Last Updated : 26 Jan, 2014 10:09 AM

 

Published : 26 Jan 2014 10:09 AM
Last Updated : 26 Jan 2014 10:09 AM

‘தே.மு.தி.க இல்லாத பா.ஜ.க கூட்டணிக்குத் தயார்’: பாமக திடீர் நிபந்தனை

தேமுதிக இல்லாமல் பாஜக கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணியில் இணைய விரும்புவதாக பாமக தரப்பில் நிபந்தனை போடுவதாகச் சொல்லப்படுகிறது.

1991 சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியையும் 1996 தேர்தலில் 4 தொகுதிகளையும் தனித்து நின்றே வென்றெடுத்தது பாமக. 1998 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்த அதிமுக கூட்டணியில் இடம்பிடித்த பாமக, 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் பிறகு, பாமக இடம் பிடித்த கூட்டணியே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிவாகை சூடியது. இதனால், நாங்கள் இருக்கும் கூட்டணிதான் வெற்றிக் கூட்டணி என மார்தட்டியது பாமக. இதை வைத்தே அந்தக் கட்சி கில்லாடியாய் பேரம் பேசவும் செய்தது.

எனினும், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 7 தொகுதிகளிலுமே மண்ணைக் கவ்வியது பாமக. அந்தத் தேர்தலில் புதிய வரவான தேமுதிக-வின் வாக்கு வங்கி தமிழக அரசியல் களத்தில் புதியதொரு பரிமாணத்தைத் தந்தது. இதையடுத்து, பாமக-வை ஓரேயடியாக ஒதுக்கித் தள்ளிய திராவிடக் கட்சிகள் தேமுதிக-வை வட்டமிட ஆரம்பித்தன. இதனால் பாமகவுக்கு மவுசு குறைந்து பேரம் பேசும் சக்தியையும் இழந்தது. இப்போதும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி அரசியல் தேமுதிக-வை மையம் கொண்டே சுழல்கிறது. பாமக முகாம் காத்தாடிக் கிடக்கிறது.

தேர்தலில் தோற்றுப்போன புதிதில் இனி, திராவிடக் கட்சிகளோடும் தேசியக் கட்சிகளோடும் கூட்டணி வைக்க மாட்டோம்’ என உறக்கச் சொன்னது பாமக. இப்போது அந்த நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ‘திராவிடக் கட்சிகளோடு கூட்டணி இல்லை’ என்ற முடிவுக்கு வந்திருப்பதாகச் சொல்பவர்கள், தேமுதிக-வை கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் பாஜக கூட்டணியில் சேருவதற்கு பாமக தயாராகிவிட்டது என்கிறார்கள்.

திமுக, அதிமுக-வுடன் இனி கூட்டணி அமைப்பது தங்களது அரசியல் எதிர்காலத்தை பாதிக் கும். அதேபோல் தேமுதிக இருக்கும் அணியில் சேர்ந்தால் தங்களை வைத்து அவர்களுக்கு கிடைக்கும் வளர்ச்சியும் தங்க ளுக்கு பாதிப்பாகலாம் என்று கணக்குப் போடுகிறதாம் பாமக. இத்தகையை முன்னெச்சரிக்கை யோடுதான் தேமுதிக இல்லாத பாஜக கூட்டணி என நிபந்தனை விதிப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தேமுதிகவும் தங்க ளது கூட்டணிக்கு வந்தால் கூடுதல் பலம் என கணக்குப் போடும் பாஜக, விஜயகாந்த் முடிவுக்காக காத்திருக்கிறது. பாஜக கூட்டணியில் பாமக இடம் பிடிக்குமா இல்லையா என்பது தேமுதிக மாநாட்டுக்குப் பிறகுதான் தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x