Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
மு.க.ஸ்டாலின் கூறினால் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து போட்டியிட தயாராக உள்ளதாகவும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தேனி மாவட்ட மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காணப்படும் என்று தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த பொதுத்தேர்தலில் இத்தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. பின்பு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி, பெரியகுளம் தொகுதியை திமுக கைப்பற்றியது. தற்போது சமபலத்துடன் இருந்தாலும் வரும் தேர்தலில் 4 தொகுதிகளிலும் வெற்றிபெற்றே தீர வேண்டும் என்ற நோக்கில் திமுக தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.
கடந்த தேர்தலின் போது திமுக விற்கு எதிர் அணியான அதிமுகவில் இருந்த தங்கதமிழ்ச்செல்வன் தற்போது திமுக அணிக்கு மாறியுள்ளார். நிர்வாக வசதிக்காக தேனி மாவட்ட திமுக தெற்கு, வடக்கு என பிரிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக இவர் உள்ளார்.
இவரின் பேச்சும், செயல்களும் எப்போதும் மாநில அளவிலான ஈர்ப்பை ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. தற்போதைய அதிமுக தலைமையை கடுமையாக விமர்சித்து வரும் இவர் இந்து தமிழ் திசை நாளிதழுக்காக அளித்த பிரத்யேக பேட்டியில் கூறிய தாவது:
தமிழக அரசு பாஜகவிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. முதல்வர், துணை முதல்வர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ஏராளமான ஊழல்களும் தவறுகளும் செய்துள்ளனர். இதற்கான ஆதாரம் பாஜகவிடம் உள்ளது. அதை வைத்துக் கொண்டே தமிழகத்திற்கு வேண்டாத பல திட்டங்களை மத்திய அரசு இங்கு செயல்படுத்தி வருகிறது. அதிமுக மாநில உரிமையை விட்டுக் கொடுத்து விட்டது. நீட், வேளாண் திருத்தச் சட்டம் போன்ற பலவற்றையும் உதாரணமாகச் சொல்ல முடியும்.
முக.ஸ்டாலின் கவர்னரிடம் கொடுத்த ஊழல் பட்டியல் மத்திய அரசிடமும் ஒன்று உள்ளது. அதை வைத்து அதிமுக தலைமையை மிரட்டி தமிழகத்தில் காலூன்ற பாஜக திட்டமிட்டு வருகிறது. ஓட்டளித்த மக்களுக்கு எந்த நன்மையும் இவர்கள் செய்யவில்லை. பொதுமக்களுக்கான வளர்ச்சித் திட்டங்களை எதுவும் செய்யாமல் மத்திய அரசு சொல்வதை செய்யும் அரசாகவே அதிமுக இருந்து வருகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டிடிவி.தினகரனிடம் இன்னமும் தொடர்பு வைத்துள்ளார்.
நான் எந்த தொகுதியில் போட்டி யிடுவேன் என்பதை இப்போது சொல்ல முடியாது. திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டால் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடுவேன். எந்த தொகுதி என்பது முக்கியமல்ல. வெற்றி என்பதுதான் எங்கள் நோக்கம்.
அதிமுக ஊழல் ஆட்சி செய்து வருவதால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர். கரோனாவின் போது வருமானம் இன்றி மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவிற்கு எதிரான மனோநிலைதான் தமிழகம் முழுவதும் உள்ளது. எனவே இம்முறை கண்டிப்பாக திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். கரோனா போன்ற பேரிடர் காலங்களில் எதிர்கட்சியான திமுக பல்வேறு உதவிகளையும், வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொண்டது. இது மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனியில் அதிருப்தி
தேனி மாவட்டத்தைப் பொறுத்தளவில் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. மாம்பழத் தொழிற்சாலை, குடிநீர் பிரச்னை என்று கொடுக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப் படவில்லை. வழக்கம் போல இந்த முறையும் பணத்தை கொடுத்து வெற்றி பெறலாம் என்ற நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இது முடியாது. தேனி மாவட்ட மக்கள் தற்போது கடும் அதிருப்தியில் உள்ளனர். ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தாலும் அதிமுகவிற்கு ஓட்டுப்போட மாட்டார்கள்.
கேரளாவில் ஓ.பன்னீர்செல்வம் பல ஆயிரம் கோடிக்கு சொத்து வாங்கியுள்ளார். இத்தகவலை மலையாள பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதுவரை இதற்கு எவ்வித பதிலும் அவர் கூறவில்லை. மொத்தத்தில் ஓட்டுப்போட்ட மக்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இவர்களோ தனி விமான பயணம், சொத்துக் குவிப்பு என்று திளைத்துக் கொண்டிருக்கின்றனர்.
வரும் தேர்தலுடன் இந்நிலை மாறும். திமுக ஆட்சிக்கு வந்ததும் மாவட்ட பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரச்னைகள் சரி செய்யப்படும். இதற்கு முன்னோட்டமாக மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் குறித்து கள ஆய்வு செய்து பிரச்னைகளை சரி செய்து வருகிறோம்.
குச்சனூர் சனீஸ்வரபகவான் கோயில் அருகே சுரபி நதியில் சாக்கடை கலப்பதாக புகார் வந்தது. நேரில் ஆய்வு செய்த போது இது உண்மை என்ற தெரிந்தது. வெற்றி பெற்றதும் இதுபோன்ற பிரச்னைகள் சரி செய்யப்படும். பொதுமக்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் நிரந்தர மற்றும் தொலைநோக்குத் திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT