Published : 06 Feb 2021 01:47 PM
Last Updated : 06 Feb 2021 01:47 PM

டிடிவி தினகரன் பேட்டி: டிஜிபியிடம் புகார் அளித்த அமைச்சர்கள்

சென்னை

சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்தும் விவகாரம் குறித்து புகார் அளித்த அதிமுக அவைத்தலைவர், அமைச்சர்கள், அதுகுறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டி குறித்து இன்று மீண்டும் டிஜிபியை திரிபாதியை சந்தித்தனர்.

அதிமுக பொதுச் செயலாளராக சிறைச் சென்ற சசிகலா பின்னர் ஓபிஎஸ்-இபிஎஸ் இணைப்பால் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்சும், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்சும் துணை ஒருங்கிணைப்பாளர்கள், 11 பேர் கொண்ட வழிக்காட்டுக்குழு அமைக்கப்பட்டது. டிடிவி தினகரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு அமமுகவை தொடங்கினார். தன்னை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் சிறையிலிருந்து ஜன.27 அன்று விடுதலையான சசிகலா கரோனா தொற்று காரணமாக ஓய்வுக்குப்பின் பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்புகிறார். மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய சசிகலா ஜெயலலிதா பயன்படுத்திய ப்ராடோ காரை பயன்படுத்தினார். அதில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன் அதிலென்ன தவறு அவர் அதிமுக பொதுச் செயலாளர்தானே, இன்னும் அதிமுகவில்தானே உள்ளார் என்று பதில் கேள்வி எழுப்பினார்.

சசிகலா அதிமுகவை மீட்க சட்டப்போராட்டம் நடத்துவார் என டிடிவி தினகரன் தெரிவித்தார். சசிகலா அதிமுகவில் இல்லை, அவர்களை அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என அதிமுக தலைவர்கள் கூறிவருகின்றனர். சசிகலா சென்னை திரும்பும் நிலையில் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என டிஜிபியிடம் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, அமைச்சர்கள் ஜெயக்குமார், சிவி.சண்முகம், தங்கமணி உள்ளிட்டோர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து பதிலளித்த டிடிவி தினகரன் டிஜிபி, கமிஷனர் முப்படை தளபதிகளிடம் புகார் கொடுத்தாலும் ஒன்று நடக்காது என்று தெரிவித்தார். இந்நிலையில் சசிகலாவை வரவேற்று தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. முதல்வர் அமைச்சர்கள் வசிக்கும் க்ரீன்வேஸ் சாலையிலேயே ஒட்டியுள்ளனர்.

சசிகலா வருகையை ஒட்டிய சூழ்நிலையை எதிர்க்கொள்ள இன்று மாலை மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடக்க ஓபிஎஸ்-இபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் அதிமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் இன்று மீண்டும் டிஜிபியை சந்தித்து புகார் அளித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x