Published : 05 Feb 2021 09:51 PM
Last Updated : 05 Feb 2021 09:51 PM
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் சாயர்பும் அருகே நட்டாத்தி ஊராட்சி பட்டாண்டிவிளை பிரதான சாலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைகேட்கும் தேர்தல் பிரசாரம் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்தார்.
திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், நிகழ்ச்சியில் பங்கேற்று, இப்பகுதி மக்கள் குறைகளைத் தீர்க்கக் கோரி அளித்த மனுக்களைப் பெற்றுக் கொண்டு, அவர்களிடம் நேரிலும் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:
அதிமுக ஆட்சி இன்னும் மூன்று மாதத்தில் முடியப்போகிறது. உண்மையான மக்கள் ஆட்சியை இன்னும் மூன்றே மாதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள். அதிமுக ஆட்சி முடியப் போகிறது என்பதில் நம்மை விட அதிமுகவினர் தான் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்.
அதனால் தான் கடைசி நேரத்தில் எதையாவது செய்யலாம் என்று துடியாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அணையப் போகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பதுபோல விளம்பர வெளிச்சம் மூலம் தன்னை உயர்வாக காட்டிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
இன்று காலை ஓர் அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிட்டுள்ளார். அதாவது கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கியுள்ள கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
கூட்டுறவு கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கூறியபோது செய்யாதவர், உயர்நீதிமன்றம் சொன்னபோது ரத்து செய்யாதவர், உச்சநீதிமன்றத்துக்கு சென்று ரத்து செய்ய மாட்டோம் என வாதிட்ட பழனிசாமி இன்று ரத்து செய்ய என்ன காரணம்.
திமுக ஆட்சி அமைந்ததும் நாங்கள் ரத்து செய்வோம் என்று கடந்த இரண்டு மாத காலமாக நான் சொல்லி வருகிறேன். அதனால் வேறு வழி இல்லாமல் பழனிசாமி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விவசாயிகளுக்கு நன்மை செய்வதற்காக அவர் ரத்து செய்யவில்லை. தேர்தல் சுயநலத்துக்காக அவர் ரத்து செய்துள்ளார் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.
திமுக என்ன சொல்கிறதோ, இந்த ஸ்டாலின் என்ன சொல்கிறேனோ அதை அப்படியே பழனிசாமி செய்துவருகிறார். 7 பேர் விடுதலையை வலியுறுத்தி நாங்கள் ஆளுநரை சந்தித்தோம். உடனடியாக அவரும் சென்று சந்தித்தார். ஆனால் சந்தித்தாரே தவிர ஆளுநரை தமிழக அரசு முறையாக வலியுறுத்தவில்லை. அதனால் ஆளுநர் இன்று கைவிரித்து விட்டார். என்னால் எதுவும் செய்ய முடியாது என்று ஆளுநர் முடிவெடுத்து டெல்லிக்கு அனுப்பிய பிறகு ஆளுநரை சந்தித்து நாடகமாடி உள்ளார்,
இதுபோன்ற நாடகங்களை தான் நீட் விவகாரத்திலும் அவர் நடத்தினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைத்தோம். அதனை குடியரசுத்தலைவர் திருப்பி அனுப்பி விட்டார். அவர் திருப்பி அனுப்பியதை கூட வெளியில் செல்லாமல் இருந்தவர்தான் பழனிசாமி.
அதேபோலத்தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையை ஆளுநர் நிராகரித்து, அதையும் மறைத்துள்ளார். இத்தகைய பொய் நாடகத்தை நித்தமும் நடத்தி வருகிறார்.
எல்லா வகையிலும் தமிழகத்தை வளர்த்து விட்டோம் என்கிறார் பழனிசாமி. திமுக ஆட்சியில் தனிநபர் வருமானம், இந்திய அளவிலான வருமானத்தை விட 50 சதவீதம் அதிகம். தென்மாநில தனிநபர் வருமானத்தில் தமிழகம் முதலிடம். அந்த அளவில் வைத்து இருந்தோம் .ஆனால் இன்று தமிழகம் பிந்திவிட்டது. இதுதான் அதிமுக நடத்தும் ஆட்சி. திமுக ஆட்சியில் 21. 50 லட்சம் ஹெக்டேர் பரப்பில் நெல் பயிரிடப்பட்ட.து அதிமுக ஆட்சியில் 18.75 லட்சம் ஹெக்டேராக குறைந்துவிட்டது. இதுதான் விவசாயி ஆளக்கூடிய ஆட்சியா.
கடந்த 10 ஆண்டு காலத்தில் அரசின் மூலமாக அடைய வேண்டிய பலனை மக்கள் அடையவில்லை. ஊழல் மற்றும் விலைவாசி ஆகிய இரண்டும் தான் இந்த ஆட்சியில் வளர்ந்துள்ளன.. மக்கள் இழந்துள்ள சலுகைகளை மீட்டு தருவதற்காகவே 100 நாட்களில் தீர்வு என்று கூறியுள்ளேன்.
அதிமுக அரசு செய்ய தவறியதை செய்ய மறுத்ததை திமுக அரசு செய்யும், நம்புங்கள், உங்கள் நம்பிக்கையை நிச்சயம் நாங்கள் காப்பாற்றுவோம் அதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றார் ஸ்டாலின் . ௐட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT