Published : 06 Feb 2021 09:55 PM
Last Updated : 06 Feb 2021 09:55 PM
சசிகலாவுக்கும் தமிழக மக்களுக்கும் நம்பிக்கை துரோகம் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியை கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் முடித்துவிட்டு மாலை 5 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் வந்தார்.
அங்கு நெல்லை, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குனேரி, ராதாபுரம் ஆகிய 5 தொகுதிகளின் சார்பில் பொது மக்கள் கலந்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். இதனைத் தொடர்நது நெல்லை மாவட்ட பிரச்சினை குறித்த குறும்படம் ஒளிபரப்பானது.
பின்னர் பேசிய ஸ்டாலின், "இங்கு நடைபெறுவது நிகழ்ச்சி அல்ல. மாநாடு போல் இருக்கிறது. உங்களது குறைகளை மனுக்களாக நீங்கள் கொடுத்துள்ளீர்கள். கொடுத்த மனுவிற்கான ஒப்புதல் சீட்டையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
நீங்கள் வருவதற்கு முன்பு நுழைவு வாயிலில் புகார்களைப் பதிவு செய்து, மனுக்களைப் பதிவு செய்திருப்பீர்கள். பதிவு செய்ததற்கு மஞ்சள் சீட்டு கொடுத்திருப்பார்கள்.
அடையாள சீட்டில் நம்பர் இருக்கும். வெளியே போகும்போது வாங்கிச் செல்லுங்கள். தேர்தல் முடிந்ததும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் 100 நாட்களில் உங்கள் மனுவில் உள்ள குறைகள் தீர்க்கப்படும். இந்த மனுவிற்கான குறைகள் தீர்க்கப்படவில்லையென்றால் கோட்டைக்கு வந்து முதல்வர் அறைக்கு என்னிடம் வந்தே கேட்கலாம் என்றார்.
பின்னர் மக்களிடம் பெறப்பட்ட மனு உள்ள பெட்டியிலிருந்த மனுவினை எடுத்து ஒவ்வொருவராக 10 பேரை ஸ்டாலின் பேச அழைத்தார்.
ராதாபுரம் தொகுதியைச் சேர்ந்த ஒரு பெண் பேசுகையில் எங்கள் பகுதி மீனவர்கள் அதிகம் வசிக்கும் பகுதி என்றும் எனவே தூண்டில் வளைவு அமைத்து தரவேண்டுமென்றும் கூடங்குளம் அணு உலை. எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பல் வழக்குகள் போடப்பட்டதாகவும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டுமென்றார்.
இதற்கு பதிலளித்த ஸடாலின் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பொய் வழக்குகள் நீக்கப்படும் என்றார்.
நாங்குனேரியை சேரந்த ஒரு பெண் பேசுகையில் எங்கள் பகுதியில் வாழை சாகுபடி அதிகமாக உள்ளது. எனவே வாழையை கொண்டு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றும் மதிய உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்க வேண்டுமென்று பேசியபோது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் சிப்ஸ் தொழிற்சாலை அமைக்கம்படும் என்று ஸடாலின் உறுதியளித்தார்.
ஆண் சிங்கமாக நான் காவல் தலைமை அதிகாரியிடம் நேரில் சென்று, புகாரில் உண்மை இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று கூறினேன் ஆனால் இன்று முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு அவர் மீதான புகாரை சந்திக்க எதாவது துணிச்சல் உண்டா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை டெண்டரை அவரது உறவினருக்கு கொடுக்கிறார். இவரெல்லாம் தமிழக முதல்வர் என்று சொல்ல நான் வெட்கப்படுகிறேன்.
முதல்வர் மீதான ஊழல் புகாரை லஞ்ச ஒழிப்புத்துறை சரியாக விசாரிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினார் இல்லாவிட்டால் முதல்வர் பதவியில் இருந்திருக்க மாட்டார். ஸ்டே வாங்கி கொண்டு ஒரு ஸ்டேட்டையே ஆண்டு கொண்டிருக்கிறார் அவர் ஒரு ஸ்டேட் சிஎம் இல்லை, ஸ்டே சிஎம். எடப்பாடி பழனிசாமி.
பச்சை துண்டு விவசாயி அல்ல பச்சை துரோகி விவசாயி. அவர் மண்புழு போல் உருண்டு ஒருவர் காலை பிடித்து பதவி வாங்கினாரா இல்லையா? யார் காலை பிடித்து பதவி வாங்கினாரோ அவர் காலையே வாரி விட்டார் இன்னும் இரண்டு நாளில் என்னென்ன நடக்க போகிறதோ என்றார்.
யாருடைய காலில் ஊர்ந்து போய் பதவியைப் பெற்றாரோ அவரது காலையே வாரியவர். இன்னும் இரண்டு நாட்களில் என்னென்ன செய்திகள் வரப்போகிறது பாருங்கள். ஊர்வலம் என்கிறார்கள், தடை என்கிறார்கள். நினைவிடத்திற்குப் பூட்டுப் போட்டுவிட்டார்கள். இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதை வேடிக்கை பார்ப்போம். இப்படிப்பட்ட நம்பிக்கைத் துரோகத்தை சசிகலாவுக்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் செய்தவர், செய்து கொண்டு இருப்பவர் தான் பழனிசாமி. இந்த பச்சைத் துரோக பழனிசாமி கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பதற்கான தேர்தல் தான் இந்த தேர்தல்.
நிகழ்ச்சியில் ஞானதிரவியம் எம்.பி., எம்எல்ஏ.,க்கள் டிபிஎம்.மைதீன்கான், ஏ.எல்.எஸ்.லெட்சுமணன், முன்னாள் எம்எல்ஏக்கள் என்.மாலைராஜா, மு.அப்பாவு மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT