Published : 06 Feb 2021 03:02 PM
Last Updated : 06 Feb 2021 03:02 PM

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.11.27 கோடியில் மறுசுழற்சி திட்டம்: தனியார் நிறுவனங்களுக்கே வழிகாட்டும் புதிய முறை

மதுரை 

மதுரை ஆவின் நிறுவனத்தில் ஒரு சொட்டு கழிவுநீர், புகை வெளியேறாமல் ஜீரோ சதவீதம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் ரூ.11.27 கோடியில் புது திட்டம் தொடங்குவதற்கான பணிகள் நடக்கிறது.

மதுரை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றிய( ஆவின்) நிறுவனம் அண்ணா நகரில் செயல்படுகிறது. இந்த நிறுவனம், கடந்த 1667ம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி, மதுரையில் நேரடியாக வந்து தொடங்கி வைத்த பாரம்பரியத்தை கொண்டது.

இங்கு உற்பத்தியாகும் பால் மற்றும் பால் பொருட்களில் எவ்விதமான ரசாயணப் பொருட்களும் கலக்காமல் இயற்கை முறையில் தயாரிக்கப்படுதால் சந்தையில் ஆவின் பொருட்களுக்கு எப்போதுமே வரவேற்பு உள்ளது.

ஒரு நாளைக்கு செலவுபோக ரூ.10 லட்சம் நிகர லாபத்தில் இந்நிறுவனம் இயங்குகிறது. மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து இந்நிறுவனம் தினமும் 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்கிறது.

இந்த பால் ஆவின் நிறுவனத்தில் உள்ள மத்திய கூட்டுறவு பண்ணைக்கு கொண்டு வரப்பட்டு அது ஆய்வுக்குட்படுத்தப்பட்டு 1 லட்சத்து 75 ஆயிரம் லிட்டர் பால் செறிவூட்டப்பட்டு 1 லிட்டர், 1/2 லிட்டர், 1/4 லிட்டர் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

மீதமுள்ள பாலில் நெய், வெண்ணை, பால் பவுடர், தயிர், மோர், பாதாம் மில்க், பால்கோவா, மைசூர்பா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

இங்கு தயாரிக்கப்படும் நெய், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு லட்டு தயாரிக்க செல்வது சிறப்பு. மேலும், பிஹார், டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் நாடு முழுவதும் பால் பொருட்கள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது ஆவின் நிறுவனத்தில் வெளியாகும் கழிவுநீர், புகையால் சுற்றுச்சூழல் மாசு அடைவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் ஜீரோ சதவீதம் புகை, கழிவு நீர் வெளியேறாமல் இருக்க ஆவின் நிறுவனத்தில் ரூ.11. 27 கோடியில் மறுசுழற்சி பயோலஜிக்கல் திட்டத்திற்கான பணிகள் தொடங்கி நடக்கின்றன.

இதுகுறித்து ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஆவின் நிறுவனத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிக்க, மற்ற தேவைகளுக்கு 5 லட்சம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. பயன்பாட்டிற்கு பிறகு, 4 லட்சம் லிட்டர் கழிவு நீராக வெளியேறுகிறது.

அதை நாங்கள் சுத்திகரித்து வெளியேற்றுகிறோம். ஆனால், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஒரு சொட்டு தண்ணீரை கூட வெளியேற்றக்கூடாது என்றும், அதை நீங்களே மறுசுழற்சி செய்து பயன்படுத்த 2023ம் ஆண்டிற்கு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் நோட்டீஸ் விட்டது.

அதனால், ரூ.11 கோடியில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த பயோலஜிக்கல் ட்ரீட்மெண்ட் ப்ளாண்ட் அமைக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் வெளியேறும் 4 லட்சம் லிட்டர் கழிவு நீரை மீண்டும் பயாலஜிக்கல் ட்ரீட்மெண்ட் அடிப்படையில் 3 மெகா ஆர்வோ பிளாண்ட்களில் சுத்திகரித்து மறுசுழற்சி செய்து பாலை பதப்படுத்தவும், மிஷின்களை கழுவவும் சூடுநீராக பயன்படுத்தப்படுகிறது.

அதுபோக கழிப்பிட அறைகள், தளங்கள் சுத்தம் செய்வதற்கு பயன்படுத்த உள்ளோம். இதுபோக மீதமாகும் 40 சதவீதம் தண்ணீரை கட்டிடங்கள் இல்லாத பகுதியில் தோட்டம் அமைத்து அதற்கு விடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த ஆயில் எரிக்கும்போது அதிலிருந்து வெளியேறும் புகை சுற்றுச்சூழலை மாசுப்படுத்துவதாக கூறுகின்றனர். திடக்கழிவுகளை பவுடராக்கி உரமாக விற்பனை செய்ய உள்ளோம்.

இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஜீரோ சதவீதம் கழிவுநீர், புகை வெளியேறாமல் மற்ற நிறுவனங்களுக்கு ஆவின் முன்மாதிரி நிறுவனமாக செயல்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x