Published : 06 Feb 2021 05:12 PM
Last Updated : 06 Feb 2021 05:12 PM
தென்காசி மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. போதிய விளைச்சல் கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்தது. இதனால், அணைகள், குளங்கள், கிணறுகள் நிரம்பியதால் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர். கடந்த ஆண்டு பிசான பருவத்தில் சுமார் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி தொடர் மழை பெய்ததால் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் உளுந்து, பாசிப்பயறு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. சில இடங்களில் நெல் பயிரும் பாதிக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக வடகரை, கீழ்பிடாகை, பண்பொழி, புளியரை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் அறுவடைப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் விரைவில் நெல் அறுவடைப் பணிகள் தொடங்க உள்ளன.
இதுகுறித்து வடகரையைச் சேர்ந்த விவசாயி ஜாகிர் உசேன் கூறும்போது, “ஏக்கர் ஒன்றுக்கு நெல் சாகுபடி செய்ய 20 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. ஏக்கருக்கு சராசரியாக 75 கிலோ எடையுள்ள 25 மூட்டை நெல் மகசூல் கிடைக்கிறது. போதிய விளைச்சல் கிடைத்தால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படவில்லை.
நெல் கொள்முதல் நிலையங்களில் சன்ன ரக நெல் கிலோவுக்கு ரூ.19.58, மோட்டா ரக நெல் கிலோவுக்கு ரூ.19.18-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. முன்பு அடங்கல் மட்டும் கொள்முதல் நிலையங்களில் கேட்டார்கள். இப்போது கணினி பட்டாவும் கேட்கிறார்கள். முன்பு இருந்ததுபோல் அடங்கல் மட்டும் கேட்க வேண்டும்.
மேலும், பதர் இருக்கும் நெல்லை மட்டும் தூற்றி வாங்குவார்கள். ஆனால் இப்போது எல்லா நெல்லையும் இயந்திரத்தில் தூற்று சொல்கிறார்கள். இயந்திர அறுவடையின்போதே நெல்லை தூற்றித்தான் கொண்டு வருகிறார்கள். மீண்டும் நெல்லை தூற்றச் சொல்வதால் வேலை, செலவு அதிகமாகிறது. பதர் உள்ள நெல்லை மட்டும் தூற்றி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது நாளொன்றுக்கு 800 மூட்டை நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. வரும் நாட்களில் மொத்தமாக அறுவடை நடக்கும் என்பதால் நெல் மூட்டைகள் தேங்கும் நிலை ஏற்படும். எனவே, தினமும் ஆயிரம் மூட்டைக்கு மேல் கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் விவசாயி பெயரில் வியாபாரிகள் வந்து நூற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை இறக்கி வைக்கும் நிலை ஏற்படுகிறது.
இதனால், குறைவாக நெல் கொண்டு வரும் விவசாயிகள் நெல் விற்பனை செய்ய தாமதமாகிறது. எனவே, குறைந்த விலைக்கு வியாபாரிகளுக்கே விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள். எனவே, கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் ஆதிக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெரிய அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை கடந்த ஆண்டு 2400 ரூபாயாகவும், சிறிய இயந்திரத்துக்கு 1800 ரூபாயாகவும் இருந்தது. தற்போது பெரிய அறுவடை இயந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு வாடகை 3000 ரூபாயாகவும், சிறிய இயந்திரத்துக்கு வாடகை 2200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. அரசு மானியம் பெற்றுத்தால் அறுவடை இயந்திரங்கள் வாங்கியுள்ளனர். நிரந்தர வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT