Published : 06 Feb 2021 07:33 PM
Last Updated : 06 Feb 2021 07:33 PM
மதுரை, திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மதுரை மல்லிகை சாகுபடி நடக்கிறது.
வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருப்பரங்குன்றம், திருமங்கலம், கல்லுப்பட்டி, செல்லம்பட்டி, உசிலம்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம் மற்றும் ராமநாதபுரம் பகுதிகளில் விவசாயிகள் அதிகளவு மல்லிகை சாகுபடி செய்துள்ளனர்.
குண்டு, குண்டாக கண்ணை பறிக்கும் வெள்ளை நிறம் கொண்ட மதுரை மல்லிகையின் மனமும், நிறமும் தமிழகத்தில் வேறு எங்கும் உற்பத்தியாகும் பூக்களில் இருக்காது. அதனால், உள்ளூர் சந்தைகள் முதல் உலக சந்தைகள் வரை மதுரை மல்லிகைக்கு பெரும் வரவேற்பு உண்டு.
ஆண்டுதோறும் மல்லிகை உற்பத்தி சீசன், பிப்ரவரி மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்தில் முடியும். கடந்த ஆண்டு இந்த சீசனில் கரோனா தொற்று பரவியதால் ஊரடங்கால்
பூக்கள் தேவை முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. அதனால், மதுரை மல்லிகை பூக்கள் சாகுபடி செய்திருந்த விவசாயிகள் செடிகளில் பூக்களை பறிக்காமலேயே விட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். ஏராளமான விவசாயிகள் செடிகளைப் பராமரிப்பதை கைவிட்டு மாற்று விவசாயத்திற்கு மாறினர்.
அதனால், தற்போது மதுரை மல்லிகை பூக்கள் வரத்து சந்தைகளில் மிக குறைவாக காணப்படுவதால் நிரந்தரமாகவே சந்தைகளில் மதுரை மல்லிகை விலை உச்சத்தில் இருக்கிறது.
சாதாரண மக்கள், மதுரை மல்லிகை பூக்களை வாங்க முடிவதில்லை. முகூர்த்த நாட்களில் சந்தைகளில் வரும் குறைவான பூக்களும் கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்கிறது.
மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரி ராமச்சந்திரன் கூறுகையில், ‘‘முன்பு நல்ல சீசன் நேரத்தில் மல்லிகைப்பூக்கள் 50 டன் வரை விற்பனைக்கு வரும்.
ஆனால், கடந்த வாரம் வரை வெறும் அரை டன் பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வந்தது. தற்போது 2 டன் வரத்தொடங்கியுள்ளது.
பற்றாக்குறையால் பூக்களுக்கு விலை அதிகரித்ததால் தற்போது விவசாயிகள் செடிகளை பராமரிக்க தொடங்கிவிட்டனர்.
அதனால், பூக்கள் வரத்து உயர்ந்து வருகிறது. ஆனால், இன்னும் பழைய நிலைக்கு திரும்ப கொஞ்ச காலம் பிடிக்கும். இந்த ஆண்டு ஒரளவு நல்ல மழை பெய்தது மல்லிகைப்பூ விவசாயிகளுக்கு அதிர்ஷ்டம், ’’ என்றார்.
இதுகுறித்து வேளாண் உயர் அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
கரோனா ஊரடங்கில் வருமானம் இல்லாமல் விவசாயிகளால் செடிகளுக்கு பயிர் பாதுகாப்பு செய்ய முடியவில்லை. மருந்துகள் தெளிக்கவில்லை. முறையாக தண்ணீர் பாய்ச்சவில்லை. மல்லிகைப் பூச்செடிகளை பொறுத்தவரையில் அடிக்கடி வெட்டி விட வேண்டும். வருமானம் இல்லாத வெறுப்பில் அதையும் விவசாயிகள் செய்யவில்லை.
ஒரு பூ காய்ந்து உதிர்ந்தால் அது செடிகளில் சத்துகளை அனைத்தையும் எடுத்துவிடும். அதனால், செடிகள் குறுகிப்போய் சக்தியிழந்துபோய்விட்டன.
அதனால், மல்லிகைப்பூ செடிகள் சாகுபடி பரப்பு குறைந்ததோடு பூக்கள் உற்பத்தியும் பல மடங்கு குறைந்துது. இதை உடனடியாக சரி செய்ய முடியாது.
மல்லிகை செடிகள் வைத்தால் அது ஒன்றரை வருஷம் கழித்துதான் பூக்களை பறித்து விவசாயிகள் விற்க முடியாது. வணிக ரீதியாக மகசூல் கிடைக்க 5, 6 ஆண்டுகள் வரை பிடித்து விடும். தற்போது மல்லிகைப்பூக்களில் ஏற்பட்டுள்ள உற்பத்தி இழப்பீடு சரி செய்ய குறைந்தது 3 ஆண்டுகளாகிவிடும்.
அதனால், கரோனாவுக்கு பிறகான இந்த காலம், மல்லிகை மட்டுமில்லாது ரோஜா, மல்லிகை, பிச்சிப்பூ விவசாயிகளுக்கு மிக சிரமமான சவாலானது. தற்போது கோடை வெயில் ஏற்பட தொடங்கும்.
இந்த காலத்தில் மல்லிகை செடிகளை பராமரிப்பது மிக கஷ்டம். ஜூனில் அடுத்த மழைக்காலம் தொடங்கும்போதுதான் மல்லிகை செடிகளை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர முடியும்.
விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதை விட, இது போன்ற விவசாயிகளை அடையாம் கண்டு அவர்களை அரசு காப்பாற்ற நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
அரசின் பெரும்பாலான கடன் திட்டங்கள் உண்மையான விவசாயிகளை சென்றடையவில்லை. அதனால், விவசாயிகளுக்கு விவசாயம் மேலான நம்பிக்கை குறைகிறது. அதிருப்தி வருகிறது.
இது ஏன் செய்ய வேண்டும் என விவசாயத்தை விட்டு வெளியேறுகின்றனர். இந்தியாவில் ஒரு நாளைக்கு 700 விவசாயிகள், விவசாயம் மீது அதிருப்தியடைந்து வெளியேறுகிறார்கள். இது எதிர்காலத்தில் பெரிய கெடுதலாகிவிடும்.
கரோனாவை வென்றெடுத்தவர்கள் மருத்துவதுறையினராக இருந்தாலும் உண்மையிலே அந்த காலக்கட்டத்தில் உணவு தேவையை பற்றாக்குறை ஏற்படாமல் செய்தவர்கள் விவசாயிகள். அதனால், கரோனாவை வென்றதில் விவசாயிகளுக்கு பெரும் பங்கும் இருக்கிறது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT