆடியபடி வரும் அதே வெள்ளைக் குதிரை, இங்கே பிரச்சாரக் களத்தில், தனது அதிர வைக்கும் ஆட்டத்தால் அனைவரையும் கட்டிப் போட்டு விடுகிறது.
ஆட்டத்தில் மயங்கி, ஆவென பார்வையாளர்கள் இருக்க, முக்கியத் தலைவர்கள் வந்து முத்தாய்ப்பாக பேசுகிறார்கள்.விருத்தாசலம் காந்தி நகரில் வசிக்கும் கார்த்திக் என்பவர் கடந்த பத்தாண்டுகளாக இந்த அலங்கார குதிரை ஆட்டத் தொழிலைச் செய்து வருகிறார்.அண்மையில் ஒரு கழக நிகழ்ச்சிக்கு வந்தவரிடம் பேச்சுக் கொடுத்தோம். குதிரையை ஓரங்கட்டி விட்டு பேசினார்.
“கல்யாணத்துக்கு போய் வந்து, அழகா ஆட்டம் காட்டிட்டு இருந்தோம். கரேனாவால 8 மாதங்களா ஏகப்பட்ட பிடுங்கல். குதிரைக்கு கொள்ளு வாங்கவே காசு கிடையாது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மாறி வருது.
தேர்தல் வர்றதால, கட்சிக்காரங்க விரும்பி அழைச்சிட்டு போறாங்க. மக்களும் ஒரு வித்தியாசமான பொழுது போக்கா ரசிச்சிட்டு போறாங்க. இதனால நமக்கும் வருமானம்; அவங்களுக்கும் (அரசியல்வாதிகளுக்கும்) ஆதாயம்.
நொக்ரா, மார்வார், காட்டியவாடி, கத்தியாவார், வெள்ளைக் கட்டை, இங்கிலீஸ் பிரீட் என பல்வேறு ரக குதிரைங்க இருக்கு. தென்னிந்தியாவிலேயே மிக உயரமான, வெள்ளை நிற குதிரையா காட்டியவாடி குதிரை, தாளத்துக்கு தப்பாம ஆடும். வெள்ளை நிற ஆண் ‘நொக்ரா’ குதிரைங்கதான் எங்க ‘சாய்ஸ்’ அதிலும் ‘நொக்ரா’, பெரிய சத்தத்துக்கு கூட மிரளாமல் மிடுக்கா நின்னு ஆடி ஆர்ப்பரிக்கும். பெண் குதிரைகளுக்கு பேறுகால பிரச்சினை இருப்பதால், இந்த ஆட்டத்திற்கு ஆண் குதிரையையே தேர்ந்தெடுப்போம்” என்று கார்த்திக் சொல்ல, டிரம்ஸ் கலைஞர்களின் இசைக்கேற்ப சளைக்காமல் நடன மாடியது வெள்ளை நிறக் குதிரை.
அதை ஆவென வாய் பார்த்தபடி சுத்துப்பட்டு மக்கள் நிற்க, அங்கிருக்கும் மேடையில் கட்சியின் கொள்கைகள் முழங்குகின்றன. கலை சார் கிறக்க மும் மயக்கமுமாய் வசியப்பட்ட வாக்காளர் களுக்கு மத்தியில், வாக்குறுதிகளை வாரி வழங்குகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT