Published : 06 Feb 2021 07:40 PM
Last Updated : 06 Feb 2021 07:40 PM
உலகத் தமிழ் வர்த்தகச் சங்கத்தின் சார்பில் சென்னையில் மார்ச் 13-ம் தேதி இந்திய பாரம்பரிய மருந்து ஏற்றுமதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
கரோனா பேரிடர் காலத்தில் இந்திய பாரம்பரிய மருத்துவர்களின் சேவையானது முக்கிய இடத்தைப் பிடித்தது. அதுபோல நமது பாரம்பரிய மருந்து வகைகளும் கரோனா சிகிச்சையில் முக்கிய பங்காற்றின.
இத்தகைய நமது பாரம்பரிய இயற்கை மருத்துவத்தையும் மருந்துகளையும் உலகமயமாக்கும் விதமாக உலகத் தமிழ் வர்த்தக சங்கம் இந்திய பாரம்பரிய மருந்து ஏற்றுமதி கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து 'இந்து தமிழ் திசை'யிடம் பேசிய உலகத் தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வகுமார் கூறியதாவது;
''ஹோமியோபதி இயக்குநரகம், தேசிய சித்த மருத்துவம் மற்றும் மத்திய சித்த ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி மார்ச் 13-ம் தேதி இந்திய பாரம்பரிய மருந்து ஏற்றுமதி கருத்தரங்கத்தைச் சென்னையில் ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இந்தக் கருத்தரங்கில் மத்திய ஆயுஷ் செயலாளர், வர்த்தக அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர், தமிழக சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி மருத்துவர்கள் பயனடையும் வகையில் இந்தக் கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இதில், நமது பாரம்பரிய மருத்துவத்தை உள்ளடக்கிய மருந்து வகைகள் ஏற்றுமதி, வெளிநாடுகளில் சித்த மருத்துவர்களுக்குக் குவிந்து கிடக்கும் வேலைவாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது.
இந்தக் கருத்தரங்கில் அயல்நாட்டுத் தூதர்கள், துணைத் தூதர்கள், வர்த்தக ஆணையாளர்கள், துறை சார்ந்த சிறு முதலீட்டாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
தென்னிந்தியாவின் முன்னணி மருந்து நிறுவனங்கள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இந்தக் கருத்தரங்கில் அரங்கம் அமைத்துக் காட்சிப்படுத்த உள்ளன.
நமது இந்தியப் பாரம்பரிய மருந்து வகைகள் அனைத்துத் தரப்பு மக்களும் எளிதாகக் கிடைத்துப் பயன்பெறும் வகையில் இந்தக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.''
இவ்வாறு செல்வகுமார் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT