Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM
கூட்டணியாக நின்றாலும், தனித்துப் போட்டி என்றாலும் தேர்தலை சந்திக்க தயார் என்ற நிலையில் திண்டுக்கல் மாவட்ட தே.மு.தி.க. நிர்வாகிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு மிகக்குறைந்த நாட்களே உள்ள நிலையில் தற்போதுள்ள கூட்டணிக் கட்சியான அதிமுகவுடன் இன்னமும் கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கவில்லை. விரைவில் பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என தேமுதிக தலைமை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் கட்சியின் நிலைப்பாடு முழுமை யடையாத நிலையில், திண்டுக்கல் மாவட்ட தேமுதிகவினர் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தேமுதிக செயலாளராக கார்த்திகேயன், மேற்கு மாவட்ட செயலாளராக பால சுப்பிரமணியன் ஆகியோர் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் தேர்தலுக்கு தயாராகும் விதமாக நிர்வாகிகளுடன் ஆலோசிப்பது, பூத் கமிட்டி அமைக்கும் பணி என பணிகளை தொடங்கியுள்ளனர்.
இரண்டு மாவட்ட செயலாளர்களுக்கும் ஏற்கனவே இரண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட அனுபவம் உள்ளவர்கள் என்பதால் உற்சாகத்துடன் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தேர்தலுக்கு தயார்படுத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் உள்ளதாக கூறும் தேமுதிக தலைமை, தேர்தல் நெருங்கி வரும்நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கு இன்னமும் அழைக்கவில்லை என ஆதங்கத்தில் உள்ளது. கூட்டணி அமையாவிட்டால் தனித்துப் போட்டியிடவும் தங்கள் கட்சியினரை தயார்படுத்தும்விதமாக அனைத்து மாவட்டங்களிலும் கட்சி நிர்வாகிகளை தேர்தல் ஆரம்பகட்ட பணிகளில் ஈடுபட முடுக்கிவிட்டுள்ளது.
அதிமுக உடன் கூட்டணி என்றால் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் ஒரு தொகுதியை கேட்பது, அதுவும் குறிப்பாக நிலக்கோட்டை, பழநி, வேடசந்தூர் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றைக் கேட்பது என முடிவு செய்துள்ளனர். தனித்துப் போட்டியிடுவது என கட்சித் தலைமை முடிவு செய்தால் அதற்கான வேட்பாளர் பெயர்களை கட்சித்தலைமைக்கு பரிந்துரைக்க தற்போதே தயாராகி ஏழு தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் குறித்த பட்டியல் தயாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் பாலசுப்பிரமணி, தனித்து, அதிமுக கூட்டணி என ஏற்கனவே மூன்று தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். கிழக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் இரண்டு சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். தனித்துப் போட்டி என்றால் இவர்கள் இருவரும் தேர்தல் களம் இறங்குவது உறுதி. கூட்டணி என்றால் இருவரில் ஒருவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தொகுதியில் சீட் வாங்கிக் கொடுக்க கட்சித்தலைமை முயற்சிக்கும் நிலை உள்ளது. அதிமுக கூட்டணியில் ஏற்கனவே தேமுதிக ஆத்தூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளது. இந்தமுறை தனித்துப்போட்டி என்றாலும், கூட்டணி என்றாலும் தேர்தலை சந்திக்க தயார்நிலையில் தேமுதிகவினர் உள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கட்சித்தலைமை உத்தரவின்படி தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறோம். தற்போதே நிர்வாகிகள் கூட்டம், பூத் கமிட்டி அமைப்பது என ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளோம். கூட்டணி குறித்து கட்சித்தலைமை முடிவு செய்யும். கூட்டணி அமைந்தால் திண்டுக்கல் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை கேட்டுப்பெற கட்சித் தலைமையை வலியுறுத்துவோம். தனித்துப்போட்டி என கட்சித்தலைமை முடிவெடுத்தால் அதற்கும் தயார் நிலையில் உள்ளோம். தற்போது எதையும் எதிர்பார்க்காமல் தேர்தல் பணியில் கவனம் செலுத்தி வருகிறோம். திண்டுக்கல் மாவட்ட தேமுதிகவினர் எதற்கும் தயாராக உள்ளனர், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT