Published : 06 Feb 2021 12:46 PM
Last Updated : 06 Feb 2021 12:46 PM
எழுவர் விடுதலை விவகாரத்தில், இரண்டாவது முறையாக அமைச்சரவை தீர்மானித்து அனுப்பினால் ஆளுநர் வேறு வழியின்றி ஏற்றுக்கொண்டே தீரவேண்டும் என, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (பிப். 06) வெளியிட்ட அறிக்கை:
"பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை சம்பந்தமாக தமிழ்நாடு அரசின் அமைச்சரவை முடிவெடுத்து, ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது. அதன்பின், கடந்த இரண்டு ஆண்டுகளுக்குமேல் அதனைக் கிடப்பில் ஆளுநர் வைத்திருந்தார். உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பேரறிவாளன் சார்பில் போடப்பட்ட வழக்கில், ஆளுநர் தெளிவாக முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. முதலில் 3 நாள்கள் என்றும், அடுத்து ஒரு வாரம் என்றும் உச்ச நீதிமன்றம் அவகாசம் கொடுத்தது. மீண்டும் தமிழக ஆளுநர் காலதாமதம் செய்த நிலையில், எதிர்க்கட்சியினரும், சட்ட வல்லுநர்களும் காலதாமதம் சட்ட விரோதம் என்று தெளிவுபடுத்தி, ஊடகங்களில் சட்ட விளக்கமாக வெளிவந்தன!
தமிழக ஆளுநரின் செயல் நியாயம்தானா?
'கடந்த ஜனவரி 25 ஆம் தேதியே மத்திய உள்துறைக்குக் கடிதம் எழுதிவிட்டேன்' என்று கூறும் தமிழக ஆளுநர், அதற்குப் பிறகு தன்னைச் சந்தித்த முதல்வரிடமும் இதுபற்றிக் கூறினாரா? கூறிய பிறகும் நல்ல முடிவு வரும் என்று 'நீட்' தேர்வில் மத்திய அரசு கைவிரித்ததை கடைசிவரை வெளியிடாமல், உயர் நீதிமன்றத்தில் தகவல் வெளியானதுபோல், இதுவும் நடந்ததா? இல்லை என்றால் ஆளுநர் - முதல்வர் சந்திப்பின்போது, முதல்வரின் கடிதத்தை ஆளுநர் வாங்கி வைத்துக் கொண்டது நியாயம்தானா? என்ற கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 141 ஆம் பிரிவு கூற்றுப்படியும், 144 ஆம் பிரிவு கூற்றின்படியும், 161 ஆம் பிரிவு கூற்றின்படியும் உச்ச நீதிமன்றத்தின் சட்டம் என்பது அனைவரையும், அனைத்து நீதிகளையும் கட்டுப்படுத்தும் ஒன்று என்ற நிலை உள்ளபோது, ஆளுநர் எப்படி இப்போது 'எனக்கு அதிகாரம் இல்லை; குடியரசுத் தலைவருக்குத்தான் உண்டு' என்ற பதிலைத் தருவது என்பது உச்ச நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்தின்கீழ் வரவேண்டிய ஒன்றாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 141, 144, 161 பிரிவுகள்!
அரசியலமைப்புச் சட்டத்தின் 141 ஆம் பிரிவு கூற்றுப்படியும், 144 ஆம் பிரிவு கூற்றின்படியும், 161 ஆம் பிரிவு கூற்றின்படியும் அதனையொட்டி அரசியலமைப்புச் சட்ட அமர்வு (Constitutional Bench) 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வழங்கியுள்ள யூனியன் ஆஃப் இந்தியா எதிர் சிறீஅரன் என்ற தீர்ப்பின்படியும், இந்தக் கருணை மனுவை ஏற்பது என்ற உரிமையும், முடிவும் குடியரசுத் தலைவருக்கு எந்த அளவு உண்டோ, அதே அளவு ஆளுநருக்கும் உண்டு.
கருணை - விடுதலை - மன்னிப்புபற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆளுநருக்குமேல் குடியரசுத் தலைவர் என்ற மேல்முறையீட்டுக்கான நிலை சட்டப்படிக்கு இல்லை. ஆளுநரிடமோ, குடியரசுத் தலைவரிடமோ இரண்டு பேருக்கும் சமமாக அந்த உரிமை, அதிகாரம் உண்டு.
இதன்படி ஆளுநரே முடிவு செய்து விடுதலை செய்ய முழு அதிகாரம் படைத்தவராவார்.
சட்டப்படி உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்!
உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கில் தெளிவாக ஆணை கிட்டிய பிறகு, ஆளுநர் இப்படி கூறுவது, புறந்தள்ளுவது அரசியலமைப்புச் சட்டப்படி தவறானது, பொறுப்பைத் தட்டிக் கழிப்பது நியாயமல்ல என்பதோடு, சட்டப்படியும் உச்ச நீதிமன்றத்தை அவமதிப்பதாகும்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரணை செய்த ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் கே.டி.தாமஸ், ஆளுநரின் செயல் ஏற்புடையது அல்ல என்று ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இங்கே சுட்டிக்காட்டப்பட வேண்டும்.
அரசியலமைப்புச் சட்டம் 141 ஆம் பிரிவு கூற்றுப்படியும், 144 ஆம் பிரிவு கூற்றின்படியும், 161 ஆம் பிரிவு கூற்றின்படியும் பார்த்தால், உச்ச நீதிமன்றத்தின் ஆணை செயல்படுத்தப்பட வேண்டிய ஒன்று என்பதையும், விடுதலை செய்வதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை என்பதையும் முற்றாக மாற்றி, குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் என்று ஆளுநர் கூறுவதை சட்டப்படியும், நியாயப்படியும் ஏற்கப்படக் கூடிய ஒன்றல்ல.
சட்ட விளக்கத்துடன் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு இரண்டாம் முறையாக அனுப்பிட வேண்டும்
தமிழக அதிமுக அரசு உள்ளபடியே இவர்கள் விடுதலையில் உண்மையான அக்கறையும், கவலையும் உடையவர்கள்தான் என்று காட்ட விரும்பினால், மீண்டும் அமைச்சரவையைக் கூட்டி, தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, மறுபடியும் சட்ட விளக்கத்துடன் ஆளுநருக்கு இரண்டாம் முறையாக அனுப்பிடவேண்டும்.
அதை அவர் மறுக்கமுடியாது. அரசியலமைப்புச் சட்ட அமர்வு தெளிவுபடுத்தியுள்ள கருத்து விளக்கம், 141, 144, 161 ஆகிய பிரிவுகளின் தன்மை இவற்றை அத்தீர்மானத்தின் உள்ளடக்கமாக அமைத்தல் முக்கியம்.
அரசியலமைப்புச் சட்டப்படி தமிழ்நாடு அரசு செயற்பாடு உள்ளது என்பதை அதன்மூலம் சுட்டிக்காட்டி, இந்த அரசியல் பிழைத்தோருக்கு அறங்கூற்றம் என்ற நிலையிலிருந்து விடுபடலாம்! இதனை தமிழக அரசு செய்ய வேண்டும்!
மாநில அரசின் உரிமையையும் இதன்மூலம் மீட்டெடுக்கும் நல்ல முயற்சி!
இல்லையென்றால், இது ஓர் அரசியல் வித்தைதான் என்பதை நாடே விளங்கிக் கொண்டுவிடும் என்பதை தமிழக ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டு, மாநில அரசின் உரிமையையும் இதன்மூலம் மீட்டெடுக்கும் நல்ல முயற்சியில் இறங்கத் தயாராகட்டும்!
மாநில அரசின் கவுரவம், உரிமைப் பிரச்சினை!
இது இப்போது பேரறிவாளன் பிரச்சினை என்பதைவிட, மாநில அரசின் கவுரவம், உரிமைப் பிரச்சினை என்ற சரியான பார்வையும், புரிதலும் தமிழக ஆளுங்கட்சிக்கு வந்தாக வேண்டும். இப்போது இல்லை என்றால், இனி எப்போதும் இல்லை!".
இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT