Published : 09 Nov 2015 03:07 PM
Last Updated : 09 Nov 2015 03:07 PM
ராமேசுவரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கழிவுகள் கலப்பதால் திங்கட்கிழமை பல்லாயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்து கிடந்ததா? என பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அச்சமடைந்துள்ளனர்.
ராமேசுவரம் தீவு கடற்பகுதியில் திமிங்கலம், சுறா, டால்பின், கடல் பசு, ஆமைகள், கடல் குதிரை என பல்வேறு வகையான அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. அதுபோல இந்தியாவில் தொன்மை வாய்ந்ததும் புகழ்பெற்ற புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடினால் பாவங்கள் போகும் என தீர்த்தமாடுகின்றனர்.
ஆனால் ராமநாதசுவாமி கோவிலை சுற்றி உள்ள தனியார் விடுதிகள், மடங்கள், மண்டபங்கள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் செப்டிக் டேங்க் இணைப்புகள் நேரடியாக அக்னி தீர்த்தக் கடலை ஒட்டியப் பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இதில் வரும் கழிவுகள் அக்னிதீர்த்தக் கடலில் கலப்பதால் பாவங்களை போக்க நீராடும் பக்தர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை உருவாகியுள்ளது.
இப்பகுதியில் காணப்படும் கடல்வாழ் உயிரினங்களை அச்சுறுத்தும் இந்த நச்சுக்கழிவுகளால் கடல் நீர் நஞ்சாகி வருகிறது. இதனால் அக்னி தீர்த்தக் கடற்கரையில் கடந்த 10 மாதங்களில் இரண்டு டால்பின்கள், 5 கடல் பன்றிகள், 3 பச்சை நிற ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியது.
இந்நிலையில் திங்கட்கிழமை அக்னி தீர்த்தக் கடற்கரையில் காரல், கெழுது ரக மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. இதனை பார்த்த பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ராமேசுவரம் நாட்டுப் படகு மீனவர்கள் கூறியதாவது,
தமிழக அரசின் தடையை மீறி விசைப்படகு மீனவர்கள் இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்து வருகின்றனர். இதில் சிக்கும் சிறிய மீன்களை மீண்டும் கடலில் தூக்கியெறிந்துவிடுவார்கள். அவ்வாறு தூக்கியெறியப்பட்ட மீன்கள் இறந்து இருக்கவேண்டும் அல்லது அக்னி தீர்த்தக் கடற்கரையில் கலக்கும் கழிவுகளால் பாதிக்கப்பட்டு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT